அத்துமீறிய போலீசை அடித்துத் துவைத்த கராத்தே பெண்

ஹரியாணா மாநிலம் ரோடக்கில் பணியாற்றும் போக்குவரத்துக் காவலர் யாசீன். 21 வயதுப் பெண்மணி மீது பாலியல் தாக்குதல் நடத்த முற்பட்டபோது அந்தப் பெண் ஒரு கராத்தே சாம்பியன் என்று அவருக்குத் தெரியாது.

'கராத்தே சாம்பியன்

பட மூலாதாரம், Sat Singh

கடந்த வியாழக்கிழமை இரவு எட்டு மணியளவில் ஒரு ஆட்டோவில் தனியாகப் பயணித்த நேகா ஜங்ரா என்ற பெண்ணிடம், சீருடை அணியாமல் இருந்த அவர் அத்துமீற முயன்றபோது, நேகா அந்தக் காவலரை நையப் புடைத்ததுடன் அவரை இழுத்துச் சென்று மகளிர் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தார்.

நேகா அவரை இழுத்து வருவதைக் கண்ட இரு பெண் காவலர்கள் யாசீனை மீட்க முயன்றனர். எனினும் அவர் மீது தவறு இருந்ததை அறிந்ததும் பின்வாங்கினர்.

"நான் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை கராத்தே பயிற்சி மேற்கொள்வேன். வீடு திரும்ப நான் ஏறிய அதே ஆட்டோவில் அவரும் ஏறினார். அப்போது அந்த நபர் சீருடையோ, பெயர் வில்லையோ அணியவில்லை. முதலில் என் செல்பேசி எண்ணை அவர் கேட்டார். அதற்கு நான் காரணம் கேட்க, என்னிடம் நண்பராக விரும்புவதாகக் கூறினார். நான் அதற்கு மறுத்துவிட்டேன்," என்று கூறினார் நேகா.

மேற்கொண்டு கூறிய அவர் "எனினும் எனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து, அத்துமீற முயன்றதால் நான் அவரைத் தாக்கினேன். எங்கள் உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு வண்டியை ஓட்டச் சொன்னேன்," என்றார்.

பட மூலாதாரம், Sat Singh

படக்குறிப்பு,

தான் வென்ற பதக்கங்களை காட்டும் நேகா மற்றும் அவரது தந்தை

அப்போது யாசீனின் வேலைக்கு சிக்கல் உண்டாகும் என்பதால் பிரச்சனையை விட்டுவிடுமாறு மூன்று காவலர்கள் நேகாவிடம் கூறினர். அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுனிதா தேவியும், நேகா அந்தக் காவலரை அவமானப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

தனது தந்தையை அந்த இடத்துக்கு உடனடியாக வருமாறு நேகா செல்பேசி மூலம் கூறியுள்ளார். அவர் வரும் வரை யாசீன் தன்னை விட்டுவிடும்படி தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருந்ததாக கூறுகிறார் நேகா.

இதற்கிடையில், யாசீன் மற்றும் அவரது அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துக்கொண்டார் நேகா.

கட்டுமானத் தொழிலாளியான நேகாவின் தந்தை சுரேஷ் குமார் காவல் நிலையம் வந்த பின்னும், பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றே கூறியுள்ளார் சுனிதா தேவி. ஆனால், சுரேஷ் குமார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

பட மூலாதாரம், Sat Singh

படக்குறிப்பு,

நேகா செல்பேசியில் படம் எடுத்த யாசீனின் அடையாள அட்டை

"மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையான நான் இதை எதிர்க்காவிட்டால், வேறு யார் கேட்பார்கள்," என்கிறார் அவர்.

ஹரியாணா மாநில அளவில் நடந்த கராத்தே போட்டிகளில் தங்கம் வென்றுள்ள நேகா, 2017 பிப்ரவரியில் கோவாவில் நடந்த ஒரு தேசிய அளவிலான போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.

அந்த மகளிர் காவல் நிலையத்தை பிபிசி தொடர்புகொண்டபோது, அந்த சம்பவம் நடந்தது உண்மை என்றும் நேகா புகார் எதையும் பதியவில்லை என்றும் சுனிதா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையன்று யாசீன் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: