நாளிதழ்களில் இன்று: 'தகிக்கும் தமிழ்நாடு - ரெயில்களை நடுவழியில் மறித்து போராட்டம்'

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - 'ரெயில்களை நடுவழியில் மறித்து போராட்டம்'

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரயில்களை நடுவழியில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை facebook/kaveriurimai/

அந்த நாளிதழ், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. நேற்று காலை திருச்சி-தஞ்சை ரயில் வழித்தடத்தில் சோளகம்பட்டிக்கும், அய்யனாபுரத்துக்கும் இடையில் நடுவழியில் தண்டவாளத்தில் அமர்ந்த காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அந்த வழியாக திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பாசஞ்சர் ரயிலை மறித்து போராடினர். இதேபோல் சிதம்பரத்தில், காரைக்காலில் இருந்து பெங்களூரு செல்லும் ரயிலையும், சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலையும் மறித்த 43 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நீரேற்று பாசன சங்க கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 170 பேரும், நாமக்கல் அருகே கீரம்பூரில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்." என்று விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

தி இந்து (தமிழ்) - 'காவிரி: மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்`

படத்தின் காப்புரிமை Getty Images

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார் என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக புகார் தெரிவித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. சசிகலா தரப்பினரின் குறுக்கு விசாரணைக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன். செப்டம்பர் 27-ம் தேதி காவிரி விவகாரம் குறித்து மருத்துவமனையிலேயே 2 மணி நேரம் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். நீதிமன்றத்தில் எவ்வாறு வாதாடுவது, எப்படி மத்திய அரசை வலியுறுத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்" என்று அவர் கூறியதாக விவரிக்கிறது இச்செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'இந்தி எதிர்ப்பு பேரணி போல காவிரி உரிமை பேரணியும் வெல்லும்'

படத்தின் காப்புரிமை twitter/mkstalin

1938ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு பேரணி போல, இந்த காவிரி உரிமை பேரணியும் வெல்லும் என்று முக்கொம்புவில் பேரணியை தொடங்கிய தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். மேலும் கடலூரில் இந்த பேரணி முடியும் போது காவிரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு எட்டப்பட்டிருக்கும் என்று அவர் கூறியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - 'சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியான விவகாரம்: மூவர் கைது`

சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்பு பொருளாதார தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்தில் டெல்லி போலீஸார் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியரையும், இரண்டு பள்ளி ஊழியர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்: ராகேஷ் குமார் (பொருளாதார ஆசிரியர்); அமித் குமார் (அலுவலக எழுத்தர்); அசோக் குமார் (அலுவலக உதவியாளர்).

இந்த மூவரும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள உனாவில் உள்ள டி.ஏ.வி நூற்றாண்டு பள்ளியில் பணியாற்றுகிறார்கள்.

தினமணி - 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள்'

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய வண்ண சீருடையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சீருடைகளை மாணவர்கள் தங்களது சொந்த செலவிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினமணி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை twitter/KASengottaiyan

"தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே வகையான சீருடைகள் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிக் கூடங்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடைகளை தேர்வு செய்துள்ளன. இதனால் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் வெவ்வேறு விதமான சீருடைகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையை மாற்ற, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஒரே விதமான சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து 9 , 10-ஆம் வகுப்பு படிப்போருக்கு ஒரே விதமான சீருடையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வித்தியாசமான மற்றொரு வகையான சீருடையும் மாற்றி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது." என்கிறது அந்த நாளிதழ்.

'பிராவோ': வெற்றியுடன் தொடங்கியது சிஎஸ்கே

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி "த்ரில்' வெற்றி கண்டது என்கிறது தினமணி நாளிதழ்.

ஒரு கட்டத்தில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை, டுவைன் பிராவோவின் அதிரடி பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை நோக்கி முன்னேறியது. இதன்மூலமாக, 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த சீசனில் களம் கண்டுள்ள சென்னை அணி, வெற்றியுடன் தனது ஐபிஎல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: