வேலை நேரம், ஊதியம்: பெண் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் #BBCShe

பத்திரிகைத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான சவால்களையும் அவர்களின் நிலையையும் பற்றி ஆராயும் இந்தக் கட்டுரை, #BBCShe பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியாகிறது.

ஜலந்தர் நகர் அளவில் சிறியதாக இருந்தாலும், அங்கிருக்கும் இளம்பெண்களின் கனவுகள் பெரியவை. BBCSheக்காக தோபா கல்லூரி ஊடகவியல் மாணவிகளிடம் பிபிசி பேசியது.

22-23 வயதேயான இந்த இளம்பெண்கள் பிரச்சனைகள் பற்றி ஆழமான புரிதல்கள் கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண மனிதர் ஏன் தீவிரவாதியாக மாறுகிறார்? வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவரின் நிலைமை என்னவாக இருக்கும்? இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள அவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

படித்துக் கொண்டே இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பத்திரிகைகளிலும், வலைத்தளங்களிலும் பணிபுரியும் இவர்களுக்கு மகளிர் தொடர்பான செய்திகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

ஜலந்தரில் பல ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தாலும், பஞ்சாபி மொழி பத்திரிகைகளின் கோட்டையாகவே அந்நகரம் கருதப்படுகிறது. இங்கு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையும் குறைவு. 100 ஊழியர்கள் இருந்தால், அதில் 10 பேர் மட்டுமே பெண் ஊழியர்கள்.

அவர்களிடம் பேசிய போது, குற்றம், அரசியல், புலனாய்வு போன்ற செய்திகளுக்கு அதிக உழைப்பும் நேரமும் செலவாகும்; எனவே பெண்களுக்கு அது ஏற்றதில்லை என்று அவர்கள் நம்புவது தெரிந்தது.

முறையற்ற வேலை நேரம், அதிக நேரம் வேலை பார்ப்பது, குறைவான ஊதியம் போன்ற பிரச்சினைகள் கொண்ட பத்திரிகைத் துறையில் பெண்கள் வேலை பார்ப்பதை அவர்களது குடும்பத்தினர் விரும்புவதில்லை.

படித்து முடித்துவிட்டு சில ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு திருமணம், குழந்தைகள் என பெண்கள் 'செட்டில்' ஆகிவிட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

அதாவது, பெண்கள் தங்கள் தொழிலைப் பற்றி தீவிரமாக இல்லை, அவர்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு, ஒரு விருப்பம் மட்டுமே. பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபடமாட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து விலகிவிடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது.

ஜலந்தரில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்களிலும் இதழியல் கற்றுத்தரப்படுகிறது. அதில் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது.

ஆனால் படிப்புக்கு பிறகு வேலை பார்க்கும்போது எண்ணிக்கை விகிதம் தலைகீழாகிவிடுகிறது.

தனது அம்மா தன்னிடம் எப்போதும் இப்படி புலம்புவதாக ஒரு மாணவி சொல்கிறார், "வெயில் மழை பார்க்காமல் அலைந்து திரிந்தாலும் நல்ல சம்பளம் இல்லை. உன்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? ஆசிரியராக வேலை பார்த்தால்கூட பரவாயில்லை."

ஆனால் தங்கள் பெற்றோர்களை சமாளிக்க முடிந்த இந்த மாணவிகளுக்கு, ஊடகத்தின் 'பழமைவாத' மனப்பான்மையே பிரச்சனையாக இருக்கிறது.

"பத்திரிகையாளர்கள் திறந்த மனப்பான்மை கொண்டவர்கள், மாறும் உலகத்தின் போக்குக்கு ஏற்ப துரிதமாக மாறுபவர்கள் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மையில்லை" என்று அவர் கூறுகிறார்.

'பத்திரிகை துறையில் பெண்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரு வேலையைக் கொடுப்பதைவிட ஆண்களுக்கு கொடுப்பதே நல்லது' என்பது இருபது ஆண்டுகளுக்கு முன் நிலவிய மனோநிலை. இப்போது அப்படியில்லை என்று தோன்றுகிறதா?

மாறியது பெருநகரங்கள் மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களின் கண்ணோட்டம் மட்டுமே. அங்கு பெண்களுக்கு அதிக சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அதில் அவர்களுக்கு பிடித்தமானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இருந்தாலும்கூட பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்கு சமமாக அதிகரிக்கவில்லை.

முடிவெடுப்பதில் பலவீனமாக இருப்பதால்தான் பெண்களின் எண்ணிக்கை பத்திரிகைத் துறையில் குறைவாக இருப்பதாக கூறுகிறார் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் ஒரு பெண்.

"பெண்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்கள், கட்டுரைகள் எழுதுபவர்கள், இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்கிறார் அவர்.

ஜலந்தரில் நீண்ட காலமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மூத்த பெண் பத்திரிகையாளர் இதுபற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

"தன்னம்பிக்கையே அனைத்திற்கும் அடிப்படை. நீங்கள் ஒரு பெண் என்றும், நீங்களும் உங்களுடைய ஆசிரியர் ஒரு ஆண் என்றும் நினைக்காதீர்கள். நாம் அனைவரும் பத்திரிகையாளர்கள் மட்டுமே. நமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும் போராடுவதும் நம்மிடமே உள்ளது."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: