காவிரி - வரைவு செயல் திட்டத்தை மே 3-க்குள் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் நீதிபதிகள் கூறினர்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், காவிரி தொடர்பாக கர்நாடகம் மற்றும் புதுச்சேரியின் மனுவும் இன்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

செயல் திட்டம்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு, எங்களது இறுதி தீர்ப்புடன் இணைந்துவிட்டது என்று கூறிய நீதிமன்றம், மே 3 ஆம் தேதி மத்திய அரசு வரைவு செயல்திட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை மே3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

மாதந்தோறும் காவிரியில் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டுமோ அதை செயல்படுத்த வேண்டும் என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் அமைதி நிலவுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

மத்திய - மாநில அரசின் வாதம்:

மத்திய அரசின் சார்பாக வாதாடிய அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், நாங்கள் மூன்று மாத கால அவகாசம் கேட்டு இருக்கிறோம், சில விளக்கங்களையும் கோரி இருக்கிறோம். அதன் அடிப்படையில் எங்கள் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்" என்ற வாதத்தை முன் வைத்தார்.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

தமிழக அரசின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஷேகர் நாப்தே, மத்திய அரசு காலம் தாழ்ந்து விளக்கம் கோருகிறது. கர்நாடக மாநில தேர்தலை முன்வைத்தே மத்திய அரசு கால அவகாசம் கோருகிறது. மத்திய அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

கர்நாடக அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மோகன் காதர்கி, , கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி என அனைத்து தரப்பும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டுவிட்டது. எந்த மாதிரியான ஸ்கீம் என்பதில்தான் குழப்பம் நிலவுகிறது என்றார்.

காலம் தாழ்ந்த மனு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, "மத்திய அரசு மிகவும் காலம் தாழ்ந்து இந்த மனுவை போட்டு இருக்க வேண்டாம். உங்களுக்கு எங்கள் தீர்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் முன்னதாகவே அணுகி இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் கடைசி நேரத்தில் மூன்று மாதகாலம் அவகாசம் கோருவது மிகவும் தவறு" என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption இந்திய உச்ச நீதிமன்றம்

மேலும் நீதிபதி, காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு, எங்களது இறுதி தீர்ப்புடன் இணைந்துவிட்டது. காவிரி நடுவர் மன்றத்தின் பரிந்துரைகளை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனால், நடுவர் மன்றம் கூறியவாறு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

காலதாமதம்

மத்திய அரசு மீண்டும் காலம் தாழ்த்த வாய்ப்பு இருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்தார் தமிழக அரசின் வழக்கறிஞர்.

இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மத்திய அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்கிறது, நாங்கள் அவ்வளவு அவகாசம் தரப்போவதில்லை, மே 3 ஆம் தேதிக்குள் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை அளிக்க வேண்டும். அதனை நாங்கள் பரிசீலித்து உத்தரவு வழங்குவோம். அதை அனைவரும் அமல்படுத்தியாக வேண்டும். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

தொடரும் குழப்பம்

இன்னுமே `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு உரிய விளக்கத்தை உச்சநீதிமன்றம் வழங்கவில்லை என்று உச்சநீதிமன்ற விவகாரங்களை கவனித்து வரும் செய்தியாளர் ஜெ. வெங்கடேசன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற விசாரணையில் பெரிய தெளிவு இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு மேலும் நீண்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்