காவிரி: `ஸ்கீம்' என்ற வார்த்தையால் தொடரும் குழப்பம்

காவிரி படத்தின் காப்புரிமை TWITTER/Duraimurugan

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், 'ஸ்கீம்' என்ற வார்த்தை குறித்து தெளிவு ஏற்படவில்லை என்று திமுக, மார்க்ஸிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

`ஸ்கீம்' என்றால் என்ன என்று மத்திய அரசு கேட்டதற்கு உச்சநீதிமன்றம் உரிய விளக்கத்தை அளித்திருக்க வேண்டும் என திமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள் என்றும், ஸ்கீம் என்பதற்கான விளக்கத்தை இன்று உச்சநீதிமன்றம் கூறியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உண்டா, இல்லையா?

"அதைவிடுத்து மே 3ஆம் தேதிக்குள் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. திட்டம் அளித்தால் அதற்கு கர்நாடகம் மீண்டும் ஏதாவது மனு தாக்கல் செய்து காலதாமதமாக்கும். அதற்குள், கர்நாடக மாநில தேர்தலும் முடிந்துவிடும்" என்றார் துரைமுருகன்.

"என்ன மாதிரியான ஸ்கீமை தீர்ப்பில் குறிப்பிட்டார்கள் என்று விளக்குவது உச்சநீதிமன்றத்தின் கடமை", என்றும் அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

திங்கட்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை மிகவும் குழப்பமாக உள்ளதாக துரைமுருகன் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற விசாரணை தமிழகத்துக்கு சாதகமா, பாதகமா என்பது வழக்கின் முடிவில்தான் தெரிய வரும் என்று கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒன்று உண்டா இல்லையா என்று கூறாமல், தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே இருப்பதாகவும் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம்

ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை என தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட காவிரி தீர்ப்பு தொடர்பான 4 வழக்குகளின் விசாரணை குறித்து பிபிசியிடம் பேசிய சண்முகம், மே 3ஆம் தேதிக்குள் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை சமர்பிக்க வேண்டும் என்று தெளிவாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என தெரிவித்தார்.

"ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்போடு இணைந்ததுதான் என நீதிபதிகள் தெரிவித்தனர்" என்றும் அவர் கூறினார்.

காலம் தாழ்த்தும் முயற்சி

காவிரி பிரச்சனையில் மத்திய அரசினுடைய காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.

பிப்ரவரி 16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில், நடுவர் மன்றத்தினுடைய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு, (காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உட்பட) நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் என கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்கிறார்.

மேலும் அவர், "மே மாதம் 3-ம் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னரும் வாத பிரதி வாதங்கள் என்ற முறையில் மேலும் இந்த வழக்கை இழுத்துக் கொண்டே செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இன்றுள்ள பா ஜ க தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குகிற வகையில் அதிக அதிகாரங்கள் கொண்ட வரைவு திட்டத்தை செயல்படுத்தாமல், பெயரளவிற்கான திட்டத்தை அமைத்து தீர்ப்பை கிடப்பில் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆகவே, எந்த வகையில் பார்த்தாலும் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு தமிழகத்திற்கு நியாயம் வழங்குவதாக அமையவில்லை" என்கிறார்.

போராட்டம் தொடரும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத வரை தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: