‘போலீஸ், போஸ்டர், தடையை மீறி ஆர்ப்பாட்டம்` - தகிக்கும் சேப்பாக்கம்

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் கடந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என தமிழகத்தை சேர்ந்த பல தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வரும் சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டுள்ளது.

நூறு ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் கூறிகின்றனர் காவல் துறையினர்.

சேப்பாக்கத்தை இணைக்கும் மூன்று சாலைகளும் போட்டி தொடங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு மூடப்படும் என்றும் கூறப்படுகிறது. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு

விளையாட்டை காண மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மொபைல், ரேடியோ, டிஜிட்டல் டைரி, மடிக்கணினி, டேப் ரிகார்டர், பைனாகுலர், ரிமோட் கன்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய கார் சாவி, இசைக் கருவிகள், விடியோ கேமரா, பட்டாசு, தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், பீடி, பேட்டரி, கருப்புத் துணிகள், பதாகைகள், கொடிகள், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளன. இவை மைதானத்துக்குள் எடுத்து செல்லக் கூடாது.

"மைதானத்திற்குள் இனவெறியை தூண்டும்படி கோஷம் இடுவோர், தேசிய கொடியை அவமதிப்போர் ஆகியோரை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்கிறது காவல்துறை.

விளையாட்டு வீரர்கள் தங்கி இருக்கும் அடையாறு க்ரோன் பிளாஸா விடுதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 200 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

போஸ்டர், போராட்டம்

பலத்த போலீஸ் பாதுகாப்பையும் கடந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முயன்றனர். இவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் போல மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடனடியாக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் .

போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதி முழுவதும், ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்