பூட்டு போடும் போராட்டம் முதல் சிக்ஸர் வரை! - சேப்பாக்கத்தில் என்னவெல்லாம் நடந்தன?

  • 11 ஏப்ரல் 2018

காவிரி பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்தக் கூடாது என போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பகுதியில் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரை உலக பிரபலங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) போராட்டங்களை நடத்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

முதலில் பத்து, இருபது பேருடன் தொடங்கிய போராட்டம் நேரம் செல்ல செல்ல வீரியமடைந்தது. பல சோதனைகளுக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தின் உள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டாலும், மைதானத்தின் உள்ளேயும் சில போராட்டங்கள் நடந்தன.

நேற்று காலையிலிருந்து மாலை வரை நடந்த பரபர சம்பவங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

பூட்டு போடும் போராட்டம்

சேப்பாக்கம் பகுதியில் நேற்று போராட்டங்களை தொடங்கி வைத்தது தமிழக வாழ்வுரிமை கட்சியினர்தான். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயன்றனர் அக்ககட்சியினர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

போராட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அந்த பகுதியில் இரவோடு இரவாக ஐ.பி.எல் போட்டிகளை கண்டித்து போஸ்டர்கள் முளைத்திருந்தன. இன்னொரு பக்கம் போலீஸ் தரப்பிலிருந்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

அவர்கள் ஒட்டிய போஸ்டர்களில் ஐ.பி.எல் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் என்னென்ன பொருட்களை எடுத்து செல்ல வேண்டும் என்று பட்டியலிடப்பட்டு இருந்தன.

அனல் மின் நிலையம் முற்றுகை

சென்னையில் இவ்வாறாக போராட்டங்கள் தொடங்க மறுபக்கம் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட அணி அணியாய் காவிரி மீட்புக் குழுவினர் திரண்ட வண்ணம் இருந்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி, பழ. நெடுமாறன், தமிழ்த் தேசிய பேரியக்க செயலாளர் கி.வெங்கட்ராமன், கோவை ராமகிருட்டிணன், சுப. உதயகுமார் என பல்வேறு அமைப்பின் தலைவர்களும் அதன் தொண்டர்களும் என பல்லாயிரகணக்கானோர் நெய்வேலி முற்றுகைக்காக திரண்டு இருந்தனர்.

சென்னையில் ஆலோசனை கூட்டம்

அதே நேரம் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் அமீர், கெளதமன் மற்றும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. மாலையில் நடக்க இருக்கும் போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.

அங்கு ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்றால், சேப்பாக்கத்தில் போலீஸார் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது. அந்த பகுதியை கடப்போர் பலத்த சோதனை செய்யப்பட்டனர்.

போலீஸார்... போக்குவரத்து மாற்றம்

மாலை நெருங்க நெருங்க வெயிலின் உஷ்ணம் மெல்ல குறைய சென்னையில் போராட்டத்தின் உஷ்ணம் வேகமாக அதிகரித்தது. சென்னையில் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் தொடங்கின.

மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. ஆங்காங்கே இரும்பு தடுப்புகள் கொண்டு சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

கருப்பு பலூன்

ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க போலீஸ் சாலையில் கவனம் செலுத்த, ஆகாயத்தில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாலை 3.30 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அக்கட்சியினர் 50 பேர் கருப்பு பலூன்களில் 'ஐ.பி.எல். போட்டி வேண்டாம்' என்ற வாசகங்களை எழுதி பறக்கவிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

இப்படி பரபரப்பான சுழ்நிலை நிலவிய அதே நேரம், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 500 பேர் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாரதிராஜா, வைரமுத்து மற்றும் பிறர்

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜ, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் தங்கர்பச்சான், அமீர், கவுதமன், வெற்றிமாறன், ராம், களஞ்சியம், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் உள்ளிட்டோர் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்தனர். இதனால், போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, மே 17 இயக்கத்தினர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

அந்த பகுதி முழுவதும் பல்வேறு கட்சிகளின் கொடிகளாக நிறைந்து காணப்பட்டன.

ரஜினி ரசிகர்களும் களத்தில்

ரஜினி ரசிகர்களும் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் 'காவிரி மேலாண்மை வாரியம்` அமைக்க வேண்டும் என்ற பதாகைகளுடன் எழிலகத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தாக்கப்பட்ட ரசிகர்கள்

பல்வேறு கட்சியினர்களின் கோஷங்கள் அந்தப் பகுதியில் எதிரொலித்து கொண்டிருந்த போது, ஐ.பி.எல் மேட்ச்சை காண மஞ்சள் நிற ஜெர்ஸியில் வந்த ரசிகர்களும் தாக்கப்பட்டனர். சில ரசிகர்களின் மஞ்சள் நிற ஜெர்ஸியை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றினர். அவர்கள் போலீஸிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர்.

ரசிகர்கள் மட்டுமல்ல போலீஸாரும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர் தாக்கியதில் குற்றப்பிரிவு போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், பெரியமேடு கண்ணப்பர் திடல், ராயப்பேட்டை முத்தையா மன்றத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

போலீஸ் பாதுகாப்பில் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆழ்வார்பேட்டை கிரவுண் பிளாஸா ஓட்டலிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் எழும்பூரில் உள்ள ரேடிஷன் புளூ ஓட்டலில் தங்கியிருந்தனர். வழக்கமான பாதையில் போராட்டக்காரர்கள் இருப்பதால், இவர்களை மாற்று பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மைதனாத்திற்கு அழைத்து வந்தனர். இதனால், இவர்கள் தாமதமாக வந்தடைந்தனர்.

பலத்த சோதனை

பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டம், தடியடி என்று அந்தப் பகுதியே போராட்ட களமாக மாறியதால்,

ஐ.பி.எல்-க்கு முன்பதிவு செய்திருந்த பலர் மேட்சை காணவரவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பல்வேறு சோதனைகளுக்கு பிறகே ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டாலும், ரசிகர்கள் போல நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் மைதானத்திற்குள் உள்ளே வந்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில், சரியாக 7.2 ஓவரின் போது மைதானத்திற்குள் காலனிகள் வீசப்பட்டன. அந்தப் பகுதியிக் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த டுபிளெசிஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காலணிகளை வெளியே வீசினர். நாம் தமிழர் கட்சியினர் கொடியுடன் எழுந்து கோஷமிட்டனர். அவர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.

சிக்ஸில் முடிந்த ஆட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images

இவ்வாறாக போராட்டம்,கட்டுக்குள் வர, மைதானத்தில் ஆட்டம் தொடங்கியது முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 202 ரன்கள் எடுத்து, கடுமையான இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்காக வைக்க, தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாட தொடங்கினர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள். கடைசி 2 ஓவர்களில் சென்னையின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸரை விளாசி வெற்றி தேடித் தந்தார் ஜடேஜா.

இவ்வாறாக இருந்தது நேற்று சேப்பாக்கத்தில் ஒரு நாள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்