காவிரி பிரச்சனை: சேலத்தில் ரயில் மறியல்; திருச்சியில் விவசாயிகள் தண்டோரா போராட்டம்

காவிரி: சேலத்தில் பாமக ரயில் மறியல், விவசாயிகள் வரி கட்டாமலிருக்க தண்டோரா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) தொண்டர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் சேலத்தில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பா.ம.கவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மற்றும் தடுப்பரண்களை தாண்டி ரயில் நிலையத்திற்குள் செல்ல அவர்கள் முயன்றனர்.

அப்போது பா.ம.க தொண்டர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரயில் நிலையத்திற்குள் சென்ற தொண்டர்கள் சென்னையில் இருந்து கோவை சென்ற ரயில் வண்டியை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சி மாவட்டம் அதவத்தூில் வீட்டுவரி, சொத்துவரி கட்ட வேண்டாம் என தண்டோரா போட்டு அறிவித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்