மனைவி 20 செ.மீ அளவுள்ள சப்பாத்தி தயாரிக்காவிடில் தண்டனை கொடுக்கும் கணவன்

சப்பாத்தி செய்யும் பெண் படத்தின் காப்புரிமை Getty Images

கணவன் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து கோரியிருக்கிறார் புனேவை சேர்ந்த ஒரு பெண்.

20 செ.மீ. அளவில் சப்பாத்தியை தயாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் கணவர், தான் செய்த சப்பாத்தியை ஸ்கேல் (அளவுகோல்) கொண்டு அளவிடுவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார்.

சப்பாத்தியின் அளவு மாறுபட்டிருந்தால் தண்டனை கிடைக்கும் என்பதோடு, தினசரி வேலையை கணினியின் எக்ஸெல் ஷீட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.

எனினும், மனைவியின் இந்த குற்றச்சாட்டுகளை கணவர் மறுக்கிறார்.

பாதிக்கப்பட்ட பாயல் (புனைப்பெயர்) என்ற பெண்ணிடம் பிபிசி பேசியபோது. தனது கணவர் அமித் (புனைப்பெயர்) தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். "சாப்பிடும்போது ஸ்கேலை எடுத்துவந்து சப்பாத்தியை அளந்து பார்ப்பார். 20 சென்டிமீட்டரை விட அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால், என்னை தண்டிப்பார்.'' என்று கூறினார்.

செய்த வேலைகளையும், நிலுவையில் இருக்கும் வேலைகளையும் எக்ஸெல் ஷீட்டில் பதிவு செய்யவேண்டும். கணவருடன் பேச வேண்டுமானால் மின்னஞ்சல் செய்து அப்பாயிண்மெண்ட் வாங்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

'முதலிரவிலும் மோசமான நடத்தை'

பாயல்-அமித் தம்பதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது குடும்ப வன்முறையைக் காட்டி பாயல் விவாகரத்து கோருகிறார்.

''திருமணமான முதலிரவில் தொடங்கிய கொடுமைகளை பத்து ஆண்டுகள் தாங்கிக்கொண்டேன். நான் பொறுமை இழந்துவிட்டேன். இனிமேலும் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை இல்லாததால் பிரிந்துவிட முடிவெடுத்துவிட்டேன்'' என்கிறார் பாயல்.

''நாங்கள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு பின் என்னுடைய வீட்டிலேயே தங்கியிருக்கச் சொல்லிவிட்டார். எப்போது பார்க்கத் தோன்றுகிறதோ அப்போது சந்தித்தால் போதும் என்றும் சொல்லிவிட்டார். சில சமயங்களில் இரவு வேளைகளில் மட்டுமே வரச் சொல்லி அழைப்பார். அவ்வளவுதான். காரணம் கேட்டதற்கு, சில நாட்களிலேயே வெளிநாட்டிற்கு செல்ல வேண்டியிருப்பதால், செலவுகள் அதிகமாகிவிடும். சிறிது நாட்களுக்காக எதற்கு மாற்றம் என்று சொல்லிவிட்டார்'' என்கிறார் பாயல்.

ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார் பாயல், ''ஒரு நாள் கோபத்தில் கையில் இருந்த பொருளை கணினியின்மீது வீசியெறிந்ததில் அது உடைந்துவிட்டது. என்னை அடித்த அடியில் நான் மயங்கி விழுந்துவிட்டேன். என்னை இழுத்துக்கொண்டுபோய் குழாய்க்கு அடியில் உட்கார வைத்து தண்ணீரை திறந்துவிட்டார். நினைவு திரும்பியதும் மீண்டும் அடித்தார். என்னை ஈரத் துணியுடன் அங்கிருந்து வெளியேற்றினார். அதே நிலையில் வீட்டிற்கு சென்றபோதுதான் என் பெற்றோருக்கு, அவர் மீதிருந்த கொஞ்ச-நஞ்ச நம்பிக்கையும் இழந்துப்போனது.''

'சமூக ஊடகத்தில் மோசமாக பதிவிடுவார்'

"ஒவ்வொரு முறையும் கொடுமைப்படுத்துவதற்கான புதிய வழிகளை தேடுவார். நான் ஒரு மோசமான பெண், கணவனை தொந்தரவு செய்கிறேன் என்று மற்றவர்களை நம்ப வைக்க எனது ஆர்குட் கணக்கை ஹேக் செய்து அதில் மோசமான பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். இதைப் பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய நண்பர்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோதுதான் தெரியவந்தது."

"அவர் என் பேஸ்புக் கணக்கில் இருந்தும் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து எனது நடத்தையைப் பற்றி கேள்வி எழுப்பினார். என்னுடைய சமூக ஊடக கணக்குகளுக்கான கடவுச்சொல் என்னிடம் ஒருபோதும் இருந்ததில்லை" என்கிறார் பாயல்.

படத்தின் காப்புரிமை Getty Images

'பணம் சம்பாதிக்க அழுத்தம்'

சம்பாதிக்க வேண்டும் என்று கணவர் நிர்பந்தித்ததாக பாயல் குற்றம் சாட்டுகிறார். "எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் பொருளாதார மந்த நிலையால் அந்த வேலையில் சேரமுடியவில்லை. மிகுந்த சிரமத்துக்கு இடையில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலை பட்டப்படிப்பு படித்த என்னை அவர் வேலைக்கு சேர்த்துவிட்டார். அது என்ன வேலை தெரியுமா? வீடு வீடாக சென்று பேஷியல் செய்யவேண்டும்.''

"2009 ஜனவரியில் எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் பொருளாதார மந்த நிலையினால் அவருக்கு வேலை போய்விட்டது. அவர் வீட்டிலேயே இருந்த நிலையில், நான் அலுவலகத்திற்கு சென்றுவிடுவேன். வீட்டில் சும்மா இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு காரணமே இல்லாமல் சண்டை போடுவார். என் குடும்ப உறுப்பினர்களிடம் பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை. ஏப்ரல் மாதத்தில் அவருக்கு தில்லியில் வேலை கிடைத்ததும் அவர் அங்கு சென்றுவிட்டார், நான் புனேவில் இருந்தேன்" என்கிறார் பாயல்.

2010 ஏப்ரலில் தன்னை டெல்லிக்கு வரவழைத்த கணவர், அதற்காக நிபந்தனைகளையும் விதித்ததாக கூறுகிறார் பாயல். கருவுற்ற தன்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார் கணவர் என்று கூறும் பாயலுக்கு ஆகஸ்டு மாதம் வேலை கிடைத்தது.

சில மாதங்களுக்கு பிறகு இரண்டாவது முறை கருத்தரித்தபோதும் கருக்கலைப்பு செய்ய கணவர் வற்புறுத்தினாலும், உறுதியாக மறுத்துவிட்டதாக கூறுகிறார் பாயல். இறுதியாக, குழந்தை பெற்றுக் கொள்வதானால் குழந்தைக்கான பொறுப்பு அனைத்தும் பாயலுடையது என்ற நிபந்தனையில் கருவை கலைக்காமல் விட்டுவிட்டாரம் அமித்! குழந்தை பிறப்பதற்கு 15 நாட்கள் முன்பு வரை வேலைக்கு சென்றதாக கூறும் பாயல், தன்னைப் பற்றி கணவருக்கு அக்கறையே கிடையாது என்று சொல்கிறார்.

படத்தின் காப்புரிமை PRESS ASSOCIATION

2013ஆம் ஆண்டு ஒரு நாள், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப தாமதமானபோதும் மகளை, கிரெச்சில் இருந்து கூட்டி வரவேயில்லை கணவர் அமித். இரவு 10 மணி வரை குழந்தை கிரெசில் இருந்தது. அதற்குப் பிறகு பாயல் வேலையை விட்டுவிட்டார்.

"வேலையை விட்டு வீட்டிலிருந்தபோது சிக்கல்கள் மேலும் அதிகமாகின. மகளை காரில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். காரில் கீறல்கள் ஏதும் விழவில்லை, வண்டிக்கு காற்று நிரப்பியாகிவிட்டது, ஆயில் விட்டாயிற்று என்று சின்ன-சின்ன விஷயங்களைக்கூட அவ்வப்போது அவருக்கு அப்டேட் செய்துக் கொண்டேயிருக்கவேண்டும். இதுபோன்ற விஷயங்களால் பலமுறை சண்டை ஏற்பட்டாலும் நிலைமை மாறவில்லை.

"நான் சம்பாதிக்கவில்லை என்பதால் கட்டுப்பாடுகள் அதிகமாகின. வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்யவேண்டும். சண்டை ஏற்பட்டால், உடனே குழந்தையை தொந்தரவு செய்வார். கத்தியை எடுத்துக் கொண்டு குழந்தையின் பின் செல்வார்."

குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வீட்டுக் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு பட்டியலை கடைபிடிக்கவேண்டும். தினசரி காலை 8:10 மணிக்குள் அந்தப் பட்டியலில் எழுதியிருப்பவற்றை செய்து முடித்துவிட்டேன் என்று அவரிடம் சொல்லவேண்டும். சரியாக 8:11 மணிக்கு, குழந்தை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்வார். ஒரு நிமிடம்கூட முந்தவோ அல்லது பிந்தவோ கூடாது.

எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டது ஆனால்...

அமித்தின் தொல்லை தாங்காமல் 2008ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பாயல். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. மீண்டும் ஒருமுறை பெங்களூரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

பாயல் சொல்கிறார், "காலை உணவு சாப்பிடும்போது கூடவே ஒரு நோட்டையும் வைத்திருப்பார். அவர் சொல்வது அனைத்தையும் அதில் குறிக்கவேண்டும். அவரது பொருட்களை உரிய இடத்தில் வைக்க மறந்துவிட்டால், பெரிய சண்டையே வெடிக்கும்."

"செலவிற்கு அவர் பணம் கொடுக்கமாட்டார். பணத்திற்காக நான் கதக் வகுப்பு எடுக்கத் தொடங்கினேன். அதைப் பற்றிய கணக்கையும் அவருக்கு கொடுக்க வேண்டும். உறவினர்கள் சொன்னதற்கு பிறகு , மாதந்தோறும் 500 ரூபாய் கொடுப்பார். அதற்கான கணக்கையும் எக்ஸெல் ஷீட்டில் எழுதி வைக்கவேண்டும். ஒரு தவறுக்கு 500 ரூபாய் பிடித்துக் கொள்வார். இதனால் பல மாதங்கள் எனக்கு அந்த 500 ரூபாயும் கிடைக்காது."

படத்தின் காப்புரிமை PRESS ASSOCIATION

இந்த நிபந்தனை தினசரி இரவும் தொடரும்

தினசரி இரவு உணவுக்கு பிறகு வேலைகளை முடித்த பிறகு, குழந்தையை கணவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அவருடைய உத்தரவு என்கிறார் பாயல்.

"ஒரு நாள் இந்த விஷயத்தை மறந்துவிட்டேன் என்று பெரிய சண்டை போட்டார். கடைசியில் ஐந்தாவது மாடியில் இருந்த எங்கள் வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு மகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு, தூக்கி வீசி விடட்டுமா என்று பயமுறுத்தினார். நான் மன்னிப்புக் கேட்ட பிறகுதான் உள்ளே வந்தார்."

அத்தனையும் பொய் என்கிறார் கணவர்

பாயலின் குற்றச்சாட்டுகளை அவரது கணவர் அமித் மறுக்கிறார். பொறியாளராக பணிபுரியும் தன்மீது பொய்யான புகார்களை கூறி மனைவி பணம் பறிக்க விரும்புவதாக அவர் சொல்கிறார்.

பாயலின் குற்றச்சாட்டுகள் பற்றி பிபிசி கணவர் அமித்திடம் பேசியோது. "நல்ல ஒரு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணிபுரியும் நான், சப்பாத்தியை அளவெடுத்தேன், கட்டுப்பாடுகளை விதித்தேன் என்று சொல்வது அடிப்படை ஆதரமற்ற குற்றச்சாட்டுகள். இவை அனைத்தையும் மறுக்கிறேன்" என்று கூறுகிறார்.

பாயல் வேலை செய்வதில் தீவிரமாக இருந்ததாகவும், வீட்டில் இருக்க அவருக்கு விருப்பம் இல்லை என்று கூறும் கணவர் அமித், "குழந்தை பிறந்த பிறகு அவளை பார்த்துக் கொள்வதற்காக வீட்டிலேயே இருக்கச் சொன்னேன். குழந்தையை பார்த்துக் கொள்ள யாராவது ஒருவர் வீட்டில் இருக்க வேண்டியது அவசியம்தானே?".

Image caption கணவர் அனுப்பிய வேலை பட்டியல் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.

"மனைவியிடம் நான் கணக்கு கேட்கவில்லை. வீட்டின் வரவு செலவு பற்றி அனைவருமே எழுதி வைப்பது இயல்பானதுதானே? முன்பெல்லாம் நோட்டு புத்தகத்தில் எழுதுவார்கள், இன்று நாம் எக்ஸெல் ஷீட்டில் எழுதுகிறோம் என்பதுதான். இப்படி செய்வது பாயலுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னதை ஏற்றுக்கொண்டேன். எனவே கடந்த 6 மாதங்களாக அதை நிறுத்திவிட்டோம். நான் எதற்கும் மனைவியை கட்டாயப்படுத்தியதில்லை."

''பாயல் சட்டத்தை சுயநலத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார். அவரது பேஸ்புக்கில், தனது கல்லூரி கால நண்பரிடம் பல அந்தரங்கமான தகவல் பரிமாற்றங்கள் செய்திருப்பது எனக்கு ஐந்து-ஆறு மாதங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. இதைப்பற்றி விசாரித்தபோது, விவகாரத்து செய்துவிடுவதாக மிரட்டினார். எனக்கு வேதனையாக இருந்தாலும், குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன்.''

சிறிது நாட்களுக்கு பிறகு மனைவியை மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றதாகவும் அமித் சொல்கிறார். ஆனால், இருவர் சொல்வதும் முரண்பாடாகவே இருக்கிறது. கணவரை தான் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் சென்றதாக பாயல் கூறுகிறார்.

குழந்தையை சந்திக்க விடுவதில்லை குற்றஞ்சாட்டும் அமித், ''மகள் மீது நான் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறேன். குழந்தையை துன்புறுத்துவது பற்றி நான் சிந்தித்துகூட பார்த்ததில்லை. என்னை சந்திக்கக்கூடாது என்று பாயல் குழந்தையையும் கட்டாயப்படுத்துகிறார்'' என்கிறார்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

'திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டேன்'

எல்லா வேலைக்கும் காலக்கெடு விதிப்பது குறித்து அமித் என்ன சொல்கிறார்? "குறித்த நேரத்தில் வேலைகளை செய்யவேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லையே? வேலையை செய்து முடிக்கும் நேரத்தையும் நாங்கள் இருவரும் சேர்ந்தே முடிவு செய்வோம். இது வேலையை சுலபமாக்கும். எந்த வேலையும் விடுபடாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடு. இயல்பாக குடும்பத்தில் நடக்கும் இதுபோன்ற விசயங்களை தற்போது பிரச்சனை ஏற்பட்டபிறகு, நான் கொடுமைப்படுத்தியதாக காட்ட பயன்படுத்துகிறார் பாயல். சாப்பிட என்ன வேண்டும் என்று நான் ஒருபோதும் பட்டியல் எதையும் கொடுத்ததேயில்லை" என்கிறார் கணவர் அமித்.

''அதேபோல், பாயலின் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொல்லும் என்னிடம் இல்லை. பாயல் எனது மடிக்கணியை பயன்படுத்துவார். ஒருமுறை தனது கணக்கில் இருந்து நண்பருக்கு செய்தி அனுப்பிவிட்டு, அதை தனது தாயிடம் காட்டி பிரச்சனை செய்தார் பாயல்'' என்கிறார் அமித்.

நான் மனைவியை அடித்ததே கிடையாது. 2008, 2009 ஆம் ஆண்டுகளில் என் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட தகவலே எனக்கு தெரியாது. அதுவும் இப்போதுதான் தெரியவருகிறது.

"திருமணத்திற்கு முன் 8 மாதங்கள் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். அப்போது நான் மோசமானவன் என்று தெரியவில்லையா? எங்களது திருமணம் காதல் திருமணம். பாயல் என்னை தொலைபேசியில் அழைத்து, திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது மறுத்துவிட்டேன். ஆனால், திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று பாயல் பயமுறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால், பொய் வழக்குகள் போடுவோம் என்று அவரது அம்மா அச்சுறுத்தினார்.''

தற்போது, பாயல் மற்றும் அமித்தின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

படத்தின் காப்புரிமை Science Photo Library

இந்தியாவில் குடும்ப வன்முறை வழக்குகள்

நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக (NCRB) அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 378 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை பதிவானவை மட்டுமே. சமுதாயத்தின் மீதான அச்சத்தாலும், காவல்துறையின் மீதான பயத்தாலும் பல கொடுமைகள் வெளிவருவதில்லை.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளின்படி, பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காகப் பதிவான புகார்களின் எண்ணிக்கை: 2014இல் 38 ஆயிரத்து 385, 2015இல் 41 ஆயிரத்து 001 மற்றும் 2016இல் 41,761. அதில் 2016இல் மட்டும் பதிவான குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 12,218.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்