தகாத முறையில் நடந்துகொள்ளும் ஆண்களுக்கு அடி கொடுக்கும் பஞ்சாப் பெண்கள் #BBCShe

பஞ்சாபில் ஜலந்தரைச் சேர்ந்த பிராக்ஷி கன்னா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஓர் மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரை ஒரு கார் பின்தொடர்ந்தது. ஞாயிற்றக் கிழமையான அன்று சந்தைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது கார் தன்னை பின்தொடர்வதை கவனித்த பிராக்ஷி சற்று வேகமாக அடி எடுத்து வைக்கத் துவங்கினார். உடனே அந்த கார் அவர் அருகில் வந்து நின்றது.

கத்தியுடன் இருந்த ஒருவன் அவள் மீது பாய்ந்தான்.

''என்னை காருக்குள் அவன் நுழையச் சொன்னான்'' எனத் தெரிவிக்கிறார் அந்த திடகாத்திரமான இளம் பெண். ''அவனது கத்தியை மீறிய நான் அவனை என்னால் முடிந்த மட்டும் தள்ளிவிட்டேன். அவன் காரின் பானட் பகுதி மீது விழுந்தான். நான் அங்கிருந்து ஓடி அருகிலுள்ள ஆட்டோ ஒன்றைப் பிடித்தேன். நான் உயிருடன் இருக்கமாட்டேனோ என அப்போது பயந்தேன்'' என்கிறார் அப்பெண்.

கல்லூரி மாணவியான சந்தீப் கவுர் அவருக்கு நேர்ந்த ஓர் சம்பவத்தை பகிர்ந்தார். தன்னுடைய உறவினரை அழைத்துக்கொண்டு செல்வதற்காக தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது மது அருந்திய ஒருவன் அவனது இருசக்கர வாகனத்தை கொண்டு தனது ஸ்கூட்டரின் மீது மோதிவிட்டு உடனே தன்னை திட்டியதாகவும் கூறுகிறார்.

முக்ஸ்தர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் '' இந்தச் சம்பவத்தின்போது ஆத்திரம் கொண்டேன் மேலும் அவனை அடித்தேன் '' என்றார்.

இதற்கு முன்னதாகவும் அந்த மாணவி ஒருவனை அடித்திருக்கிறார்.

'' ஒருமுறை பேருந்தில் ஒருவன் என்னை உரசினான் அதற்கு பதிலாக அவனுக்கு என்னிடம் இருந்தும் கடுமையான அடி கிடைத்தது'' என பெருமையாக சொல்கிறார் சந்தீப் கவுர். ப்ராக்ஷியும் கூட பேருந்தில் தன்னிடம் முறையற்ற வகையில் நடந்து கொண்ட ஆண்களை அறைந்ததாகவும், இச்சம்பவம் இரண்டு முறை நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இளம் பெண்கள் மட்டும் தங்களை தொந்தரவு செய்த ஆண்களை அடிக்கவில்லை வேறு சில பெண்களும் இதே விஷயத்தைச் செய்திருக்கிறார்கள். கடந்த வாரம் ஓர் ஆட்டோவில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற ஒரு காவலரிடம் தனது கராத்தே வித்தையை காண்பித்த ஹரியானா பெண்ணைப் போல, மேற்சொன்ன இளம்பெண்கள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகவில்லை. ஆனால் அவர்களது குழுக்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் பேசு பொருளாகியிருக்கிறார்கள்.

தகாத முறையில் நடந்து கொள்பவர்களை தடுத்து நிறுத்த ஒரே வழி இதுவே என்கிறார் சந்தீப். நகரங்களில் இருந்தும் கிராமத்தில் இருந்தும் வந்துள்ள இந்த இளம்பெண்கள் தெருவில் நடக்கும் கடுமையான தொந்தரவுகளுக்கு ஓர் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை தாக்கு என்பதே அந்த விடை.

இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் தங்களது பெருமையை தக்கவைப்பது மட்டுமின்றி, தாங்கள் விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்திற்கு செல்ல வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.

2016-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 5000 நிகழ்வுகளை கண்டுள்ளது பஞ்சாப் மாநிலம். தேசிய குற்றவியல் பதிவு நிறுவனம் அளித்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி 1038 பெண்கள் இந்த நிகழ்வுகளில் பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. எனினும், பிராக்ஷி மற்றும் சந்தீப் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான பல நிகழ்வுகள் முறையாக அறிக்கை தாக்கப்படாமல் இருக்கிறது என்கின்றனர்.

''எங்களது நகரங்களில் உள்ள தெருக்கள் பாதுகாப்பானவை அல்ல. இது போன்ற சூழ்நிலைகளில் எங்களிடம் உள்ள ஒரே தீர்வு சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்பதே'' என்கிறார் சந்தீப்.

ஜலந்தர் கல்லூரியில் படிக்கும் மாணவியான ப்ரீத்தி, தன்னை தொந்தரவு செய்யும் பையன்களை சந்தீப் செய்ததை போன்று எதிர்த்து அடிப்பதில்லை. '' நான் பேட்மின்டன் வீராங்கனை. பயிற்சிக்குச் செல்லும்போது ஷார்ட்ஸ் அணிவேன். என்னை தினமும் சிலர் சீண்டுவார்கள். ஆனால் நான் பயப்படுவதில்லை. ஒவ்வொருவருடனும் சண்டை போட முடியாது ஏனெனில் நீங்கள் இன்று தாக்கினால் நாளைக்கு அவர்கள் உங்களை தாக்கலாம்'' என்கிறார் இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஜலந்தரில் வந்து படிக்கும் மாணவி ஷிவானி.

ஈவ்டீசிங்கில் ஈடுபடுபவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தவழி என்கிறார் வரைகலை நிபுணராக பணியாற்றும் ஜஸ்லீன் கவுர். '' உங்களுக்கு சில பகுதிகள் பாதுகாப்பின்மையாக தோன்றினால் ஏன் அந்தப் பகுதிகளுக்கு முதலில் செல்கிறீர்கள். இது நீங்களே உங்களுக்கு பிரச்னையை வரவழைத்துக் கொள்வது போன்றது'' என்கிறார் அவர்.

'' இப்படி நாம் சிந்திக்கத் துவங்கினால் நம்மால் எதுவும் செய்ய முடியாது, நாம் வாழக்கை நடத்தவே முடியாது'' என ஜஸ்லீன் வாதத்தை எதிர்க்கிறார் பிராக்ஷி.

'' பயப்படுவது தீர்வல்ல. உங்கள் பயம்தான் அவர்களுக்கு ஊக்கம் தருகிறது. இன்றைய பெண்கள் வலுவானவர்களாக இருக்க வேண்டும். ஈவ் டீசிங் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் செல்வதால் அவர்கள் தெருவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தொந்தரவு அளிக்கும் துணிவு பெறுகிறார்கள்'' என்கிறார் சந்தீப்.

ஏன் பெண்கள் காவல்துறையை அணுகுவதில்லை என கேட்டபோது அது கடினமானதாக இருப்பதாக கூறினார். '' மிகவும் முக்கியமான விஷயம் எனில் பெண்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால் ஆண்கள் சீண்டல் பேச்சில் ஈடுபட்டாலோ அல்லது தொட முயன்றாலோ அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு அறை விடுவது போதுமானது'' எனக் கூறினார் மாணவி சந்தீப்.

''காவலர்களை அணுகுவது சட்ட வழிமுறையில் ஈடுபட வேண்டியதாக இருக்கும் அதுமட்டுமின்றி பெற்றோர்கள் கவலைபடுவார்கள். இவை பெண்களுக்கு மேலும் பல தடைகளை ஏற்படுத்தும்'' என மற்றொரு கவலை அளிக்கும் விஷயம் குறித்துச் சொல்கிறார் பிராக்ஷி.

இந்திய சட்டப்படி வெவ்வேறு குற்றங்களுக்கு வெவ்வேறு விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வழிவகை உண்டு. குற்றவியல் சட்டம் (2013) , பாலியல் துன்புறுத்தல் குற்றம் (354-A, ஐபிசி), நிர்வாணப்படுத்துதல் (354 -B ஐபிசி), அல்லது பாலியல் செய்கைகளை கண்டு பாலின்பம் அடைந்தல் (354-C, ஐபிசி) மற்றும் தொடர்ந்து பின்தொடர்ந்து தொந்தரவு தருதல் (354 - D) ஆகியவற்றுக்கு காவல் துறையில் புகார் அளிக்க முடியும்.

'’பெண்களிடம் தற்போது காணப்படும் இந்த தைரியம் தான் இந்த மண்டலத்தில் உள்ள பெண்கள் விளையாட்டிலும் பல பதக்கங்கள் வெல்வதற்கு காரணம். பெண்கள் இவ்வாறு ஆண்களை தைரியமாக எதிர்கொள்வது படித்தவர்களிடம் மட்டுமே காணப்படுகிறது. படிக்காத பெண்கள் இன்னமும் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்'' என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழக சமூகவியல் துறை பேராசிரியர் மஞ்சித் சிங்.

பஞ்சாபில் பெண்கள் தெருவில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக சண்டை போடுவது புதிய டிரென்டா எனக்கேட்டால் அதற்கு பதில் அளிப்பது கடினம். ஆனால் தெருவில் நடக்கும் தொந்தரவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: