“போராடாமல் இருந்தால் வருங்கால சந்ததியினர் நம்மை கோழைகள் என்பர்”

பிரதமர் நரேந்திர மோதியின் தமிழக வருகையை ஒட்டி எதிர்க்கட்சியினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் தமிழகத்தின் மாநில உரிமையை மத்திய அரசிடம் உணர்த்த உதவுமா? வெறும் சம்பிரதாயப் போராட்டமாக முடிந்து விடுமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இது பற்றி பிபிசி தமிழ் நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை இங்கு தொகுத்து வழங்குகின்றோம்.

சரவணா பிரகாஷ் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், மக்களிடையே நடுவண் அரசின் தொடர் நடவடிக்கைகள் மீது இருக்கும் ஆத்திரத்தை வெளிப்படுத்தவே இந்த கருப்புக்கொடி போராட்டம் என்று பதிவிட்டுள்ளார்.

ஏளனம் செய்யும் இந்திய அரசை தமிழர் தூக்கி எறிவதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்கிறார் ஈனமுத்து.

சக்தி சரவணன் என்பவரோ, நாட்டின் பிரதமரை பொது வழியில் அல்லாமல் சிறப்பு வான் மற்றும் சாலை மார்க்கம் மூலம் விழாக்களில் பங்கேற்க செய்திருப்பதே கருப்புக் கொடி போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியதைக் குறிக்கும் எனலாம் என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

போராட்டங்கள் ஓயப்போவதில்லை. நாட்டுக்காக சுதந்திர போராட்டம், ஆனால் இது தமிழ்நாட்டுக்காக, நீருக்காக, சேற்றில் வாழும் விவசாயின் உரிமைக்காக போராடும் போராட்டம் என்ற தனது கருத்தை தெரிவித்துள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

சாந்தகுமாா் என்கிற நேயர் "எதிர்க்கட்சின்னா இப்படி பண்ணுறது சாதாரணம். அரசியல்ல இதுல்லாம் சகஜம்பானு பிரதமர் கடந்து போய்டுவாரு" என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

சித்திக் அகமது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவேரி மேலாண்மை அமைக்காமல் எங்கனம் வந்தாலும் #GobackModi என்று கூறியுள்ளார்.

சுப்பு லட்சுமி என்கிற நேயர், தன்னுடைய நாட்டிலேயே வருகை தரும் பிரதமருக்கு பாதுகாப்பில்லை. நெதர்லாந்து பிரதமர் அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்து செல்கிறார். பிரதமர் வருகைக்கு அடுத்த மாநிலங்களில் கறுப்புக் கொடி காட்டப்படுகிறது. இதுதான் இந்தியாவின் வளர்ச்சியா ? இதில் எப்படி அவரிடம் உரிமையையோ நன்மை செய்வார் என்றோ எதிர்பார்ப்பது என்று கேட்டுள்ளார்.

நிச்சயம் எந்தப் பயனுமில்லை இது வெறும் சம்பிரதாயப் போராட்டமாகத்தான் முடியும். இந்த போராட்டம் மாநில கட்சியின் அரசியலுக்கு வேண்டுமானால் உதவும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அகிலன் என்கிற நேயர்.

அன்பு அன்பரசு என்கிற நேயரோ, இது கறுப்பர்களின் மண். இன்றல்ல என்றும் ஆரியத்தை துரத்தும் இது பெரியார் மண்....என்று பதிவிட்டுள்ளார்,

தமிழ்வேல் என்பவர், பல வகையிலும் நம்முடைய எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருப்போம். அதில் ஒன்று தான் கறுப்புக்கொடி. ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்தால் வருங்கால வரலாறும், சந்ததியினரும் நம்மை கோழைகள் என்று பதிவு செய்துவிடுவார்கள் என்கிறார்.

சிங்க ராஜா என்பவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சை வழியிலான அறப்போராட்டம்! மக்களின் இன்னல்கள் தீரும்வரை தொடரும்! என்று கூறியுள்ளார்.

முரளி தேவ் என்பவர், உதவ வேண்டும் என நினைப்பவர் எப்போதோ செய்து இருக்கலாமே என்று கூறியிருக்கிறார்.

"கர்நாடக தேர்தலில் ஒட்டுக்காக, இன்று தூங்குவதை போல் நடிப்பவரை, அசைத்துப் பார்க்கத் தொடர்போராட்டங்கள் உதவும்" என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

கணேஷ்குமார் என்பவர் டுவிட்டரில் "தூங்குறவங்களை எழுப்பலாம். தூங்குற மாதிரி நடிக்கிறவங்கள??" என்று கேள்வி கேட்டு கருத்துப் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்