சிறந்த இசைக்காக 6 தேசிய விருதுகள்: ஏ.ஆர் ரஹ்மான் புதிய சாதனை

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு தேசிய விருது! படத்தின் காப்புரிமை MOM

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் கடந்தாண்டு உருவான டு லெட் (TOLET) திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சினிமா துறையினரை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2017 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களுக்கான தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 34 பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ள 65வது தேசிய விருது பட்டியலில் தமிழ் திரை துறையை சார்ந்தவர்களுக்கு நான்கு விருது மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஷேகர் கபூர் தலைமையிலான தேர்வு குழுவினர் அறிவிப்புகளை வெளியிட்டனர்.

சிறந்த தமிழ் மொழி திரைப்படமாக டு லெட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரான செழியன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை TO LET

சென்னையில் 30 நாட்களுக்குள் வாடகைக்கு வீடு தேடி பிடிக்க வேண்டிய கட்டாயத்தில், தங்களுடைய குழந்தையுடன் ஒரு தம்பதியினர் அலைவதை மையமாக வைத்து டு லெட் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கடந்த ஆண்டே தணிக்கை சான்றிதழ் பெற்றதால் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படம் ஏற்கனவே கொல்கத்தா இன்டர்நேஷனல் ஃப்லிம் பெஸ்டிவலில் 2017ஆம் ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது.

டு லெட் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வான் வருவான் பாடலை பாடிய ஷாஷா திருப்பதிக்கு சிறந்த பாடகி விருது வழங்கப்பட்டுள்ளது. காற்று வெளியிடை வெளியான சமயத்தில் வான் வருவான் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

சிறந்த பாடகி விருதை பெற்றதை போலவே காற்று வெளியிடை திரைப்படம் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர் ரஹமான் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா, கண்ணத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு தேசிய விருது வெற்றிருந்தார். காற்று வெளியிடை மூலம் மூன்றாவது முறை மணிரத்னம் படத்திற்காக தேசியவிருது பெறவிருக்கிறார் ஏ.ஆர் ரஹ்மான். மேலும் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு மற்றும் அமீர் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான லகான் படத்திற்கும் விருது வெற்றுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.

சிறந்த இசையமைப்பாளர் விருதை தவிர, மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருதும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரஹ்மான் ஏற்கனவே நான்கு விருது பெற்றிருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தேசிய விருதுகளை வெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக தேசிய விருது வெற்ற இசையமைப்பாளர் என்ற பெயர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த ஆண் பிண்ணனி பாடகராக கே.ஜே யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த திரைப்படமாக அசாமிய மொழி திரைப்படம் வில்லேஜ் ராக்கர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பிரபல திரைப்படமாக இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான 'மாம்' திரைப்படத்திற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

பயநகம் என்ற மலையாள படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதை பெறுகிறார் ஜெயராஜ்.

சிறந்த தெலுங்கு மொழி திரைப்படமாக நடிகர் ரானா நடித்த காஸி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

65ஆவது தேசிய விருது பட்டியலில் அறிவிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அடுத்த மாதம் டெல்லியில் விருது வழங்கப்படவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்