காவிரி டெல்டா பகுதியில் மாற்று பயிர்கள் சாத்தியமா?#GroundReport

  • 13 ஏப்ரல் 2018

ஒவ்வொரு வருடமும் காவிரி விவகாரம் பெரிதாக உருவெடுக்கும்போது, காவிரி நீரைக் குறைவாகப் பயன்படுத்தி நெல், கரும்பு போன்ற தண்ணீரை அதிகம் கேட்கும் பயிர்களுக்குப் பதிலாக வேறு பயிர்களைப் பயிரிடலாமே என்ற வாதம் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அது சாத்தியமில்லை என்கிறார்கள் விவசாயிகளும் வேளாண் துறை அதிகாரிகளும்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்களை எழுப்பியிருக்கும் நிலையில் காவிரி டெல்டாவான தஞ்சையிலும் அனல் தகிக்கிறது. தஞ்சாவூர் நகரைத் தாண்டி வெளியில் சென்றால் சாலையின் இரு பக்கங்களும் வயல்வெளிகள் வறண்டு காணப்படுகின்றன. தொலைதூரத்தில் எங்காவது ஓரிடத்தில் ஆழ்துளைக் கிணறு வசதியைக் கொண்டிருக்கும் நிலங்களில் பச்சை தென்படுகிறது.

"கோடை மழை சில நாட்கள் பெய்தால் போதும், விதைத்திருக்கும் உளுந்து நல்ல விளைச்சலைத் தந்துவிடும்" என்கிறார் விவசாயியான சின்னதுரை. அப்படி சில நாட்கள் தண்ணீரே போதுமென்றால், ஏன் பணப் பயிரான உளுந்தையே விவசாயிகள் எப்போதும் அங்கு விதைப்பதில்லை? தண்ணீரை மிகக் குறைவாக எடுத்துக்கொள்ளும் பிற பயிர் வகைகளை விதைப்பதன் மூலம் காவிரி நீர் வராத வருடங்களில் விவசாயிகள் வருவாய் இழப்பு இல்லாமல் இருக்கலாமே? 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு காவிரி நீர் வரத்தில் தொடர்ந்து பிரச்சனை நிலவும் நிலையில், விவசாயிகள் விதைக்கும் பயிர்களில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு ஆமாம், இல்லை என ஒரு வரியில் பதில் சொல்லிவிட முடியாது.

"நினைத்தபடி பயிர்களை மாற்றிக்கொள்வதென்பது இங்கு நடக்காது"

"சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. அப்படியானால், எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்தப் பகுதியில் நெல் விதைக்கப்பட்டிருக்கும் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். தண்ணீர் வராவிட்டால் வேறு பயிர்களுக்கு மாறுவதென்பது இங்கு சாத்தியமில்லாதது. காரணம், இந்தப் பகுதியின் மண் அப்படி. நினைத்தபடி பயிர்களை மாற்றிக்கொள்வதென்பது இங்கு நடக்காது" என்கிறார் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் தலைவரான மன்னார்குடி எஸ். ரங்கநாதன்.

Image caption மண்ணின் தன்மையால் இங்கு நினைத்தபடி பயிர்களை மாற்றிக்கொள்வதென்பது இயலாது என்கிறார் மன்னார்குடி எஸ். ரங்கநாதன்

தஞ்சாவூர் கழிமுகப் பகுதியைப் பொறுத்தவரை, அவற்றின் பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலப் பகுதிகள். களிமண் நிறைந்த பகுதி என்பதால் நீர் அவ்வளவு சீக்கிரம் வடியாமல் தேங்கியே நிற்கும். ஆகவே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு பெரும் மழைப் பொழிவு இருக்கும்போது இந்த வயல்களில் தண்ணீர் வடியாமல் நின்றுவிடும். "இந்த தண்ணீரைத் தாங்கி வளரும் தன்மை நெற்பயிர்களுக்கு மட்டுமே உண்டு. வேறு பயிர்களைப் பயிரிட்டால் அழுகிவிடும்" என்கிறார் ரங்கநாதன்.

தஞ்சாவூர் டெல்டா பகுதியைப் பொறுத்தவரை, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் ஆகியவை களிமண் பிரதேசங்கள். பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்தநாடு, பூதலூர் போன்ற பகுதிகள் செம்மண் பிரதேசங்கள்.

விளையும் பயிர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் (2017-18), 1,57,000 ஹெக்டேர் அளவுக்கு நெல் பயிரிடப்பட்டது. பயிறு வகைகள் 34 ஆயிரம் ஹெக்டேரிலும், கரும்பு 4600 ஹெக்டேரிலும், கடலை 9000 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டன. தென்னை 36 ஆயிரம் ஹெக்டேரிலும், எள் 8000 ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளன. இவை தவிர, சோளம், பருத்தி போன்றவையும் மிகச் சில இடங்களில் காய்கறிகளும் பூக்களும் பயிரிடப்படுகின்றன.

"தண்ணீர் இருந்தால் நெல் பயிரிடுவார்கள். இல்லாவிட்டால், மேலே சொன்ன பயிறு வகைகள்தான் இந்தப் பகுதியில் உள்ள மண்ணைப் பொறுத்து மாற்றி மாற்றிப் பயிரிடப்படும்" என்கிறார் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் மதியழகன்.

தென்மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்து, மேட்டூர் அணையில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் இருந்தால் சாகுபடிக்கென ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தத் தேதியை ஒட்டி தண்ணீர் திறக்கப்பட்டால் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடுவார்கள். 105 நாட்கள் வளரக்கூடிய நெற்பயிர்கள் இந்தக் காலகட்டத்தில் விதைக்கப்படும்.

எல்லாம் சரியாக நடந்து குறுவை அறுவடை செய்யப்பட்டால், பிறகு வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர் - நவம்பரில் தாளடி பயிர்செய்யப்படும். ஆனால், ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படாமல் தாமதித்துத் திறக்கப்பட்டால் ஆகஸ்ட் மாதவாக்கில் சம்பா மட்டுமே பயிராகும்.

இந்தப் பயிர்களின் அறுவடை முடிந்த பிறகு, ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை பயறு வகைகள், எள், சோளம், கடலை ஆகியவற்றை இந்தப் பகுதி விவசாயிகள் விதைக்கின்றனர். உளுந்தும் பெரிய அளவிலான பரப்பில் விதைக்கப்படுகிறது.

டெல்டா பகுதியைப் பொறுத்தவரை, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி, மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கீழையூர், தலைஞாயிறு, கீவலூர் உள்ளிட்ட பகுதிகள் காவிரியிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நேரடியாக நீரைப் பெறுகின்றன.

"இந்தப் பகுதிகளில் காவிரி நீர் வந்தாலும் வராவிட்டாலும் சில வகையான பயிர்களையே விளைவிக்க முடியும். வேறு பயிர்களை பயிரிடவே முடியாது. உதாரணமாக சதுப்புநிலப் பகுதிகளை எடுத்துக்கொள்வோம். அங்கு வெயில் காலத்தில் தண்ணீர் இல்லாவிட்டால் நிலம் பாளம்பாளமாக வெடித்துக்கிடக்கும். அங்கு, எந்த எந்தப் பயிரை விதைக்க முடியும்? அதே இடத்தில் மழைக் காலத்தில் தண்ணீர் ஒரு அடிக்குத் தேங்கிக்கிடக்கும். அங்கு நெல்லைத் தவிர வேறு பயிர்களைப் பயிரிட முடியாது" என்கிறார் மதியழகன்.

அதேபோல, மணற்பாங்கான பகுதிகளில் தண்ணீர் உடனடியாக வடிந்துவிடும் நெல்லைப் பயிரிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பருத்தி பயிரில் உள்ள சிக்கல்

பருத்தி போன்ற பணப் பயிர்களை இங்கு அறிமுகப்படுத்துவதில் வேறு சில பிரச்சனைகள் இருப்பதையும் வேளாண் அதிகாரிகளும் விவசாயிகளும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, நெல், பயறு வகைகளைப் போல அல்லாமல் பருத்தி அதிக மனித உழைப்பைக் கோரும் பயிர். தஞ்சைப் பகுதியில் விவசாயக் கூலிகள் கிடைப்பது அரிதாக உள்ள நிலையில், அதிக நாட்களுக்கு தொழிலாளர்களைப் பயன்படுத்துவது இழப்பை ஏற்படுத்தும் என்பதால் பருத்தியை விளைவிப்பதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார்கள் அதிகாரிகள். இம்மாதிரி சிக்கல்களால் மிகக் குறைவான பரப்பிலேயே பருத்தி பயிரிடப்பட்டுவருகிரது.

சில வருடங்களுக்கு முன்புவரை, இந்தப் பகுதியில் கரும்பு பெரும் பரப்பில் பயிரிடப்பட்டுவந்ததது. ஆனால், சமீப காலமாக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை கோடிக்கணக்கில் இருப்பதால் விவசாயிகள் கரும்பு பயிரிடுவதை சிறிது சிறிதாகக் குறைத்துவருகின்றனர்.

"ஆனால், காவிரியில் தண்ணீர் வரவிட்டால் வேறு சில சிக்கலான பிரச்சனைகள் ஏற்படும். முதலில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே போய்விடும். இப்போதே பல இடங்களில் நீர்மட்டம் 400 அடிக்குக் கீழே சென்றுவிட்டது. ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் நீரோடாவிட்டால், கடல்நீர் உட்புகுந்துவிடும் அபாயம் இருக்கிறது. குடிப்பதற்குக்கூட குளங்களில் தண்ணீர் இருக்காது" என்று சுட்டிக்காட்டுகிறார் எஸ். ரங்கநாதன்.

ஆக, தஞ்சை டெல்டா பகுதியைப் பொறுத்தவரை கிடைக்கும் தண்ணீரின் அளவு மட்டுமல்லாமல், மண்ணின் தன்மை, விளைபொருட்களின் வர்த்தக வாய்ப்புகளும் சேர்ந்தே என்ன பயிரிடலாம் என்பதைத் தீர்மானிக்கின்றன. இதில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார்கள் இதில் சம்பந்தப்பட்ட அனைவருமே.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்