அம்பேத்கர் பிபிசி உரையாடல்: கம்யூனிசமா ஜனநாயகமா? இந்தியாவுக்கு எது பொருந்தும்?

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது? - பிபிசியிடம் மனம் திறந்த அம்பேத்கர்

(இன்று அம்பேத்கர் பிறந்த நாள். அதனை முன்னிட்டு பிபிசி முன்பு வெளியிட்ட இந்த கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்.)

''இந்தியாவில் ஜனநாயகம் வேலை செய்யாது, காரணம் நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம்.''

காணொளிக் குறிப்பு,

கம்யூனிசமா? ஜனநாயகமா? அம்பேத்கர் பிபிசிக்கு அளித்த பேட்டி

இந்த கருத்தை முன்வைத்தவர் வேறுயாருமல்ல இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வரைவு குழுவின் தலைவராக இருந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்.

1953ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் ஆட்சி குறித்தும், சாதி ஒழிப்பு பற்றியும் பல சுவாரஸ்ய விஷயங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார் அம்பேத்கர்.

முன்னர், நேருவின் இடைக்கால ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பணியாற்றினார் அம்பேத்கர். 1951ஆம் ஆண்டு நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்த அம்பேத்கர், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்காக நேரு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

1952ஆம் ஆண்டு, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில், அம்பேத்கரின் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டமைப்பு தோல்வியை சந்தித்தது.

பிபிசி பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் அம்பேத்கர் அளித்த பதில்களும்....

இந்தியாவில் ஜனநாயகம் செயல்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்லை செயல்படாது. வெறும் பெயரளவே இருக்கும்.

தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையா?

இல்லை, அவை உண்மையில் நல்ல ஆட்களை உருவாக்கினால் தேர்தல்கள் முக்கியமானவை. 

ஆனால், அரசாங்கத்தை மாற்றும் வாய்ப்பைத் தருவதால் தேர்தல்கள் முக்கியமானவை.

ஆம், ஆனால் வாக்கெடுப்பு அரசாங்கத்தை மாற்றுவதற்கு என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? யாருமில்லை. மக்களுக்கு அதுபற்றிய உணர்வு இல்லை. நமது தேர்தல் முறையும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அனுமதிப்பதில்லை. எடுத்துகாட்டாக, எருது சின்னத்தில் வாக்களிக்கும்படி காங்கிரஸ் கட்சி கூறினால், அதில் நிற்கும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுவதில்லை. அதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களும் அந்த சின்னத்திற்கே வாக்களிப்பார்கள். எருது சின்னத்தில் போட்டியிடுபவர் ஒரு கழுதையா அல்லது ஒரு கல்வி கற்ற நபரா என்பது மக்களுக்குத் தெரியாது.

ஜனநாயகம் செயல்படாது என்று சொல்வதன் மூலம் அடிப்படையாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

நாடாளுமன்ற முறையுடன் முற்றிலும் ஒத்திசைந்து செல்லாத சமூகக் கட்டமைப்பை நாம் பெற்றிருக்கிறோம்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது? - பிபிசியிடம் மனம் திறந்த அம்பேத்கர்

சமத்துவமின்மையை அது அடிப்படையாகக் கொண்டுள்ளது என்கிறீர்களா?

ஆமாம், இது சமத்துவமின்மையை அடிப்படையாக கொண்டுள்ளது. சாதி முறையை ஒழிக்காமல் இதை உங்களால் சீர்படுத்த முடியாது. இது சமூக கட்டமைப்பு குறித்த ஒரு கேள்வி. இதனை வெளிக்கொண்டு வரவேண்டும். இந்த சமூக கட்டமைப்பை அமைதியான முறையில் நீங்கள் சீர்படுத்தவேண்டும் என்று எண்ணினால் அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று கூறத் தயாராக இருக்கிறேன். ஆனால், சமூக கட்டமைப்பை மாற்றும் முயற்சிகளில் யாராவது ஈடுபட வேண்டும்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது? - அம்பேத்கரின் அரிய பிபிசி பேட்டி

ஆனால், பிரதமர் தனது உரைகளில் சாதிய முறைக்கு எதிராகப் பல கருத்துகளை சொல்கிறாரே?

அவை எல்லாம் முடிவில்லா பேச்சுகள்தான். ஸ்பென்சரின் தொகுப்புகளை கார்லைலிடம் வழங்கியபோது அவர் கூறினார்: "ஓ, கிறித்துவத்தில் உள்ளதைப் போல முடிவில்லாத பேச்சுகள்... பேச்சுகளால் நான் சோர்ந்துவிட்டேன்". பேச்சுகளால் நாம் சலித்துவிட்டோம். உண்மையில் வேலை செய்வதற்கான (சாதியை ஒழிக்க), திட்டங்கள் தொடங்கப்படவேண்டும். உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

Presentational grey line
Presentational grey line

ஒருவேளை இது எதுவுமே நடக்காவிட்டால், இதற்கு மாற்றாக என்ன நினைக்கிறீர்கள்?

மாற்றாக எதுவுமே சாத்தியம்தான். எடுத்துகாட்டாக கம்யூனிஸம்.

இந்தியாவில் ஏன் ஜனநாயகம் செயல்படாது? - பிபிசியிடம் மனம் திறந்த அம்பேத்கர்
படக்குறிப்பு,

மும்பையில் குடும்பத்தினருடன் அம்பேத்கர்

ஜனநாயகம் இந்த நாட்டிற்கு எடுபடாது என்று நினைக்க என்ன காரணம்? மக்களின் வாழ்நிலை மேம்படாதா?

ஆமாம், மேம்படும். தேர்தல்களைவிட தங்கள் அடிப்படைத் தேவைகள் குறித்து மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள். அமெரிக்காவில் ஜனநாயகம் எடுபடுகிறது. அங்கு கம்யூனிஸம் வரும் என்று நினைக்கவில்லை. காரணம், ஒவ்வொரு அமெரிக்கரின் வருமானமும் அதிகம்.

ஆனால், இந்தியாவில் இந்த நிலை தொடங்கலாமே.

எப்படி? எங்களிடம் அதிக நிலம் இல்லை, மழை அளவு மிகக் குறைவு, காடுகளும் குறைவு. எங்களால் என்ன செய்ய முடியும்?

Presentational grey line
Presentational grey line

இந்தப் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

தற்போதைய அரசாங்கத்தால் இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குலையும் என்கிறீர்களா?

நிச்சயமாக, மிக விரைவில் அது நடக்கும். கட்டடத்தின் அடித்தளம் சீர்குலைகிறது என்றால் அதன் கீழ் அடுக்குதான் அதிகம் பாதிக்கப்படும். அதாவது என்னுடைய மக்கள், தீண்டப்படாதவர்கள், அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

கம்யூனிஸ்ட்கள் ஏதேனும் தாக்கம் செலுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. அவர்கள் வேலை செய்யவில்லை. அவர்களுக்கு என்மீது நம்பிக்கை உண்டு. நான் இதுவரை அவர்களிடம் எதுவும் கூறவில்லை. ஒருவேளை என்னிடம் கேட்டால் ஒருநாள் அதற்கு நான் பதில் தருவேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: