இடதுசாரிப் பாடகர் கோவன் கைதாகி, ஜாமீனில் விடுதலை

இந்தியப் பிரதமரையும் தமிழக முதல்வரையும் பற்றி அவதூறாகப் பாடல் பாடியதாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் (ம.க.இ.க) சேர்ந்த பாடகர் கோவனை திருச்சி காவல்துறை இன்று கைதுசெய்தது. பிறகு அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ம.க.இ.கவின் மாநில செயற்குழு உறுப்பினர் கோவன் திருச்சியில் வசித்துவருகிறார். போன மாதம் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ரத யாத்திரையை கண்டித்து கோவன் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரத யாத்திரையையும் பிரதமரையும் விமர்சித்து கோவன் பேசியதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது, தன்னுடைய பாடல்களின் மூலம் வன்முறையை தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A, 504, 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இன்று கே.கே. நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கோவனைக் கைதுசெய்ய அவரது வீட்டிற்கு வந்தனர்.

அப்போது, அவருடைய வீட்டிற்கு அருகில் இருந்தவர்களும் ஆதரவாளர்களும் கோவனை வீட்டிற்குள் வைத்து மூடி, கைதுசெய்ய விடாமல் தடுத்தனர். இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவரைக் கைது செய்யும்போது, வீட்டிற்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்து கைது செய்ததாகவும் எதற்காக கைதுசெய்யப்படுகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லையென்றும் அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இதற்குப் பிறகு ஜேஎம் - 4 நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீது போடப்பட்ட வழக்குகள் சரியானவையல்ல என்று குறிப்பிட்ட கோவன், "ஏலே எங்க வந்து நடத்துற, ரத யாத்திரை, ராமராஜ்ஜியத்துக்கு இதுதாண்டா இறுதியாத்திரை" என்ற பாடலை பாடிக் காண்பித்தார்.

இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் 'மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடலை பாடியதற்காக கோவனை தேசத் துரோக வழக்கில் தமிழக அரசு கைதுசெய்து சிறையில் அடைத்தது.

கோவனை அவரது வீட்டில் கைது செய்யும் காட்சி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இடதுசாரி பாடகர் கோவன் திடீர் கைது (காணொளி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: