காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை #GroundReport

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறும் பகுதிகளில், தண்ணீர் வராத காலகட்டங்களில் விவசாயம் செய்வது சாத்தியமில்லாமலாகிவருகிறது. ஆழ்துளைக் கிணறுகளுக்கான மின் இணைப்புகள் பெறுவதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை.

Image caption விவசாயி முருகேசன்.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாட்டு தாலுகாவில் உள்ளடங்கி அமைந்திருக்கும் கிராமம் பொன்னாப்பூர். இதன் கீழ்ப்பாதியில் அமைந்திருக்கிறது 46 வயது விவசாயியான முருகேசனின் நிலம். கிட்டத்தட்ட 10 ஏக்கர். இப்போது இந்தப் பத்து ஏக்கர் நிலத்திலும் எதையும் விதைக்காமல் காயப்போட்டிருக்கிறார் முருகேசன். 

இவரது நிலம் காவிரி கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களில் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள நிலங்களில் ஆங்காங்கே பசுமை தென்பட, இவரது நிலம் காய்ந்துபோய்க் கிடக்கிறது. 

"நீங்கள் பசுமையாய்ப் பார்ப்பதெல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ள நிலங்கள். மற்றவர்களின் நிலங்கள் காய்ந்துதான் கிடக்கின்றன" என்கிறார் முருகேசன். 

10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் முருகேசன் சற்று வசதியான விவசாயிதான். அப்படியானால், ஏன் ஆழ்துளை கிணறு தோண்டவில்லை? "2009ல் 2 லட்ச ரூபாய் செலவழித்து இந்தப் பத்து ஏக்கர் நிலத்திற்கும் பாசனம் செய்யும்வகையில் ஆழ்துளைக் கிணறு ஒன்றைத் தோண்டினேன். ஆனால், இதுவரை மின் இணைப்புக் கிடைக்கவில்லை" என்கிறார் முருகேசன். 

இந்தப் பகுதியில் உள்ள பலருக்கும் இதேபோன்ற நிலைதான்.  விவசாய ஆழ்துளை கிணறுகளுக்கான பம்ப் செட்டுகளுக்கு தமிழகத்தில் மின் இணைப்புப் பெறுவது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. ஒருவர் மின் இணைப்புகளுக்காகப் பதிவுசெய்து வைத்தால், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த காத்திருப்புக் காலம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். 

இது தொடர்பாக தமிழக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது "2000வது ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்குத்தான், அதாவது 18 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணப்பித்தவர்களுக்குத்தான் இப்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை இலவச மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பதை அரசுதான் நிர்ணயிக்கும். அதன்படியே இணைப்புகளை வழங்க முடியும்" என்று தெரிவித்தனர். 

படத்தின் காப்புரிமை Getty Images

இப்படி இணைப்புகள் வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பிரதான சாலையிலிருந்து மின் இணைப்பு தேவைப்படும் வயல்வெளிகளுக்கு மின் இணைப்பைக் கொண்டுசெல்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் செலவுபிடிக்கும் காரியமாக இருக்கிறது. பல சமயங்களில் மின்சாரத் தூண்களை அமைப்பதற்கு, வழியிலுள்ள விவசாயிகள் ஒப்புக்கொள்வதில்லை.  இதனால் பல சமயங்களில் வழக்குகளைக்கூட சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். 

10,000, 20,000, 30,000 கொடுத்து விண்ணப்பிக்கும் திட்டங்களும் உடனடியாக மின் இணைப்பைப் பெறுவதற்கான தட்கால் திட்டங்களும் மின்வாரியத்தால் வழங்கப்படுகின்றன. ஆனால், எந்தத் திட்டத்தின் கீழும் உடனடியாக மின் இணைப்பைப் பெற முடியாது என்பதுதான் உண்மை.

"சில நாட்களுக்கு முன்பாக தட்கால் திட்டத்தை அறிவித்தார்கள். காலையில் துவங்கி மாலைக்குள் நிறுத்திவிட்டார்கள். எத்தனை பேரால் ஒரு நாளைக்குள் அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியும்?" என்று கேட்கிறார் விவசாய சங்கம் ஒன்றைச் சேர்ந்த பாஸ்கர். 

விவசாயிகளின் மின் தேவையைப் பொறுத்து தட்கால் திட்டத்திற்கான கட்டணம் இரண்டரை லட்ச ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாய்வரை வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் தட்கால் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ஏகப்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதால், உடனடியாக திட்டம் நிறுத்தப்பட்டது.

ஏன் ஒரே நாளில் தட்கால் திட்டம் மூடப்பட்டது என மின்வாரிய அதிகாரிகளிடம்கேட்டபோது, "தட்கால் திட்டமே உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் துவங்கப்பட்டது. ஆனால், எங்களால் உடனடியாக வழங்கக்கூடிய அளவைத் தாண்டியும் ஒரே நாளில் விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. அதனால்தான் அந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்கிறார் மின்வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர். 

தஞ்சாவூரைப் பொறுத்தவரை 1974-75க்கு முன்புவரை ஜூன் மாதத்தில் துவங்கி பிப்ரவரி மாதத் துவக்கம்வரை பாசனக் கால்வாய்களில் தொடர்ந்து நீர் இருக்கும் என்பதால், யாரும் பெரிதாக ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவது குறைந்து, எல்லா பாசனக் கால்வாய்களுக்கும் நீர் திறக்கும் நடைமுறைக்குப் பதிலாக முறைவைத்து நீர் திறப்பது அறிமுகப்படுத்தப்பட்டது.  

தஞ்சாவூர் பகுதி முழுவதிலும், புதிய டெல்டா பகுதியிலும் விவசாயத்திற்கேற்ற வகையில் தற்போதும் நிலத்தடி நீர் கிடைத்துவருகிறது. ஆனால், 400 அடி வரை ஆழ்துளை கிணறுகளைத் தோண்ட வேண்டியிருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். பாசனக் கால்வாய்களில் நீர் திறக்கப்படும் காலம் குறையக்குறைய, நிலத்தடி நீர்மட்டம் மேலும் மேலும் கீழே சென்றுகொண்டிருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

தற்போது முருகேசன் தன்னுடைய நிலத்தை தரிசாகப் போட்டுவிட்டு, அருகிலுள்ள பாசன வசதியுள்ள 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார்.  இது எல்லோராலும் முடியும் காரியமில்லை. ஆகவே, நிலமிருந்தும் மின் இணைப்பு இல்லாத விவசாயிகள் பலர், வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்