நாளிதழல்களில் இன்று: சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்?

  • 15 ஏப்ரல் 2018

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி - 'சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்?'

படத்தின் காப்புரிமை twitter/NaamTamilarOrg

காவிரி விவகாரத்துக்காக சென்னையில் நடந்த போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்? என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தோம். அப்போது எதிர்பாராத விதமாக போராட்டக்காரர்களை போலீசார் தாக்கினார்கள்.

அது தவறு. அதே சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் போலீசாரை தாக்கியதும் தவறு. போலீசார் மீது தாக்குதல் நடத்தியபோது, நான் விலக்கிவிட்டேன். இதற்காக என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்னை கைது செய்யுங்கள், சிறையில் அடையுங்கள் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். பல்வேறு கட்சிகள், அமைப்புகள் பங்கேற்ற போராட்டத்தில் எங்கள் கட்சி மீது மட்டும் குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை என்று சீமான் கூறியதாக விவரிக்கிறது அந்த நாளிதழ் செய்தி.

'தென்தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்'

படத்தின் காப்புரிமை Getty Images

மாலத்தீவு, லட்சத்தீவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் தென்தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில்(இன்று), மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையாலும், கிழக்கு, மேற்கு திசைகாற்று சந்திக்கின்ற பகுதி தமிழகத்தில் நிலவுவதாலும் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.

நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில், வழக்கமான வானிலையே நிலவும். வெயிலின் தாக்கம் தற்போது வரை இயல்பையொட்டி தான் இருக்கிறது என்று பாலச்சந்திரன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'போலீஸ் காவல் மரணங்கள்'

போலீஸ் காவலில் நிகழும் மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி, 2000 - 2016 இடையிலான காலக்கட்டத்தில் போலீஸ் காவலில் இருந்த 1022 பேர் மரணித்ததாகவும், அதில் 428 வழக்குகளில் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருப்பதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (தமிழ்) : ராணுவக் கண்காட்சியை 1 லட்சம் பேர் பார்த்தனர்

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் 4 நாட்களாக நடத்தப்பட்டு வந்த ராணுவக் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ராணுவ வாகனங்கள், தளவாடங்களையும், வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்தனர். இக்கண்காட்சியை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ்.

உலக அளவில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றுவது, உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிப்பது, அவற்றின் உற்பத்தி திறனை உலக நாடுகளுக்கு தெரிவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இக்கண்காட்சி நடத்தப்பட்டது. ரூ.800 கோடி செலவில் 2.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 539 இந்திய நிறுவனங்கள், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 701 நிறுவனங்கள் பங்கேற்றன என்கிறது அந்நாளிதழ் செய்தி.

வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது! - ரஜினி

படத்தின் காப்புரிமை தி இந்து

தினமணி - 'மோடி ஆட்சியில் தலித்துகள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்'

படத்தின் காப்புரிமை Getty Images

அம்பேத்கர் பெயரில் பிரதமர் மோடி திட்டங்கள் கொண்டுவருவதில் பயனில்லை என்றும், அவரது ஆட்சியில் தலித்துகள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"மோடி தலைமையிலான பாஜக அரசு, பெரும் தொழிலதிபர்களுக்காக பணியாற்றுவதுடன், தலித்துகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை புறக்கணிக்கிறது. பாஜக அரசு அம்பேத்கரின் பெயரில் திட்டங்கள் கொண்டு வந்து அரசியல் செய்கிறது. ஆனால் உண்மையில், அதன் ஆட்சியின்போதுதான் நாட்டில் இதுவரை இல்லாத அளவில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்கின்றன.

ஆனால் பாஜகவோ, தலித்துகளிடம் நாடகமாடி வருகிறது. மத்திய அரசு உண்மையாகவே தலித்துகளின் நலனுக்காக பணியாற்றத் தொடங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிராக மத்திய அரசு முறையாக செயலாற்றவில்லை." என்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து - ' இரண்டு ராஜ்பவன் ஊழியர்கள் கைது'

மரசாமான்கள் வாங்கியதில், போலியான பில்களை தயாரித்து 2015 -2017 இடையிலான காலக்கட்டத்தில் பொதுப் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக இரண்டு ராஜ் பவன் ஊழியர்களை சென்னை மாநகர போலீஸ் கைது செய்துள்ளது என்கிறது தி இந்து நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: