#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?

  • அ.மார்க்ஸ்
  • செயற்பாட்டாளர்

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் இரண்டாவது பாகம். இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

1. "தேசம் ஒரு கற்பிதம். கற்பிதம் செய்யப்பட்ட சமூகம் (imagined community) என்றுதான் பெனெடிக்ட் ஆன்டர்சன் சொல்கிறார். அவர் ஒன்றும் தேசியத்தைக் குறைவுபடுத்தியோ, அது ஒரு பொய் அல்லது மாயை என்றோ சொல்லவில்லை. தேசத்தின் பெயரால் அரசியல் செயல்பாடுகள் அமைகின்றன. மக்கள் திரள்கிறார்கள். உயிரைத் தத்தம் செய்கிறார்கள், மக்கள் கொல்லப்படுகிறார்கள், இடம் பெயர்கிறார்கள். எனவே தேசம் ஒரு மாயை என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

அதே நேரத்தில் குடும்பம், தனிச் சொத்து, அரசு என்பவை போலவே தேசமும் இயற்கையானதல்ல. அது வரலாற்று ரீதியானது. தேசிய அரசியலுக்கு அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தமாக தேசத்தைப் பார்க்க வேண்டியதில்லை. நூறாண்டுகளுக்கு முன்னால் எர்னஸ்ட் ரெனான் குறிப்பிட்டதுபோல நவீன தேசங்களுக்கிடையே பொதுக் காரணி ஏதும் இல்லை. ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு கூறுகள் சிலவற்றின் தொகு புள்ளியாக வரலாற்றுப் போக்கில் உருவாக்கப்படுகிறது.

பிரிவினையின் போது மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது. ஆனால் மதம் ஒன்றானாலும் அது ஒரே தேசமாகப் பரிணமிக்கவில்லை. இன்று மொழி அடிப்படையில் பாகிஸ்தான் எனவும் வங்கதேசம் எனவும் ஒன்றுக்கொன்று பகையான இரண்டு நாடுகளாகிவிட்டன. ஒரே மொழி அடிப்படையில் பஞ்சாப் ஒரு தேசமாகப் பரிணமிக்க முடியவில்லை. மத அடிப்படையில் சீக்கியர்கள் காலிஸ்தான் கேட்கின்றனர்.

முந்தைய கட்டுரை:

மொழி அல்லது இன அடிப்படையில் விசால ஆந்திரம் ஒரே தேசமாக உருப்பெற இயலவில்லை. இன்று ஒரே மொழி, ஒரே மாதிரியான மத அடையாளங்கள் உள்ள ஆந்திரமும், தெலங்கானாவும் தனித்தனியாகப் போகத் துடிக்கின்றன. இங்கே 'வளர்ச்சி' (development) என்பது பிரிவினையின் முக்கிய காரணியாக அமைகிறது. இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் இவை சில எடுத்துக்காட்டுகள். உலக அளவில் இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.

"எனில் தேசத்தின் ஆதிமூலம் எது? நதிமூலம் ரிஷிமூலம் போலவே தேசத்தின் மூலத்தையும் சொல்ல முடியாது. தேசத்தின் மூலத்தைத் தேடிப் போனீர்களானால் கடைசியாக உங்களுக்கு ஒரு கதைதான் பரிசாகக் கிடைக்கும். இமயத்தில் கொடி பொறித்த கதை. கனக விசயர் தலையில் கல்லேற்றிய கதை. கலிங்கத்தை வீழ்த்திப் பரணி பாடிய கதை. அனுராதபுரத்தையும் பொலனருவையையும் தீக்கிரையாக்கிய கதை..."

- இது நான் இருபதாண்டுகளுக்கு முன் எழுதியது. அப்போதுதான் இதற்கு எத்தனை எதிர்ப்புகள்; எத்தனை வசவுகள்.

ஆனால் அப்படி ஆத்திரப்பட்டவர்கள் எல்லோரும் இன்று சாதியின் அடிப்படையில் தமிழர்களை வரையறுக்கக் கிளம்பியுள்ளனர். சாதியைச் சொல், நீ தமிழனா இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். மணியரசன் முதல் இன்னும் பலரும் இன்று அப்படித் தமிழ்ச் சாதிகள் பற்றிப் பேசுகின்றனர்.

பட மூலாதாரம், NAAM THAMIZHAR

சில மாதங்களுக்கு முன் மலேசியாவில் நடைபெற்ற இந்தக் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் துண்டுச் சீட்டு கொடுத்து அதில் வந்திருந்தவர்களின் முகவரிகளோடு சாதிகளையும் எழுதச் சொல்லி வாங்கியுள்ளார்கள்.

2. ஒரு ஒப்பீட்டுக்காக இந்திய தேசிய உருவாக்கத்தின் கதையை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா, பாரதம் என்கிற கருத்தாக்கங்கள் எல்லாம் வரலாற்றில் மிகச் சமீபமாக உருவானவை. "தேசப் போராட்டங்கள்தான் தேசத்தை உருவாக்குகின்றனவே ஒழிய தேசம் தேசப் போராட்டங்களை உருவாக்குவதில்லை" - என ரெனான் சொன்னதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு 'இந்தியா' என்கிற கற்பிதம்தான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியா என ஒன்று கிடையாது என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். உண்மை. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பின் முதல் சுதந்திரப்போர் எனச் சொல்லப்படும் சிப்பாய்க் கலகத்தின்போது கூட 'இந்தியா' என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை.

'இந்திய தேசியக் காங்கிரஸ்' என இங்கு ஒன்று உருவாக்கப்பட்டபோது கூட அதை உருவாக்கியது ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் எனும் ஆங்கிலேயர்தான். பின் எப்போது இந்தியா என்கிற கருத்தாக்கம் உருவாகியது?

1905 ல் கர்சான் பிரபு வங்கத்தை இந்து வங்கம் (மேற்கு) எனவும் முஸ்லிம் வங்கம் (கிழக்கு) எனப் பிரித்தபோது இங்கு ஒரு எழுச்சியும் போராட்டமும் கிளர்ந்ததே அப்போதுதான் இந்தியா என்கிற கருத்து உருவானது. மகாகவி பாரதி அதை இப்படிச் சொல்கிறார்: வங்கப் பிரிவினையை ஒட்டி "தேசபக்தி என்கிற நவீன மார்க்கம்" தோன்றி, "நல்லோர்கள் சிந்தையை எல்லாம் புளகிக்கச் செய்தது" என 1908ல் அவர் எழுதினார்.

இந்த எழுச்சி இந்தியாவுக்குள் மத அடிப்படையில் முஸ்லிம்களுக்குத் தனி மாநிலம் என்கிற கருத்துக்கு எதிராக உருவானது. அந்த அடிப்படையில் ஆரிய சம்பத்து, பாரதம் முதலான அடையாளங்களுடன் இந்தியா என்பதைக் கற்பிப்பது தொடங்கியது. ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் காந்தி என்றொரு மனிதன் இந்திய அரசியலில் தோன்றினான்.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

அ. மார்க்ஸ்

அவன் இந்த மத அடிப்படையிலான தேசக் கற்பிதத்தை இயன்ற வரையில் எல்லோருக்குமான தேசியம் (Inclusive Nationalism) என்பதாகக் கட்டமைக்க உயிரைக் கொடுத்துப் போராடினான். ஆமாம் உயிரைக் கொடுத்துத்தான் போராடினான். அவனும் போனான். அடுத்த சில மாதங்களில் பாபர் மசூதிக்குள் இராமர் சிலைகள் வைக்கப்பட்டன. வட மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்தியாவிற்குள் முஸ்லிம்களை விலக்கிய தேசியம் (Exclusive Nationalism) ஒன்று வேகமாக வளர்ந்தது.

3. தமிழகம் தொன்மை வாய்ந்த ஒரு வரலாறு மற்றும் பண்பாட்டுப் பின்னணி கொண்ட ஒரு நாடு. இனக்குழுச் சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விவசாயமயமாக்கம், முதற்கட்ட அரசுருவாக்கம் எல்லாம் உருவாக்கப்பட்டபோதுதான் மொழி உணர்வு, நில எல்லை குறித்த உணர்வு (territorial consciousness) எல்லாம் உருவாகின்றன. மொழியையும் நில எல்லையையும் இணைத்துப் பேசும், "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலகத்து" என்கிற தொல்காப்பியப் பாயிரம் இந்தச் சூழலின் வெளிப்பாடுதான்.

இந்த மொழி - எல்லை உணர்வு தேசிய இன உணர்வின் ஒரு தொன்ம மாதிரி. "துடியன், பாணன், கடம்பன், பறையன் என இந் நான்கல்லது குடியும் இலவே" (புறநானூறு 335: 7-8) என்கிறது ஒரு புறநானூற்றுப் பாடல். இவ்வகையில், பல்வேறு இனக் குழுக்களின் தனித்துவங்கள், தலமொழி, பண்பாட்டு வேறுபாடுகள் எல்லாவற்றையும் உள்ளிணைத்த (inclusive) 'தமிழ் கூறும் நல்லுலகம்' எனும் ஒரு கருத்தாக்கம் இங்கு மேலெழுகிறது.

எனினும் அப்போது கூட ஒற்றை அரசு என்கிற ஒருங்கிணைப்பு முன் வைக்கப்படவில்லை என்பதற்கு "தமிழ்கெழு மூவர்" (அகம் 31:14) என்கிற கூற்று சான்றாகிறது.

அடுத்த 2500 ஆண்டுகளில் இங்கு என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. புதிய படை எடுப்புகள், புதிய சிந்தனைகள், மதங்கள், அரசுகள், குடியேற்றங்கள் என என்னென்னவோ நடந்துவிட்டன. தமிழக மன்னர்களும் படை எடுத்துச் சென்று நாடுகளைக் கைப்பற்றினார்கள், தமிழகத்தின் மீதும் படை எடுப்புகள் நடந்தன.

தமிழர்கள் இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் எனப் பல நாடுகளில் பாரம்பரியமாக வாழ்கின்றனர். தமிழகத்திற்குள்ளும் பலர் வந்து குடியேறித் தம் வேர்களை மறந்து, மொழியையும், மண்ணையும், அவற்றுக்குரிய அடையாளங்களையும் கைவிட்டு வாழ்கின்றனர்.

இன்று தமிழகத்தில் சுமார் 30 சதவீதம் இப்படியான மொழிச் சிறுபான்மையர் வாழ்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, வாக்ரிபோலி இப்படிப் பல மொழிகள் பேசுபவர்கள் இவர்கள். இவர்களுள் நில உடமையாளர்களும் உண்டு. நரிக்குறவர் போன்ற நாடோடிகளும் உண்டு. ஒட்டர்கள் போன்ற மண்வெட்டிக் கூலி தின்னும் மக்களும் உண்டு. மலம் அள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட அருந்ததியர்களும் உண்டு. முஸ்லிம்கள் உண்டு. கிறிஸ்தவர்கள் உண்டு.

இந்தப் பின்னணியில்தான் இங்கு பிரிட்டிஷ் ஆட்சி, சுதந்திர இந்தியா, மொழிவாரி மாநிலம் அதை ஒட்டிய போராட்டங்கள் எல்லாம் நடந்தேறின.

இன்று தமிழ்த் தேசியம் இங்கு வரையறுக்கப் படுவதில் இந்தச் சமகால வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக 19, 20ம் நூற்றாண்டு அரசியல் போக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தப் பின்னணியில் உருவான தமிழ் தேசியத்தை நாம் இரண்டாகப் பிரித்து அணுகலாம். அவை:

அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம், ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்.

அ. திராவிட இயக்கம் முன்னெடுத்த தமிழ்த் தேசியம்

தமிழ்நாட்டில் 30 சதவீதம் மொழிச் சிறுபான்மையர் உள்ளனர்; ஒ 12 சதவீதம் மதச் சிறுபான்மையர் உள்ளனர்; 18 சத வீதம் பட்டியல் சாதியினர் உள்ளனர். இவர்கள் யாரையும் ஒதுக்கிவிடாமல் உள்ளடக்கியது திராவிட தேசியம். இரண்டரை சதவீத அளவு உள்ள பார்ப்பனர்களைத்தான் அது வெளியில் நிறுத்தியது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக் கட்சிக்கும், பெரியார் முன்வைத்த திராவிடக் கருத்தாக்கத்துக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. நீதிக் கட்சியினர் பார்ப்பனர்களின் சமூக மேலாண்மையை (social hegemony) மட்டுமே எதிர்த்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான கல்வி வளர்ச்சி, அரசியல் நிர்வாகம், பதவிகள் ஆகிய எல்லாவற்றையும் அளவில் மிக மிகக் குறைவான பார்ப்பனர்களே கைப்பற்றிக் கொள்கிறார்களே என்கிற அடிப்படையிலேயே நீதிக்கட்சியின் அரசியல் இருந்தது.

பட மூலாதாரம், GNANAM

ஆனால் பெரியார் இந்தச் சமூக மேலாண்மையோடு பார்ப்பனர்களின் சடங்கு மேலாண்மையையும் (ritual hegemony) கேள்விக்குட்படுத்தினார். பிறப்பு முதல் இறப்பு வறையிலான அனைத்துச் சடங்குகளிலும் அவர்களுக்கு இருந்த பூசாரி நிலையையும் ஒழிக்க வேண்டும் என்றார்.

இந்து மதம், கடவுள் மறுப்பு ஆகியவை குறித்த கடும் விமர்சனங்களையும் இந்தப் பின்னணியிலிருந்தே முன் வைத்தார். சுயமரியதைத் திருமணம் போன்ற மாற்றுக்களையும் அவர் இதனூடாகவே நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.

அப்போது கூட அவர்கள் மீது வன்முறையையோ, அவர்களை முற்றாக ஒதுக்க வேண்டும் என்றோ, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றோ ,பெரியாரோ, வேறு எந்த திராவிட இயக்கத்தினரோ சொன்னதே இல்லை.

பார்ப்பனர்களுக்கும் கூட அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சத ஒதுக்கீடு கொடுத்துவிடலாம், வரலாறு பூராவும் இருந்ததுபோல அனைத்துப் பதவிகளையும் அவர்களே ஆக்ரமிப்பது என்பதற்குத்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுதான் பெரியார் சொன்னார். சரியாகச் சொல்வதானால் அவர் பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் எதிர்த்தார். பார்ப்பனரை எதிர்க்கவில்லை. பின்னால் வந்த திமுகவோ இந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பையும் கைவிட்டது.

மொத்தத்தில் திராவிட தேசியம் என்பது தமிழர்கள் எல்லோரையும் உள்ளடக்குவதாக இருந்தது. எல்லாவகைச் சிறுபான்மை மக்களுடனும் அது மிகவும் நெருக்கமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டாமையிலிருந்து விடுபட அவர்கள் இஸ்லாத்துக்கு மாற வேண்டும் என்றார் பெரியார். திராவிட சமயமும் இஸ்லாமும் ஒன்று என்றார்.

பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN

அண்ணாவோ தனது 'ஆரிய மாயை' நூலில் "முஸ்லிம்கள் திராவிட இனம்" என்றதோடு ஆரியத்திற்கெதிரான "திராவிட -இஸ்லாமிய கூட்டுப்படை" என்றெல்லாம் முழங்கினார். எனினும் தமிழகத்தை விட்டு ஆரியர்களை (அதாவது பார்ப்பனர்களை) வெளியேற்றுவது தம் நோக்கம் அல்ல என்றார். "திராவிடநாட்டிலிருந்து ஆரியரை ஓட்டுவதல்ல, ஆரிய பயத்தை ஓட்டுவதுதான் எங்கள் நோக்கம்" என்றார்.

மொத்தத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு Inclusive Nationalism. என்பதற்குப் பெரியார் வழி வந்த திராவிட இயக்கத்தினர் ஓர் எடுத்துக்காட்டாக இருந்தனர்.

திராவிட தேசியத்தின் இன்னும் இரண்டு அடிப்படைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திராவிடப் பிரிவினை பேசியபோதெல்லாம் பெரியார் கேரளம், கன்னடம், ஆந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிப் பேசினார் என்பதில்லை. இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியாரின் நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை அரசியல், அரசுப் பணிகள், அன்றாட வாழ்விற்குரிய சடங்குகள் ஆகியவற்றில் ஒழிப்பதுதான். அதற்குத் தடையாக இருப்பது இந்தியக் கூட்டாட்சி. இந்தக் கூட்டாட்சிக்குள் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பது சாத்தியமில்லை.

எனவேதான் கூட்டாட்சியிலிருந்து பிரிய வேண்டும் எனக் கோருவதாக வெளிப்படையாகச் சொன்னார். சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாகப் பிரிந்த பின்னர் அவர் தமிழ்நாடு பிரிவினையத்தான் பேசினார். அதை வெளிப்படையாகவும் சொன்னர்.1956 ஆகஸ்ட் 29 விடுதலை இதழில் இதை அவர் எழுதவும் செய்தார். 1938 தொடங்கியே பெரியார் 'திராவிடமே தமிழ்', 'தமிழே திராவிடம்' என எழுதியும் பேசியும் வந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது (விடுதலை, செப் 11, 1938).

இருந்தும் அரசியல் சொல்லாடல்களில் அவர் ஏன் தொடர்ந்து திராவிடநாடு எனச் சொல்லி வந்தார். அதற்கும் அவர் ஒரு விளக்கத்தைச் சொன்னார். தமிழன் என்று சொன்னால் பார்ப்பானும் வந்து ஒட்டிக் கொள்வானே, அதனால்தான் திராவிடன் எனச் சொல்ல வேண்டியதாகிறது என்றார்.

சுருக்கமாகச் சொல்வதானால் திராவிட இயக்கங்கள் பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு தமிழ்த் தேசியத்தை முன் வைத்தன.

ஆ. ம.பொ.சி வழிவந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் தமிழ்த் தேசியம்

ம.பொ.சி எனப்பட்ட ம.பொ. சிவஞானம் இங்குள்ள மொழிச் சிறுபான்மையரை வெளியே நிறுத்தி Exclusive Nationalism ஒன்றை முன்வைத்தார். பதிலாக அவர் பார்ப்பனர்களை உள்ளடக்கினார். இந்து என்கிற அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.

தமிழுணர்வு என்பது நாலரை கோடி தமிழ் மக்களுடன் மட்டுமே தன்னை இணைக்கிறது எனவும் இந்து என்கிற அடையாளம் தன்னை ஐம்பது கோடி மக்களுடன் இணைக்கிறது எனவும் காஞ்சி சங்கராசாரியார் ஏற்பாடு செய்த உலக இந்து மாநாட்டில் அவர் முழங்கியது குறிப்பிடத் தக்கது (மார்ச் 3,1976). மதச் சிறுபான்மையைப் பற்றி அவர் ஒன்றும் பேசவில்லையாயினும் அவரது பார்ப்பனீய ஆதரவு, இந்து மத அடையாளத்திற்கான அழுத்தம் என்பன இயல்பாகவே மதச் சிறுபான்மையினரை ஒதுக்கின.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த இரண்டாவது போக்கு இன்னொரு பரிமாணம் எடுத்தது. பெங்களூரு குணா என்பவர் 'திராவிடத்தால் வீழ்ந்தோம்' என்றொரு புத்தகம் எழுதினார். அப்பட்டமான வரலாற்றுப் புரட்டல்களுடன் கூடிய அந்த நூல் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடித்த கொடுமையான மன்னர் ஆட்சிகளை எல்லாம் பொற்காலம் என்றது.

இங்குள்ள மொழிச் சிறுபான்மையினர்தான் தமிழ் மக்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிற ஓர் அப்பட்டமான பொய்யை முன்வைத்தது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்றெல்லாம் வெறுப்பைக் கக்கியது.

வெறும் இரண்டரை சதமாக இருந்து கொண்டு பல மடங்கு அதிகமான அரசுப் பணிகளை எல்லாம் ஆக்ரமித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்களையும் பிற உயர்சாதியினரின் ஆதிக்கத்தையும் அது விமர்சிக்கவே இல்லை. ஏனென்றால் அவர்கள்தான் உண்மையான தமிழர்களாம்.

இவர்கள் இலக்காக்கித் தாக்கியதெல்லாம் இந்த 30 சதம் அளவு உள்ள மொழிச் சிறுபான்மையினரைத்தான்.

சரி, யார் அந்த மொழிச் சிறுபான்மையினர்? தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளைப் பேசுகிற சாதியினர்; உருது மொழி பேசும் முஸ்லிம்கள்; மார்வாரிகள் முதலானோரைத்தான் அவர்கள் தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணமான மொழிச் சிறுபான்மையினர் என்கின்றனர்..

இதில் ஒரு சிறு பகுதியாக உள்ள மார்வாரிகள் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் தமிழகத்தையே பல காலமாகத் தாயகமாகக் கொண்டு இங்கு வாழ்ந்து வருகிற சாதாரண மக்கள். இவர்களில் பெரும்பாலோர் இப்போது தமிழையே தாய்மொழியாகக் கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தமிழிலேயே படிக்க வைத்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்புவது என்றால் எங்கே போவார்கள்? நமது பண்பாட்டை ஏற்றுக் கொண்டு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மக்களில் பெரும்பாலோர் கூலிகளாகவும், சாதாரண பணிகளிலும் இருப்போர்.

பிற தமிழ்ச் சாதிகளாக இவர்களால் அடையாளம் காட்டப்படுகிறவர்களைப் போலவே பொருளாதார நிலை உடையவர்கள். இந்த மொழிச் சிறுபான்மையினரை வெளியே துரத்தாவிட்டாலும் அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்க வேண்டும், இட ஒதுக்கீடு போன்ற பலன்கள் இவர்களுக்குச் சென்று சேரக் கூடாது என்கிறார்கள்.

இங்கே நம்மோடு வாழ்ந்து நமது மலத்தை அள்ளி, இங்குள்ள சாக்கடைகளைச் சுத்தம் செய்து வாழ நேர்ந்த நம் அருந்ததியர் இனச் சகோதரர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாதென இவர்களின் ஆசான் குணா வெளிப்படையாகச் சொன்னார்.

அது மட்டுமல்ல தலித் மக்களின் விடுதலைக்காக முன்னின்று, உலக அளவில் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கருக்கு இங்கு ஊரெங்கும் சிலைகள் திறக்கப்படுவதை "அம்பேத்கராம் மராட்டியருக்கு" இங்கு சிலைகளை வைத்து சாதிச் சண்டைகளை ஏன் தூண்டவேண்டும் எனக் கேட்டவர்கள் இவர்கள்.

மார்வாரிகளிலும் கூட எல்லோரும் பெரிய வணிகர்களாக இருப்பதில்லை. அவர்களிலும் எளிய மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர் ஒருவர் பி.எஸ்.என்.எல்.லில் வேலை செய்கிறார். அடித்தளச் சாதியைச் சேர்ந்தவர். அவர் மனைவி ஒரு மார்வாரி இனத்தைச் சேர்ந்தவர்.

கூலிகளாகவும் வணிகர்களாகவும் சென்று இலங்கை, மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர் முதலான நாடுகளில் வசிக்கும் தமிழர்களை எல்லாம் அந்தந்த நாடுகள் திருப்பி அனுப்புவது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோமா? கி.ராஜநாராயணன் இப்படி ஒரு வந்தேறிதான். ஆனால் அவர் தமிழின் ஆக முக்கியமான எழுத்தாளர். நவீன தமிழுக்கு வளம் சேர்த்தவர். கரிசல் மண்ணில் புழங்கப்படும் தனித்துவமான தமிழ்ச் சொற்களுக்கு 'அகராதி' உருவாக்கிய தமிழறிஞர் அவர்.

அவருடைய மூதாதையர் எத்தனையோ தலைமுறைக்கு முன்னதாக இங்கு வந்தவர்கள். அவரை இன்று திருப்பி அனுப்புவது அல்லது அவரது குடும்பத்தாரை இரண்டாம் தர மக்களாக, உரிமையற்றவர்களாக நடத்துவது என்றால்... அத்தனை கொடூரமானவர்களா தமிழர்கள்?

இங்கு வாழும் பிற மொழியினர் எல்லோரும் தமிழகத்தைச் சுரண்டி வளம் கொழிப்பவர்கள் அல்ல. இவர்களால் ஒரிஜினல் தமிழர்கள் எனச் சொல்கிற எல்லோரும் இங்கு கூலி வேலை செய்து துன்புறுபவர்களும் அல்லர். எல்லா மக்களிலும் பணக்காரர்களும் உள்ளனர், ஏழை எளியோரும் உள்ளனர். குடந்தை, மதுரை போன்ற இடங்களில் சௌராஷ்டிரர்கள் உள்ளனர்.

மிகவும் அடித்தள நெசவாளிகள் அவர்கள். ஆம்பூர், வாணியம்பாடி முதலான பகுதிகளில் வசிக்கும் உருது முஸ்லிம்கள் எல்லோரும் தோல் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் அல்ல. தோல் தொழிற்சாலைகளில் பெரிய பதவிகளில் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்கள்தான் உள்ளனர்.

தோலைச் சுரண்டித் தூய்மைப்படுத்துவது முதலான, தூய்மைக் குறைவான வேலைகளில் எவ்வளவோ உருது பேசும் முஸ்லிம்கள் பணியில் உள்ளனர். இவர்களை எல்லாம் உருது பேசுபவர்கள் என்பதற்காகவே இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குதல் நியாயமா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இப்படி மொழிவாரி தேசியம் பேசும் ம.பொ.சி, குணா, சீமான், மணியரசன் போன்றோர் தமிழ்நாட்டில் தற்போது வாழ்கிற மக்களில் இப்படியான "தமிழர்கள் அல்லாதவர்களை" அடையாளம் காண என்ன வழியைக் கையாள்கிறார்கள்?

சாதி அடிப்படையில் அவர்கள் ஒரிஜினல் தமிழர்களை இனம் காண்கிறார்களாம். எந்தச் சாதி முறை, தீண்டாமை ஆகியவற்றை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்தச் சாதிமுறையை இவர்கள் இந்த நோக்கில் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

உன் சாதியைச் சொல் நீ தமிழனா, இல்லையா எனச் சொல்கிறேன் என்கிறார் சீமான். நீ ஒரு அருந்ததியன், சௌராஷ்டிர நெசவாளி, உருது பேசும் முஸ்லிம், என்றால் தமிழன் இல்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் சாதியில் நீ நாயக்கராக இருந்தால் நீயும் தமிழன் இல்லை., மண்வெட்டிக் கூலி தின்னும் ஒட்டர்களாக இருந்தால் அவர்களும் தமிழர்கள் இல்லையாம். அவர்கள் எத்தனை ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு, இலவசக் கல்வி முதலியன கூடாதாம்.

மக்களை இப்படிச் சாதி அடிப்படையில் கூறு போடும் இவர்கள் மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டர்களாகவும் உள்ளனர். தமிழர்களின் பெருமிதம் எனச் சொல்லி இவர்கள் கொண்டாடுவது எல்லாம் காலங் காலமாகச் சாதிமுறையையும் பார்ப்பனீயத்தையும் முன்னிறுத்திய பழங்கால மன்னர்களைத்தான். இங்கு கொடுமையான நில உடைமை முறைகள், சமஸ்கிருதக் கல்வி, தேவதாசி முறை ஆகியவற்றை எல்லாம் புகுத்திய ராஜராஜ சோழன்தான் இவர்களின் திரு உரு (icon). கொடும் ஏற்றத் தாழ்வுகளும், சாதிமுறையும், தீண்டாமையும் தலைவிரித்தாடிய சோழர் காலம் அவர்களைப் பொருத்த மட்டில் பொற்காலம்.

கூர்ந்து பார்த்தால் இவர்கள் தமிழுக்கும் உண்மையானவர்களாக இல்லை என்பது புலப்படும். எண்ணாயிரம் என்கிற இடத்தில் சோழர் காலத்தில் இருந்த கல்வி நிலையம் குறித்து எல்லோரும் பீற்றிக் கொள்வார்கள். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத் திட்டம் எல்லாம் முழுக்க முழுக்க சமஸ்கிருதமாகவே இருந்தது.

இவர்கள் இப்படி மொழி அடிப்படையில் தமிழர்களைக் கூறுபோடுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் மத அடிப்படையிலும் இவர்கள் தமிழர்களைப் பிரித்து நிறுத்துகிறார்கள்.

பார்ப்பனீய ஒதுக்கல்களுக்கும், வருண சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிரக மலர்ந்த சீர்திருத்த மதங்களான பௌத்தம், சமணம் ஆகியவற்றை இவர்கள் வட இந்திய மதங்கள் எனப் புறந் தள்ளுகின்றனர். அதன் மூலம் வருண சாதி அமைப்பை வலியுறுத்திய சனாதனப் பார்ப்பன மதத்தையே இவர்கள் தமிழர்களின் மதமாக முன் வைக்கிறார்கள். பார்ப்பனீயமும் வடநாட்டிலிருந்து இங்கு வந்ததுதான் என்பதைப் பற்றி இவர்கள் இம்மியும் கவலைப்படுவதில்லை.

இவர்களின் இந்தக் கணக்குப்படி இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியனவும் அந்நிய மதங்கள்தான். ஆனால் தமிழின் சிகரங்களாக உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் எனச் சொல்லப்படுபவையும், கிட்டத்தட்ட எல்லாத் தமிழ் இலக்கண நூல்களும் இவர்களால் வட இந்திய மதங்கள் எனச் சொல்லப்படக் கூடிய பௌத்த, சமணப் புலவர்களால் உருவாக்கப்பட்டவைதான். கிறிஸ்தவம் இங்கு அச்சைக் கொண்டு வந்தது. நம் மக்களுக்குக் கல்வியைத் தந்தது. முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்து மதுரைப் பல்கலைக் கழகம் ஐந்து தொகுதிகளாக நூல்கள் வெளியிட்டுள்ளது.

இந்து மதம் தொன்மையான மதம் என்பது உண்மைதான். இஸ்லாம் ஆயிரத்தும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கு நம்மோடு வாழும் மதம். கிறிஸ்தவம் ஐநூறு ஆண்டுகளாகத் தமிழிலிருந்தும் தமிழர்களிடத்திலிருந்தும் பிரிக்க இயலாமல் ஒன்று கலந்த மதம். இன்று தமிழகத்தில் தடம் இல்லாமற் போனாலும் பௌத்தம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் செழித்திருந்த மண் இது.

இன்று தமிழ் பவுத்தம் என்றொரு ஆய்வுத்துறையே உருவாகியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பின் குறியீடாக அண்ணல் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட மதம் அது.

இத்தனையையும் ஒதுக்க வேண்டும் என்றால் இது தேசியமா இல்லை பாசிசமா?

பெரியாரை இவர்கள் ஏன் கரித்துக் கொட்டுகிறார்கள்? இவர்களால் கொண்டாடப்படும் பார்ப்பனீயத்திற்கு உறுதியான எதிரியாக அவர் இருந்தார் என்பதுதான் அவர்களின் எரிச்சல்.

இவர்கள் பேசுவது மக்களைச் சாதி, மதங்களுக்கு அப்பால் ஒன்றிணைக்கும் தமிழ்த் தேசியம் அல்ல. மாறாக மக்களைச் சாதி, மத அடிப்படையில் கூறு போடும் தமிழ்ப் பாசிசம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: