133 வருடங்களாக நாடகக் கலையை பாதுகாத்து வரும் ஒரு குடும்பத்தின் கதை

'சுரபி' நாடகக் குழுவினர் படத்தின் காப்புரிமை BBC/KAJAPASHA

நாடகக் குழுக்களுக்கு பெரிய அளவில் தற்போது யாரும் ஆதரவு அளிப்பதில்லை. அப்படிப்பட்ட இக்காலத்தில்தான், தெலுகு மொழி பேசும் குடும்பம் ஒன்று இக்கலையினை பாதுகாக்க பல தலைமுறைகளாக போராடி வருகிறது.

கடந்த 133 வருடங்களாக மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்கள் புகழ்பெற்ற 'சுரபி' நாடகக் குழுவினர். இதிலுள்ள கலைஞர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த நாடகக்குழு தன் பழைய தோற்றத்தை இழந்துள்ளது.

ஆனால், ‘சுரபி‘ நாடகக் குழுவினரின் தற்போதைய தலைமுறையினர், நாடகக் கலையை உயிர்ப்புடன் வைக்க கடுமையாக போராடி வருகின்றனர். அதுவும் அவர்களின் கல்வியை சமரசம் செய்து கொள்ளாமல்.

நாடகத்தில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், இந்தக் கலையை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து புரிந்து கொள்ளவும் ஹைதராபாத்தில் உள்ள இந்த இளம் கலைஞர்களை சந்தித்தது பிபிசி.

கலைஞர்களாக அறிஞர்கள்

படத்தின் காப்புரிமை BBC/KAJAPASHA

எம்.ஃபில் மற்றும் பிஎச்டி படித்து பட்டம் பெற்றிருந்தாலும், ‘சுரபி‘ நாடகக்கலை குடும்பத்திலுள்ள இந்த தலைமுறையினர் கலைக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதில்லை.

தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு வேலைகளில் சேர்ந்திருந்தாலும், இந்த கலையையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க, மாலை நேரங்களில் அவர்கள் மேடை நாடகங்களை நடத்தி வருகிறார்கள்.

நாடகக் கலையில் பி எச் டி பட்டம் பெற்றுள்ள சிந்தே ரமேஷ், தொலைக்காட்சி நிலையம் ஒன்றிலும், அகில இந்திய வானொலியிலும் பகுதி நேர பணியாளராக பணியாற்றுகிறார். மாலை நேரங்களில் நாடக மேடையின் தொழில்நுட்ப அம்சங்களை கவனித்து கொள்வார்.

"நான் எம்.பி.ஏ படித்துள்ளேன். நிதி சிக்கல்கள் இருந்தாலும், நாடகக் கலையை பாதுகாக்க தொடர்ந்து நடித்து வருகிறேன். என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பாவுடன் மேடையில் நடிப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது" என்கிறார் சுரபி ஜெயச்சந்திரா.

படத்தின் காப்புரிமை BBC/KAJAPASHA

இந்த ஆண்டின் சிறந்த நாடகக் கலைஞருக்கான ஜெ எல் நரசிம்ம ராவ் விருதினை இவர் பெற்றுள்ளார்.

அக்குடும்பத்தில் மற்றொரு கலைஞரான சுவப்னா சுபத்ரா, நாடகக் கலையில் செய்த எம். ஃபில் ஆய்வுக்கு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தற்போது பி எச் டி ஆய்வு மேற்கொண்டு வரும் அவர், நாடகத்தில் நடிக்கவும் நேரம் ஒதுக்குகிறார்.

பி எச் டி ஆய்வு மேற்கொண்டு வரும் நிருமபா சுனேத்ரியும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆந்திரா அரசாங்கத்தால் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை இவர் பெற்றுள்ளார். மேலும், சுரபி நாடக மேடைகளுக்கு ஒளி அமைப்பையும் பார்த்துக் கொள்கிறார்.

படத்தின் காப்புரிமை BBC/KAJAPASHA

நாடகக் கலையில் எம். ஃபில் படித்து வரும் சுரபி அவெதி நாகேஷ்வர ராவும் ஒரு நாடக கலைஞர்தான். அதே நேரத்தில் தூர்தஷனில் ஒப்பனை கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.

தன்னுடைய சிறு வயதில் இருந்தே பல நாடகங்களில் கிருஷ்ணா, பிரகலாதா, பாலவர்தி போன்ற புராண கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக தெரிவிக்கிறார் பத்தாம் வகுப்பு படித்து வரும் லோசனா.

ஒளி இழந்து வரும் வாழ்க்கை

தினந்தோறும் பண நெருக்கடி சந்தித்து வரும் நிலையிலும் கூட, கலையின் மீதே அவர்களின் ஆர்வம் உள்ளது.

மத்திய அரசு உதவி செய்தாலும், தங்களது தேவைகளுக்கு போதுமானதாக அந்த உதவி இல்லை என்கிறார் சுரபி ஷ்யாமலா.

படத்தின் காப்புரிமை BBC/KAJAPASHA

26 வருடங்களாக பல்வேறு நாடகங்களில் நடித்து வருகிறேன். 'பட்டாள பைரவி' என்ற நாடகத்தில் பெண் கடவுளாக நடித்து, என் சக்திகளை வைத்து பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன். ஆனால், என் நிஜ வாழ்க்கையில் என் குழந்தையின் ஆசைகளை நிறைவேற்ற எனக்கு சக்தி இல்லை" என்று புலம்புகிறார் ஷ்யாமலா.

சுரபியின் வரலாறு

1880களில், சுரபிக் குழுவின் முன்னோர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் நாட்டுப்புற கலைஞர்களாக பணியாற்றினர்.

பொம்மலாட்டம் நடத்திய கொண்டிருந்தவர்கள் பின்னர் மெதுவாக 'சுரபி' என்ற பெயரில் நாடகக் கலைஞர்களாக மாறினார்கள் என்று 'தெலுகு நாடக விகாசம்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் அப்பா ராவ் விவரிக்கிறார்

1885ஆம் ஆண்டில் சுரபி குழு முதல்முறையாக 'கீச்சக வதம்' (மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்வு) என்று தலைப்பிடப்பட்ட நாடகத்தை அரங்கேற்றியது என்று கூறுகிறார் சுரபி நாகேஷ்வர ராவ்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் சுரபி நாடகக் குழுவை தொடங்கினர். பின்பு பல தலைமுறைகளாக இது தொடர்ந்து வந்தது.

பல புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், விதவிதமாக மேடை அமைத்தும் நாடகம் நடத்துவதுதான், தற்போதும் இந்த கலையை பாதுகாக்க அவர்கள் பயன்படுத்தும் தாரக மந்திரமாகும்.

இந்த ஒட்டுமொத்த குடும்பமும் இக்கலையின் மீது வைத்திருக்கும் அன்புதான், இவர்கள் இன்னமும் இதை பாதுகாத்து வருவதற்கு காரணமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்