சேலம் யானையைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி

சேலம் யானையைக் கருணைக் கொலைசெய்ய அனுமதி

நோயால் அவதிப்பட்டுவரும் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானையை கருணைக் கொலைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனனேஸ்வரர் கோவில் யானையான ‘ராஜேஸ்வரி‘ கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டுவருகிறது. 42 வயதான இந்த யானை, 6 வயதில் இந்தக் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், முதுமையின் காரணமாகவும், கால்வாத நோயால் பாதிக்கப்பட்டதாலும் அதன் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நிற்க முடியாத அந்த யானை கடந்த மாதம் ஐந்தாம் தேதி முதல் படுத்த படுக்கையாகவே கிடந்தது.

அந்த யானைக்கு ஊசி மூலம் குளூகோசும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும், தாது உப்புகளும் செலுத்தப்பட்டுவந்தன. இருந்தபோதும் யானையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், யானையின் முன் வலது பாதத்தில் புழுக்கள் பரவ ஆரம்பித்தன. இவை தொடர்ந்தும் பரவிவருகின்றன.

இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த சமுக ஆர்வலரான ராதாகிருஷ்ணன் கடந்த மாதம் இந்த யானைக்கு முறையான சிகிச்சை வழங்கக்கோரி முதன்மை தலைமை வன பாதுகாப்பு அதிகாரியிடம் மனு அளித்தார்.

இதையடுத்து, ஒரே பக்கமாய் படுத்துகிடந்த யானையை திருப்பி படுக்க வைப்பதற்கு பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முயற்சியில் யானைக்கு மேலும் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையில், சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான முரளீதரன் என்பவர், இந்த யானையை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்ககை முன்னதாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி , நீதிபதி அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்து அறநிலையத்துறையும், விலங்குகள் நல வாரியமும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென கூறி வழக்கை ஒத்திவைத்திருந்தது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் யானைக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை பலனளிக்கவில்லையென தெரிவித்தார்.

இதையடுத்து, சேலம் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அந்த யானையைப் பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் இந்து அறநிலையத் துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென்றும், அந்த அறிக்கையில் யானையைக் குணப்படுத்த முடியாது என கூறப்பட்டால், அந்த யானையைக் கருணைக் கொலை செய்யலாம் என்றும் கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

காட்டு யானைக்கு புகைப்பழக்கமா? திகைக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
காட்டு யானைக்கு புகைப்பழக்கமா? ஆச்சரிய காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: