ஆந்திரா: வலுக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை - 5 முக்கிய தகவல்கள்

ஆந்திராவில் வலுக்கும் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கை - 5 முக்கிய தகவல்கள் படத்தின் காப்புரிமை Getty Images

ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி அங்குள்ள 'பிரத்யக ஹூடா சாதனா சமிதி' என்ற அமைப்பு மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை தவிர்த்து முக்கிய எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளான ஜன சேனா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையை அமல்படுத்தவும், ஆந்திர பிரதேச மாநிலத்தை மறுசீரமைக்கும் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை செயல்படுத்தவும் பல காலமாக போராடி வரும் தெலுங்கு தேசம் கட்சி இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முன்னர், அமித் ஷா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும், பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவையிலிருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியிருந்தது.

மறுபுறம், மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திரா எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

சிறப்பு மாநில அந்தஸ்து என்றால் என்ன? அதனால் மாநிலங்களுக்கு என்ன பயன்? சிறப்பு அந்தஸ்த்தை யார் வழங்க வேண்டும்? போன்ற தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

1. இந்தியாவில் இதுவரை அசாம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் என மொத்தம் 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

2. சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் தலைமையிலான தேசிய மேம்பாட்டு அமைப்பு மற்றும் திட்ட கமிஷன் ஆகியன முடிவு செய்யும். ஆனால், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்ட கமிஷனுக்கு பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இதில் மத்திய நிதித்துறையும் முடிவெடுக்க வேண்டும்.

3. மத்திய அரசு வழக்கமாக மாநிலங்களுக்கு வழங்கும் உதவித் தொகையில் பெரும் பங்கு சிறப்பு மாநில அந்தஸ்தை கொண்டுள்ள 11 மாநிலங்களுக்கு செல்லும். மீதமிருக்கும் தொகை பிற மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

4. மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் சிறப்பு அந்தஸ்தில்லாத மாநிலத்துடன் ஒப்பிடும் போது, மாநில அரசின் பங்கு சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களில் குறிப்பாக வட கிழக்கில் உள்ள மாநிலங்களில் குறைவாக இருக்கும்.

5. மத்திய அரசின் உதவித்தொகை மட்டுமின்றி, மத்திய வரிகளை பரிமாற்றம் செய்யும்போது ஒரு குறிப்பிடத்தக்க தொகையை சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் பெறும். இதுதவிர, புதிய தொழிற்சாலைகளை ஈர்க்கும் வகையில் அந்த பிராந்தியத்திற்குள் நிறுவப்படும் தொழிற்சாலைகளுக்கு மானியம் மற்றும் வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்