மாணவிகளைத தவறாக வழிநடத்திய பேராசிரியை இடைநீக்கம்; கைதுசெய்ய வலியுறுத்தல்

தவறான வழிநடத்திய பேராசிரியை படத்தின் காப்புரிமை EMMANUEL DUNAND

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் துணைப் பேராசிரியர் ஒருவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறான செயல்களுக்குத் தூண்டுவது போன்ற தொலைபேசி உரையாடலின் பதிவு சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, அந்தப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டி உயர் பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.

படத்தின் காப்புரிமை DEVANGA ARTS COLLEGE

இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.

இந்த விவகாரம் வெளியானதும் கல்லூரி நிர்வாகம், நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியை நிர்மலாதேவியைக் கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி மாதர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள், இன்று அந்தக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்திருக்கும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "இதுபோன்ற தவறான செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக அரசு தவறு செய்திருக்கும் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி, தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். ராஜராஜனிடம் பிபிசி கேட்டபோது, "இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, உள்ளேயே விசாரித்து அவர்களுடைய மேலிடத்திற்கு அறிக்கை அனுப்புவதாகத் தெரிவித்துவிட்டார்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளும் புகார் செய்யவில்லை. கல்லூரியும் புகார் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

சற்று நேரத்திற்கு முன்பாக, காவல்துறை கண்காணிப்பாளர், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் சென்று ஆலோசனை நடத்திவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்