'ஒரு நாள் முதல்வரானால்' பெங்களூருவாசிகள் என்ன செய்வார்கள்? #BBCNewsPopUp

பெங்களூரு #BBCNewsPopUp

நீங்கள் 'முதல்வன்' திரைப்படத்தை பார்த்திருக்கக்கூடும். அத்திரைப்படத்தில் 'ஒரு நாள் முதல்வராக இருந்துப்பார்' எனும் முதலமைச்சரின் சவாலை நாயகன் ஏற்றுக்கொள்வார். அத்திரைப்படத்தில் 24 மணி நேரத்தில் அரசியல் மற்றும் அதிகார அமைப்பை வெற்றி கொண்டு மக்களின் மனதை வென்று முடிப்பதாக நாயகன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.

அந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது 'நான் ஒருநாள் முதல்வராக்கப்பட்டால் என்ன செய்யமுடியும்? '' என பார்வையாளர்கள் வியந்து எண்ணியிருக்கக்கூடும் என உறுதியாகச் சொல்கிறேன். மிகவும் வலிமைவாய்ந்த ஓர் பதவியை ஏற்றுக்கொள்ள யாருக்குத் தான் ஆசை இருக்காது!

பிபிசி பாப் அப் அணியானது பெங்களூருவில் உள்ள மக்களுக்கு முதலைமைச்சர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பையும், கர்நாடக முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்தால் அவர்கள் என்னென்ன விஷயங்களில் முதலில் கவனம் செலுத்துவார்கள் எனக் கூறுவதற்கு ஓர் வாய்ப்பையும் வழங்கியது. அது குறித்த காணொளி இங்கே

நாற்காலியில் உட்காரும் அந்த வாய்ப்பை நாங்கள் வழங்குவதற்கு முன்னதாக அரங்கிற்கு வந்த மக்களிடம் அவர்களது யோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்டோம். அவர்கள் ஒருமித்த குரலில் கேட்டது கர்நாடகாவுக்கு பிபிசியின் பிரத்யேக சேவை வேண்டும் என்பதே!

இந்தியாவில் சமீபத்தில் நான்கு மொழி சேவையை பிபிசி துவக்கியது. பிபிசி தெலுகு, பிபிசி மராத்தி, பிபிசி குஜராத்தி, பிபிசி பஞ்சாபி ஆகியவை அந்நான்கு சேவைகளாகும்.

பிபிசி கன்னடா என்பது ஒருகாலகட்டத்தில் நனவாகக்கூடும். அதுவரையில் கர்நாடக மாநிலத்தில் நடக்கும் செய்திகளையும் பிபிசி சேகரித்து அதன் வாசகர்களுக்கு வழங்கும்.

சரி, முதலமைச்சர் விஷயத்துக்கு வருவோம். பெங்களூருவில் 'நான் முதல்வரானால் என்ன செய்வேன்' என்பது குறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இங்கே.

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் நீண்டகாலமாக கொழுந்துவிட்டு எரியும் பிரச்னை இது. குறிப்பாக உச்ச நேரங்களில் வண்டிகள் ஆங்காங்கே நீண்டநேரம் நிற்பது வாடிக்கை. ஓர் ஆய்வின்படி ஒரு பெங்களூரு குடிமகன் ஒரு வருடத்தில் 240 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் செலவிடுகிறான். இது மோசமான சூழ்நிலை என்றும் இதனால் பலர் வேலையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். #BBCNewsPopUp நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெருவாரியானோர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையைத் தான் முன்னுரிமை கொடுத்து தீர்ப்போம் எனக்கூறினார்கள்.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

இறக்கும் தருவாயில் ஏரிகள்

'ஏரிகள் நகரம்' என அறியப்பட்ட பெங்களூரு தற்போது 'எரிந்துகொண்டிருக்கும் ஏரிகளின் நகரம்' என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஏரிகளில் குப்பைகள் அதிகளவு கொட்டப்படுவதால் அடிக்கடி தீப்பிடித்துக் கொள்கிறது. சில நேரங்களில் ஏராளமான கழிவு நீருடன் சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொட்டப்படும் குப்பை பொருட்கள் கலந்துவிடுவதால் பெரிய அளவில் நுரை ஏரியில் காணப்படுகிறது.

மெட்ரோ விரிவாக்கத்துக்கான காலக்கெடு

கடந்த 2006-ம் ஆண்டு பெங்களூரில் மெட்ரோ ரயிலுக்காக பணிகள் தொடங்கின. ஆனால் விரிவாக்க பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன. ஏற்கனவே இயக்கப்படும் இரு வெவ்வேறு முனைகளில் லட்சக்கணக்கானோர் தினமும் பயணிக்கின்றனர். எனினும் பெங்களூரு மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இவை போதாது எனக் கூறுகின்றனர் மேலும் விரிவாக்கம் வேகமாக நடைபெற வேண்டிய அவசியம் உள்ளது என்கின்றனர்.

பாதசாரிகளுக்கு சாதகமான சாலை திட்டம்

'ஒரு நாள் சி எம்' திட்டத்தில் பங்கேற்ற வினய் என்பவர் சாலை பயன்பாடு படிநிலையில் மாற்றம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கடைசியாக தனியார் போக்குவரத்துக்கு இடமளிக்கப்படும் என்றார்.

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

குழிகள் மற்றும் உள்கட்டுமானம்

பெங்களூரு குழிகளுக்குப் பெயர்போனது. சில குழிகளை வைத்துதான் நகரத்துக்கான சாலைகளை அடையாளம் காண்கிறார்கள் அங்கு வசிக்கும் மக்கள்.

வன ஆக்கிரமிப்பு

வன ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க மக்கள் விரும்புகிறார்கள். ஒரு சிஏஜி அறிக்கையின்படி அம்மாநிலத்தில் கடந்த 19 ஆண்டுகளில் வன ஆக்கிரமிப்பு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

அனைவருக்குமான சுகாதாரத் திட்டம்

பெங்களூரில் மிஷனரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அர்ச்சனா, ஏழைகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்குமாறு செய்வதற்கே தாம் முன்னுரிமை கொடுக்கப்போவதாக தெரிவித்தார். தான் ஒரு நாள் முதல்வரானால் அனைவருக்கும் சாத்தியமான வகையிலான மருத்துவ வசதிகளை செய்துதருவேன் என்றார்.

பள்ளியில் ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்தல்

தென் இந்தியாவில் ஆங்கிலம் என்பது பொதுவாக புரிந்துக் கொள்ளப்படும் மொழி என்றாலும் கூட குடிமக்களில் சிலர் ஆங்கில மொழி தங்களது மொழியை ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை என்கின்றனர். ஓர் இளம் மாணவி பேசுகையில் தான் ஒரு நாள் முதல்வரானால் பள்ளிகளில் ஆங்கில ஆதிகக்கதை ஒழித்துக் காட்டுவேன் என்றார்.

பிபிசி ’பாப் அப்’ அணியின் இலக்கு தற்போது பெங்களூரு மக்கள் பகிரும் யோசனைகள் குறித்த கட்டுரைகளை வெளியிடுவதாகும்.

உங்களின் கதைகளை சேகரிக்கும் வகையில் உங்கள் மாநிலத்தில் இருப்போம். இந்தப் பகுதியை தொடர்ந்து கவனியுங்கள் மற்றும் எங்களை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பின்தொடர்ந்து #BBCNewsPopUp மற்றும் #KarnatakaElection2018 ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி கலந்துரையாடலில் இணைந்து கொள்ளுங்கள்

உங்களின் செய்தியறிக்கை அல்லது கதை பிபிசியில் வெளிவரலாம்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: