கத்துவா பாலியல் வன்கொடுமை: காஷ்மீர் அரசியலில் யாருக்கு பின்னடைவு?

  • சுஜாத் புகாரி
  • மூத்த பத்திரிகையாளர்

அரசியலில் எதிரெதிர் துருவங்களான மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பா.ஜ.க இடையே கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத கூட்டணி 2015 ஆம் ஆண்டு உருவாகி, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் இக்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றின. அன்று முதல் அதற்கான எதிர்மறை விமர்சனத்தை பி.டி.பி (மக்கள் ஜனநாயகக் கட்சி) எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசியல் லாபம் யாருக்கு கிடைக்கும்?

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/AFP/Getty Images

ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் எட்டு வயதான பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் என்ற இக்கட்டான நிலையில் கூட்டணி கட்சி அமைச்சர்களை பதவி விலகச் செய்தார் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி.

சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் ஆகிய இரண்டு பா.ஜ.க அமைச்சர்களும் பதவி விலகவேண்டும் என்று மெஹ்பூபா முஃப்தி கட்டாயப்படுத்தியதால், தற்போது கூட்டணியில் ஒருவித சலசலப்பு தென்படுகிறது.

தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

வியப்பாக இருக்கிறதா? இதற்கு காரணம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது ஒரு முஸ்லிம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்துக்கள் என்பதே. இதுதான் இந்த விவகாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்து ஆட்டிப்படைக்கிறது.

பட மூலாதாரம், MOHIT KANDHARI/BBC

அரசின் பங்கு

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்திய இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது.

கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று வழக்கறிஞர்களுக்கு எதிராக கத்துவாவில் நடைபெற்ற பேரணிக்கு இடையே, அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிராக மாறின.

சிறுமி கொலை விவகாரத்தில் மாநிலமே இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில், முதலமைச்சருக்கு இந்த சிக்கல், பெரும் சவாலாக உருவெடுத்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்; தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும், எந்தவிதமான மோசடிகளும் நடைபெறாது என்றும் முதலமைச்சர் முஃப்தி இந்த விவகாரம் வெளியான முதல் நாளிலேயே உறுதி கூறியிருந்தார்.

பட மூலாதாரம், MOHIT KANDHARI/BBC

மெஹ்பூபா முஃப்தி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்

இந்த வழக்கில் எஸ்.எஸ்.பி ரமேஷ் குமார் ஜல்லா தலைமையிலான காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவை முதலமைச்சர் பெரிதும் நம்பியிருந்தார். அவர் ஒரு காஷ்மீர் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோருடன் தொடர்பு கொண்ட மெஹ்பூபா இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று வழக்கறிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் நீதித்துறை செயல்முறையை சீர்குலைப்பதாக இருந்தன. அதையடுத்து நிலைமை மேலும் மோசமானது.

இந்நிலையில் மெஹ்பூபா முஃப்தி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த கட்சியின் தலைமைக்கு புரியவைப்பதில் வெற்றியடைந்தார்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கினால் ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த பா.ஜ.க, வேறு வழியில்லாமல் மெஹ்பூபாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது அவருக்கு கிடைத்த வெற்றியே.

பட மூலாதாரம், Getty Images

மெஹ்பூபா முஃப்தியின் நிலைமை வலுவாகிவிட்டதா?

ஆசிஃபா வன்கொடுமை வழக்கில் எடுத்த கடுமையான நிலைப்பாட்டினால் அரசியல் ரீதியாக மெஹ்பூபா வலுவடைந்திருக்கிறாரா என்றால் அதற்கு ஆம் என்பதே சரியான பதிலாக இருக்கும்.

ஏற்கனவே, மத அடிப்படையில் மாநிலம் ஏற்கனவே பிளவுண்டு இருக்கும் நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்ற உணர்வுப்பூர்வமான வழக்கில் முடிவெடுப்பது முஃப்திக்கு கடினமான சவால் என்றே கூறலாம்.

அமைச்சரவையில் இருந்து பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் வெளியேறும் முடிவு, கூட்டணிகே பங்கம் ஏற்படுத்தலாம்.

ஆனால் அவர் இந்த விவகாரத்தின் ஆழத்தை புரிந்துக் கொண்டு மிக்க கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார் முதலமைச்சர்.

இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து 25 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியல் அனைவரும் அறிந்ததே.

சரி, பிரச்சனை பெரிதாகிவிட்ட நிலையில், வாக்களித்த வாக்களிக்கப் போகின்ற இந்துக்களை எப்படி சமாதானப்படுத்துவது? பதவி விலகிய இரண்டு அமைச்சர்களைத் தவிர, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் சிபிஐ விசாரணை கோருவதும் வேறு எதற்கு?

பட மூலாதாரம், Getty Images

மெஹ்பூபாவின் இந்த முடிவு ஏன் முக்கியம் பெறுகிறது?

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில் இருந்து இன்றுவரை முக்கியமான பிரச்சினைகள் எதிலுமே பா.ஜ.க, மெஹ்பூபாவுக்கு ஆதரவு வழங்கவில்லை.

2015 நவம்பர் 7ஆம் நாள் ஸ்ரீநகரில் நடந்த பேரணியில் பிரதமர் மோதி, முதலமைச்சர் முஃப்தி முகம்மது சயீதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது பட்டவர்த்தனமானது. காரணம்? பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவளித்தார் மெஹ்பூபா முஃப்தி.

காஷ்மீரில் ராணுவக் கொள்கை போன்ற ஒரு கடுமையான கொள்கையை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதற்கு பி.டி.பி ஆதரவளிப்பதில்லை. ஏனெனில் பி.டி.பி மென்மையான பிரிவினைவாத அணுகுமுறை கொள்கையை கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கூட்டணியின் நோக்கங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் அரசியல்

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள், ஹுரியத், பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் போன்றவையே பா.ஜ.க-பி.டி.பி கூட்டணியின் முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.

ஆனால் பா.ஜ.க இந்த விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பி.டி.பியின் அஸ்திவாரத்தை அசைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.

பி.டி.பியின் நிலைப்பாட்டை ஏற்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஹூரியத் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பா.ஜ.கவின் பிரதான கருத்தாக்கத்திற்கு எதிரானதாக இருக்கும்.

மேலும் ஜம்மு முதல் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க தனது தேர்தல் அரசியலை நடத்திவருகிறது.

ஆசிஃபா வழக்கை சிபிஐக்கு ஒப்படைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, பா.ஜ.க தனது அமைச்சர்களை பதவி விலகச் செய்தது அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

ஏனெனில் இந்தக் கூட்டணியில் தொடர்வதே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முறையாக வெற்றி பெற்ற பா.ஜ.க அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் இருப்பதை மறந்துவிட முடியாது.

இந்த சூழ்நிலையில், ஜம்மு & காஷ்மீரைப் போன்ற மாநிலத்தில், பா.ஜ.க இருக்கும் இடத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. இப்போது இருக்கும் மடத்தை காலி செய்துவிட்டால் பிறகு ஒண்டுவதற்கு இடம் கிடைப்பது பிரச்சனையாகிவிடலாம்.

பட மூலாதாரம், Getty Images

வெற்றியாளராக உருவெடுத்த மெஹ்பூபா முஃப்தி

கிடைத்த சில தகவல்களின்படி, பா.ஜ.க. தனது அமைச்சர்களை காப்பாற்ற முயன்றால், அது கூட்டணியை கூட்டணியில் பிளவு ஏற்படுத்தக்கூடும். தேர்தல் எதிர்வரவிருக்கும் நிலையில் இந்த ஆபத்தை விலை கொடுத்து வாங்க பா.ஜ.க தயாராக இல்லை.

இதுதான் மெஹ்பூபா முஃப்தி அழுத்தம் கொடுத்ததற்கும் அது வெற்றி பெற்றதற்கும் காரணம். தனது கட்சியை சேர்ந்த நிதியமைச்சர் ஹசீப் த்ராபூவை அமைச்சரவையில் இருந்து நீக்கிய முஃப்தி, மற்றொரு வலுவான செய்தியையும் கொடுத்திருக்கிறார்

கூட்டணி மற்றும் மாநில அரசின் பொறுப்பை தனது தோளில் சுமந்திருப்பதான மிதப்பில் ஹசீப் த்ராபூ இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.

ஹசீப் த்ராபூவும், ராம் மாதவும் இந்த கூட்டணி உருவாவதற்கான காரணம். காரண-காரியங்கள் எதுவாக இருந்தாலும், நோக்கம் கட்சியின் நன்மையாகவே இருக்கவேண்டும். அது மாறும்போது யாராக இருந்தாலும் வெளியேறவேண்டும் என்ற செய்தியை மெஹ்பூபா, த்ராபூவை நீக்கி வெளிப்படுத்தினார்.

ஆனால் மெஹ்பூபா எதிர்கொள்ளும் உண்மையான சவால் காஷ்மீரின் பாதுகாப்புடன் இணைந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில், காஷ்மீர் அரசியலில் சுண்டிவிடும் நாணயம், மெஹ்பூபாவுக்கு சாதகமாக இருக்குமா என்பதை காலமே கணித்து சொல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: