#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா?

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் மூன்றாவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

படத்தின் காப்புரிமை Getty Images

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகளின்மீது ஒரு பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கின்றன. அதைத் தொடர்ந்து தமிழ்த்தேசியம் குறித்து நெடுங்காலமாக நடந்துவரும் விவாதமும் கூர்மையடைகிறது. காவிரி போராட்டங்களில் தமிழ்த்தேசியம் பேசுவோரைவிட திமுகவினரே அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள்.

திமுக முன்னின்று நடத்திய கடையடைப்பும் கருப்புக்கொடிப் போராட்டமும் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. டிவிட்டர் பரப்புகளையும் (#IndiaBetraysTamilnadu, #GoBackModi), கருப்பு பலூன் போராட்டங்களிலும் இருதரப்பும் சமமாக கலந்துகொண்டார்கள். ஆனால் ஊடகங்களிலும் சமூக வெளியிலும் அதிகம் பேசப்பட்ட போராட்டங்களாக அமைந்தவை சுங்கச்சாவடிகளை நொறுக்கியது, நெய்வேலி போராட்டம், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டம், விமான நிலைய முற்றுகை போன்றவைதான்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகள் இவற்றுக்கு தலைமை தாங்கின. பல தமிழ்த்தேசிய, பெரியாரிய, தலித், இடதுசாரி அமைப்புகளும் இவற்றில் பங்கெடுத்தன.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவருக்கும் தமிழ்த்தேசிய ஆதரவு அணியினருக்கும் இடையிலான போராட்டம் என்பது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. முன்பு, குறிப்பாக 2009க்கு பின்பு, இவ்விரு தரப்பினரும் ஒரே போராட்டக்களத்தில் இணைந்து செயல்பட்டதில்லை என்பதோடு இரு வேறு துருவங்களாகவே இருந்தார்கள். எடுத்துக்காட்டாக ஈழம் தொடர்ந்த எந்த போராட்டக்களத்திலும் 2009 க்குப் பிறகு இவ்விரு தரப்பினரும் சேர்ந்திருந்ததில்லை. சமூகநீதி தொடர்பான பிரச்னைகளில்கூட, பெரும்பாலும், இவ்விரு தரப்பினரும் கைகோர்த்து களம் கண்டதில்லை. இரண்டு வாள்கள், இரண்டு உறைகளில் இருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், தற்போது நீட் தேர்வு, காவிரி, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட புதிய களங்களில் - குறிப்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டங்களுக்குப் பிறகு - பாஜக-அதிமுக கூட்டு நடவடிக்கையின் எதிர்வினையாக - தற்போதெல்லாம் திமுகவும் அதன் ஆதரவு சக்திகளும் தமிழ்த்தேசிய அமைப்புகளும் முன்பு எப்போதையும்விட கூடுதலாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். இரண்டு வாள்கள், ஆனால் ஒரே உறை?

காவிரி போராட்டங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், திமுகவின் போராட்டங்களை நாங்கள் ஆதரித்து அவற்றில் கலந்துகொள்வோம் என தமிழ்த்தேசிய அணியின் முன்னணி தலைவர்கள் உறுதியளித்தார்கள். பெரியாரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த சில தமிழ்த்தேசியவாதிகள்கூட எச்.ராஜா பெரியார் சிலையை உடைக்கவேண்டும் என்று கூறியபோது, ராஜாவை எச்சரித்தார்கள்.

பங்காளி சண்டையா, பகையாளி சண்டையா?

திராவிட இயக்கத்தினருக்கும் தமிழ்த்தேசியர்களுக்கும் இடையிலான முரண்பாடு என்பது ஒரு பங்காளி சண்டை என்றும் இந்திய அரசுக்கும் தமிழ்நாட்டு நலன்களை பேணுபவர்களுக்கும் இடையிலான முரண்பாடு ஒரு பகையாளி சண்டை என்றும் இப்போது பேசத் தொடங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் நடைமுறையில் காணப்படும் இந்த கள ஒத்துழைப்பு (?) என்பது இருதரப்பினருக்கிடையிலான சித்தாந்த/நடைமுறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று சொல்லமுடியாது.

இன்றைய தேர்தல் சூழலில் ஒன்று நீ நண்பன், இல்லையென்றால் எதிரி. தமிழ்த்தேசிய அணி பலம் பெறப்பெற அது திராவிடக் கட்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே மாறும். மாறாக, திராவிடக் கட்சிகள் தங்கள் பலத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் அல்லது நீட்டிப்பதில் வெற்றிபெறுமானால், தமிழ்த்தேசியக் கட்சிகள் காணாமல் போகும் அல்லது திராவிடக் கட்சிகளின் ஜூனியர் பார்ட்னர்களாகவே மாறும்.

படத்தின் காப்புரிமை Facebook/Panruti velmurugan

இரு தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு ஆழமானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஐபிஎல் போராட்ட விவகாரத்தில் திமுகவுக்கும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட விமர்சனங்கள், "போட்டி" சம்பந்தப்பட்டது அல்ல, இரு தரப்பிலும் பிரதானமாக அடங்கியிருக்கும் சமூகப் பிரிவுகளின் வர்க்க நலன்கள் அதில் தலைதூக்கின என்பதைப் பாரக்கவேண்டும்.

திமுகவின் புதிய மேட்டுக்குடியினருக்கும் தமிழ்த்தேசியக் கட்சியில் வேகமாக சேர்ந்துவரும் சமூகத்தின் அடித்தட்டு சமூகப்பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையிலான முரண்பாடு அது.

இத்தொடரின் முந்தைய பாகங்கள் இங்கே

சில திமுகவினர் நாம் தமிழர் கட்சியின் இளம் உறுப்பினர்களை பொறுக்கிகள், லும்பன்கள் என்றெல்லாம் அழைத்தபோது, "கொள்கை" மட்டுமல்ல, சமூகப் பிளவும் இவ்விரு தரப்பினருக்கிடையிலான முரண்பாட்டை வரையறுக்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் இளைஞர்களை தமிழ்நாட்டு மேட்டிமைச் சக்திகள் இதே சொற்களால்தான் அர்ச்சித்தன.

திராவிட, தமிழ்த்தேசிய அணிகளுக்கு இடையிலான இந்த உறவும் பிரிவும் உருவாக்கும் சூழல், இரு தரப்பினரின் வரம்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் தமிழ்த்தேசிய சக்திகளின் முன்னுள்ள தேர்வும் வாய்ப்பும் என்ன?

நிராகரிப்புவாத தமிழ்த்தேசியர்கள்

பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்டவர்களை உள்ளடக்கியுள்ள வானவில் கூட்டணியான தமிழ்த்தேசிய அரங்கில், அதிகம் கொடிகட்டிப் பறப்பது திராவிட எதிர்ப்பு பேசும் அணியினர்தான். திராவிட இயக்க அரசியலின் வழியிலேயே தமிழ்த்தேசியம் காணவிரும்புபவர்கள், திராவிட இயக்கத்தை அங்கீகரித்தனர்.

ஆனால், அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் என்று சொல்பவர்கள், இடதுசாரிகள் என பல முனைகளிலிருந்து கிளம்பிவந்தவர்கள் தமிழ்த்தேசிய அரங்கில் குழுமியிருந்தாலும், பிரதானமான அணி என்பது திராவிட இயக்கத்தை நிராகரிக்கும் அணியாகவே இருக்கிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி. (இந்தக் கட்டுரையில் அவர்களை நிராகரிப்புவாத தமிழ்த்தேசியர்கள் என்றே அழைக்கவிரும்புகிறேன்).

படத்தின் காப்புரிமை Facebook/seeman

நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியர்கள் இன்று ஒரு பெரிய முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது வரலாற்று முட்டுச்சந்து. இன்றைய திமுக, மதிமுக போன்ற கட்சிகளை எதிர்கொள்வதற்காக ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையுமே நிராகரித்த அந்த ஒருதரப்பு தமிழ்த்தேசியவாதிகள் அந்த முட்டுச்சந்தைவிட்டுவிலகி வரலாற்றின் சரியான பாதையில் பயணிக்கவேண்டும் என்றால் அது சுலபமானது அல்ல.

நீட் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்றிய அரசின் நீட் திட்டத்தை எல்லாத் தமிழ்த்தேசியவாதிகளும் எதிர்க்கிறார்கள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தையும்விட தமிழ்நாட்டிலேயே மருத்துவக் கல்வியும் சுகாதாரத் துறையும் மிகச்சிறப்பாக இருந்துவருகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எனவேதான் இன்று ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், யார் அந்த மிகச்சிறந்த மருத்துவக் கல்வி, சுகாதாரக் கல்வி முறையை இங்கே உருவாக்கினார்கள், அதற்கும் திராவிட இயக்கத்தின் அடிப்படை அரசியல் செல்நெறிகளுக்கும் இடையில் என்ன உறவு என்பதைப் பற்றி நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியவாதிகள் வாய்திறக்க மறுக்கிறார்கள்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றால், திராவிட இயக்கம் அல்லது ஆட்சிகள் வருவதற்கு முன்பே "இங்கிருந்த" மிகச்சிறந்த மருத்துவக் கல்வி, சுகாதார உள்கட்டமைப்பை ஐம்பதாண்டு காலமாக நாம் இழந்துவருகிறோமா, அல்லது இந்த வசதிகள் ஐம்பதாண்டு காலத்தில்தான் பெருமளவு உருவாயின, அதை இப்போது இழக்கிறோமா?

நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியவாதிகளிடம் பதில் இல்லை. இன்றைய நிலையில் அதிமுக அடிமைப்பட்டுக்கிடக்கிறது, நீட் குறித்த விஷயத்தில் திமுக போதுமான அளவுக்குப் போராடவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு வைப்பது வேறு.

ஆனால், எந்த சித்தாந்தம் அல்லது அரசியல் இயக்கத்தால் நாம் உயர்ந்திருந்தோமோ அந்தச் சித்தாந்தத்தின் எதிரிகள் நமது சாதனையை நம்மிடமிருந்து பறிக்கமுயலும்போது நாம் செய்யவேண்டியது என்ன? வரலாற்று நிராகரிப்பு தமிழ்த்தேசியவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் இந்துத்துவவாதிகளின் மனம் குளிரும் வண்ணம் திராவிட இயக்கத்தவரை வெளுத்துக்கட்டுகிறார்கள். ஆனால், இந்த வரலாற்றுப் பிழையால் தங்களுடைய இயக்கம் வளராமல் போகிறதே என்பதைக்கூட புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். புதிய இயக்கம் என்பது இளைஞர்களின் சூடான ரத்தமும் வரலாறு தருகிற "வெற்றிடமும்" மட்டுமல்ல.

இன்று 15 ஆவது நிதிக்குழுவின் மத்திய - மாநில நிதிப் பகிர்வு தொடர்பான சிக்கல் முளைத்திருக்கிறது. முன்னதாக ஜிஎஸ்டியில் மாநிலங்களின் வரி வருவாய் வாய்ப்பு பறிக்கப்பட்டதை எதிர்த்து போராடியிருக்கிறோம். வட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களிலுள்ள மத்திய, பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்களைப் பணியமர்த்தும் நிலை பற்றி பதறுகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இது போன்ற விவாதங்களில், தென் மாநிலங்கள் அல்லது தமிழ்நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி வடவர்கள் எப்படி நம்மீது பழிவாங்குகிறார்கள் என்று உணர்ச்சிப் பொங்கப் பேசுகிறோம்.

இந்த விவகாரங்களிலும் நிராகரிப்புவாதத் தமிழ்த்தேசியவாதிகளின் தர்க்கமற்ற, தார்மீகமற்ற நிலைப்பாடுகள் வெளிப்பட்டுவிடுகின்றன. தமிழ்நாடு பெற்ற இந்த வளர்ச்சிக்கு திராவிட இயக்கங்களின் சமூக நீதி, மாநில உரிமைக் கோட்பாடுகள் தொடங்கி திராவிடக் கட்சிகளின் சட்டங்கள், திட்டங்கள் வரை காரணமாக இருந்தன என்பதை அவர்களால் ஏற்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை.

இன்றைய/சமீபத்தைய திமுக, அதிமுக ஆட்சிகளின் போது ஏற்பட்ட பல தவறுகளையும் ஒட்டுமொத்தமான கொள்கை வீழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டுவதற்கு பதிலாக, கழகங்கள் கொள்கைகளை கைவிடவில்லை என்றாலும் மோடியின் இந்தியா வேறு ஒன்று என்பதை புரிந்துகொள்வதற்குப் பதிலாக, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சி அரசியலை நிராகரிக்க முயல்வது என்பது அந்தக் குறிப்பிட்ட தமிழ்த்தேசியவாதிகளின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடுகிறது. திராவிடத்தால் "வீழ்ந்ததன்" காரணமாக உருவான தமிழ்நாட்டின் வளர்ச்சியை இவர்கள் ஏன் பாதுகாக்க முயலவேண்டும்?

தமிழ்நாட்டில் சமூக நீதி, தமிழக நலன்கள், சமூக வளர்ச்சி போன்றவற்றால் நாம் அடைந்திருக்கும் உயர்வுக்கு திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. அதை மறுக்கவேண்டியதில்லை. திராவிட இயக்கத்தை துதிபாடவும் தேவையில்லை, தூக்கியெறியவும் தேவையில்லை.

நாம் பேசவேண்டியவை திராவிடக் கட்சிகளும் அமைப்புகளும் இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்த்துநிற்கக்கூடியவர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பதையும் இல்லையென்றால் என்ன செய்வது என்பதையும்தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிராகரிப்புவாதிகள் சரியான திசையில் செல்லவில்லை. பெரும்பாலான இளைஞர்களை அவர்கள் ஏற்கனவே தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள். அதன் காரணமாக தமிழ்த்தேசிய இயக்கம் தனக்குக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள இயலாமல் தவிக்கிறது.

ஆனால் தமிழ்த்தேசியம் என்பது அந்த நிராகரிப்புவாதிகள் மட்டுமல்ல. நூற்றாண்டு அரசியல் மரபு கொண்ட தமிழ்த்தேசிய அரசியலில் எப்போதுமே இரு சரடுகள் உண்டு. ஒரு சரடு முற்போக்கு முகாமினுடையது, மற்றொன்று பிற்போக்குத்தன்மையுடையது.

தேசியவாத அரசியல் என்பதே பல்வேறு முகாம்களைக் கொண்டதுதான் என்பதை புரிந்துகொண்டால் இதைப் புரிந்துகொள்ளமுடியும். இதில் தற்போது பிற்போக்கு முகாமின் நிராகரிப்பு அரசியல் அம்பலப்பட்டு நிற்கிறது. முற்போக்கு முகாமோ பலவீனமான நிலையில் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

முற்போக்கு முகாம் திராவிட இயக்கத்தை அங்கீகரித்து, ஆனால் அதைக் கடந்து செல்லக்கூடிய சாத்தியங்களைக் கொண்டது. பிற்போக்கு முகாமோ திராவிட இயக்கத்தை வீழ்த்துவதே தன் கடமை என நினைத்து, அதன்காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ தில்லிப் பேரரசின் அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவும் மாறுவது குறித்து கவலைகூடப்படாத ஒன்றாக இருக்கிறது.

முற்போக்கு முகாம் வரலாற்றின் திசைவழியில் நடைபோடக்கூடியது. பிற்போக்கு முகாம் தமிழ்நாட்டை ஒரு நூற்றாண்டுக்கு பின்தள்ளி நகர்த்திவிடத் துடிக்கிறது.

இந்த இரு முகாம்களுக்கு இடையிலான போராட்டமே தமிழ்த்தேசிய அரங்கில் அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடிக்கும். தேர்தல் ரீதியில் திராவிடக் கட்சிகளுக்கு இன்னும் ஓரிரு தேர்தல்களுக்கு எந்த பெரிய சிக்கலும் இருக்கப்போவதில்லை.

ஆனால், தமிழ்த்தேசிய முகாமில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த முரண்பாடு எப்படித் தீர்க்கப்படுகிறதோ அதைப் பொறுத்துதான் தமிழ்நாட்டின் எதிர்காலமும் அமையப்போகிறது. முற்போக்கு தமிழ்த்தேசியம் வெற்றிபெற்றால் சுயமரியாதை இயக்கத்தின் சுடர் புதிய கரங்களுக்கு கைமாறும். பிற்போக்கு தமிழ்த்தேசியம் வெற்றிபெற்றால், அது தேர்தல் களத்தில் இந்துத்துவ, தமிழர் விரோத சக்திகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்