'நான் இதுவரை நிர்மலா தேவியை பார்த்ததுகூட இல்லை': ஆளுநர் பன்வாரிலால்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த அழைத்த விவகார கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (செவ்வாய்க்கிழமை)செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.

சென்னை ஆளுநர் மாளிகை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக ஆளுநராக பொறுப்பேற்று தான் 6 மாதங்கள் நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர்,. மாணவர்களை பேராசிரியர் தவறாக வழிநடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.

இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று குறிப்பிட்ட ஆளுநர் பன்வாரிலால், விசாரணை அதிகாரி சந்தானம் சமர்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

''பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறிய ஆளுநர், இது குறித்து போலீசாரும், விசாரணை ஆணையமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்வர் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நிர்மலா தேவி விவகாரத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், ''நான் நிர்மலா தேவி முகத்தைகூட இதுவரை பார்த்தது இல்லை. எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவைகூட என்னை அணுக முடியாது'' என்று கூறினார்.

'நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்''

விரைவில், நிர்மலாதேவி விவகாரத்தில் உண்மை வெளிவரும் என தமிழக மக்களுக்கு உறுதி அளிப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், ''தேவைப்படும் பட்சத்தில் விசாரணையில் பெண்களை விசாரணை அதிகாரிகள் உதவிக்கு வைத்துக் கொள்ளலாம்'' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இது தொடர்பான விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று கூறிய அவர், ''அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆளுநர் செயல்படுவதில்லை. பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது'' என்று தெரிவித்தார்.

தான் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு நபர் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல மாவட்டங்களுக்கும் சென்று அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''நான் மாவட்டங்களுக்கு ஆய்வு பணி தொடர்பாக செல்லவில்லை. அந்த மாவட்டங்களை பற்றி அறிந்து கொள்வதற்காகவே அங்கு செல்கிறேன்'' என்று அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைEMMANUEL DUN

மேலும், காவிரி விவகாரத்தில் இன்றுகூட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தான் தொடர்புகொண்டதாகவும், அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேசியதாகவும் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் எந்த அரசியலும் இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

முன்னதாக, தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

வீட்டின் பூட்டை உடைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்