"நான்சென்ஸ். எனக்கு கொள்ளுப்பேரன் பேத்திகள் இருக்கிறார்கள்'': செய்தியாளர்களிடம் சீறிய ஆளுநர்

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஆளுநரால் நடத்தப்பட்டது. ஆனால், சந்திப்பின் முடிவில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டியது, பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

அருப்புக்கோட்டை தேவங்கர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த துணைப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டுவதாகக் கூறும் ஒலி நாடா வெளியான விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்த ஒலிநாடாவில் ஆளுநருக்கு நெருக்கமானவர்களுடன் தனக்குப் பழக்கமிருப்பதாக நிர்மலா தேவி கூறியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்துவிசாரிக்க ஒரு நபர் கமிஷன் ஒன்றை அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மாலை 6 மணியளவில் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களைச் சந்திக்கவிருப்பதாக ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. மாலை 4 மணியிலிருந்தே செய்தியாளர்கள் ஆளுநர் மாளிகையில் குவிய ஆரம்பித்தனர்.

சுமார் ஐந்தேகால் மணியளவில் உள்ளே அனுமதிக்கப்பட்ட செய்தியாளர்கள், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டியை மறுத்துவிட்டு ஆளுநருக்காக காத்திருந்தனர்.

ஆறு மணிக்கு செய்தியாளர் சந்திப்பு துவங்கியவுடன், தான் பதவியேற்று ஆறு மாதங்கள் ஆனதையொட்டியே இந்த செய்தியாளர் சந்திப்பு நடப்பதாக பன்வாரிலால் தெரிவித்தார். ஆனால், ஆறு மாதங்கள் ஆளுநர் பதவியை நிறைவு செய்வது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செல்லத்துரையும் ஏன் அமரவைக்கப்பட்டிருந்தார் என்று பன்வாரிலால் விளக்கவில்லை.

'நான் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்'

செய்தியாளர்கள், சந்திப்பு துவங்கியவுடனேயே நிர்மலா தேவி விவகாரம் குறித்து கேள்வியெழுப்பியவுடன் அவர் கோபமடைந்தார். "நான்சென்ஸ். எனக்கு கொள்ளுப்பேரன் பேத்திகள் இருக்கிறார்கள். என்னை மாதிரி ஒருவரிடம் இப்படிக் கேட்பதே தவறு" என்றார்.

மீண்டும் மீண்டும் இது தொடர்பான கேள்விகளுக்கு இதைப்போலவே அவர் பதிலளித்தார்.

சில நாட்களுக்கு முன்பாக, நாளிதழ் ஒன்றில் தென்மாநிலம் ஒன்றின் ஆளுனர் ஒருவர் பாலியல் புகாருக்கு உள்ளாகியிருப்பதாக வந்திருக்கும் செய்தி குறித்துக் கேட்டபோது, "நான் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்" என்று பதிலளித்தார்.

'இது போன்ற கேள்விகளை என்னிடம் கேட்கக்கூடாது'

நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்திருக்கும் நிலையில், அவர் உங்களை விசாரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு ஆளுனர் பெரும் ஆத்திரமடைந்தார். இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்கக்கூடாது என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் ஆளுநர் புறப்பட்டபோது, அவரிடம் தி வீக் இதழின் செய்தியாளரான லக்ஷ்மி சுப்பிரமணியன் "மாநில அரசின் செயல்பாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு திருப்தி?" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு ஆளுனர், "பெரும் திருப்தி" என்று பதிலளித்தார்.

அப்படியானால், "பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் மட்டும் திருப்தியில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?" என்ற கேள்வியைக் கேட்டபோது, அந்தக் கேள்வியை உள்வாங்காத ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், லக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கன்னத்தை சிரித்தபடி தட்டினார்.

இதற்கு, லக்ஷ்மி சுப்பிரமணியன் கடும் கோபமடைந்தார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டரில் எழுதியிருக்கும் குறிப்பில், "உங்களுடைய செயல்பாட்டால் நான் மிகுந்த கோபமடைந்திருக்கிறேன் திரு. பன்வாரிலால் புரோஹித். உங்களுடைய செயல்பாடு ஒரு பாராட்டாகவோ, தாத்தா என்ற முறையிலோ இருந்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அது தவறானது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter/ Lakshmi Subramanian

தமிழக ஆளுநர்களாக இருப்பவர்கள் இம்மாதிரி செய்தியாளர் சந்திப்பை நடத்துவது, அதுவும் மாநில அரசு இருக்கும்போது நடத்துவது மிக அரிதான செயலாகும்.

1991-96 காலகட்டத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி மீது, முதல்வர் ஜெயலலிதா ஒரு கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தினார். அப்போதும் சென்னாரெட்டி செய்தியாளர் சந்திப்பு எதையும் நடத்தவில்லை. ஆனால், வெளியில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது விளக்கமளிப்பதையும் பேசுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்