நிர்மலாதேவி விவகாரம்: ''ஆளுநர் ஏன் தலையிட்டார்?''

  • 18 ஏப்ரல் 2018

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டது குறித்து சந்தேகம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Facebook/MK Stalin

இதையடுத்து நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் ஸ்டாலினின் சந்தேகம் நியாயமானதா? சிபிஐ விசாரணையில் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியுமா? எனக் கேட்டிருந்தோம். இதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துகளை நேயர்களுக்கு இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

''மாணாக்கரின் பகுத்தறிவுக்கு வித்திட வேண்டிய பேராசிரியை விதியை மீறி மாணாக்கரின் எதிர்காலத்தைப் பாழாக்கும் செயலில் ஈடுபட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாலும் பெருந்தலையின் தலையீடு இல்லாமல் வால் ஆடியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தின் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் நிகழும் முறைகேடுகள் சமீபகாலமாக அதிகளவில் வெளிப்படுவதும், மாநில பல்கலைக்கழகங்கள் நடுவண் அரசின் கீழ் கொண்டுவரப்படும் என்னும் செய்திகளுக்கும், தற்போதைய நிகழ்வில் ஆளுநர் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கும் தொடர்பு உள்ளனவா என்கிற ஐயம் கலந்த கேள்விகள் எழுகின்றன.'' என சக்தி சரவணன் தெரிவித்துள்ளார்.

''ஸ்டாலின் சந்தேகம் நியாயமே. ஏனென்றால், ஆளுநர் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. எனவே மத்திய புலனாய்வு தான் தேவை'' என நிஜார் அகமது பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

பேஸ்புக்கில் வாதம் விவாதம் பகுதியில் கலந்துகொண்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார் நேயர் முகமது ஜாஃபர் . ''மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைகழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் புரோஹித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் வேந்தர் ஆவார்.

கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரிக் கல்வி இயக்ககம் தலையிட முடியும்.

ஒரு கல்லூரிக்குள் அதுவும் தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரியில், மாணவிகளைத் தவறாக வழி நடத்த ஆசிரியை முயன்றால் அது பற்றி நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், இது குற்றவியல் பிரச்னையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது'' என அவர் எழுதியுள்ளார்.

''சம்பந்தப்பட்டது தனியார் கல்லூரி உதவி பேராசியையை அவரின் கல்லூரியும் அவரை வேலையிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து விட்ட நிலையில் இது ஒரு கிரிமினல் குற்றமாக கருதப் பட்டு போலிஸிடம் தகுந்த நடவடிக்கைக்காக அனுப்பி இருக்க வேண்டும். ஆளுநர் இதில் ஏன் தலையிட்டார் என்பது தான் மக்களின் சந்தேகம்.'' என ட்விட்டரில் அமானுல்லா குறிப்பிட்டுள்ளார்.

''மொதல்ல தமிழ்நாட்ல ஆட்சின்னு ஒண்ணு நடக்குதா. இல்ல கவர்னர்தானா எல்லாம்னு சந்தேகேமா இருக்கு. நாங்க கவர்னருக்கு ஓட்டு போடல'' என எழுதியுள்ளார் மதிவாணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்