பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்

தமிழக ஆளுனர்

பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்திருக்கிறார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பின் முடிவடைந்து ஆளுனர் எழுந்து சென்றுகொண்டிருக்கும்போது, தி வீக் இதழின் பத்திரிகையாளரான லக்ஷ்மி சுப்ரமணியம், "பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் உங்களுக்குத் திருப்தி இருக்கிறதா?" என்று கேட்டார்.

அதற்குப் பதிலளிக்காத ஆளுநர், லக்ஷ்மியின் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றார்.

இதனால் கோபமடைந்த லக்ஷ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கண்டனம் தெரிவித்தார். பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பின.

இந்த நிலையில் பத்திரிகையாளர் லக்ஷ்மிக்கு ஆளுநர் வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், "பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் நான் எழுந்து புறப்படும்போது நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள். அந்தக் கேள்வி சிறப்பான கேள்வியாக எனக்குப்பட்டது. நீங்கள் கேட்ட கேள்வியைப் பாராட்டும்விதமாக, உங்களைப் பேத்தி போல கருதி கன்னத்தில் தட்டினேன். கடந்த 40 ஆண்டுகளாக நானும் இந்தத் தொழிலில் இருப்பதால், ஒரு பிரியத்திலும் பத்திரிகையாளராக உங்கள் செயலைப் பாராட்டும் விதத்திலும் அவ்வாறு செய்தேன்.

இந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் வருத்தமடைந்திருக்கிறீர்கள் என்பது உங்கள் மின்னஞ்சலில் இருந்து தெரிகிறது. இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவிப்பதோடு மன்னிப்பும் கேட்கிறேன். இதை ஏற்று பதில் மின்னஞ்சல் அனுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருக்கிறார்.

ஆளுனரின் இந்தக் கடிதத்திற்குப் பதிலளித்திருக்கும் லக்ஷ்மி சுப்பிரமணியன், "முந்தைய நாள் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்து நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும், நான் கேட்ட கேள்வியைப் பாராட்டுவதற்காக நீங்கள் அப்படிச் செய்ததாக சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்