வாதம் விவாதம்: பெண்களின் முன்னேற்றம் கற்காலத்தை நோக்கி நகர்கிறதா?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கிறது என்று உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்திருக்கிறது.

இதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காததுதான் காரணமா? பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டுமா? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இது தொடர்பாக, பிபிசி நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.

கிறிஸ்டோபர் ரூபன் என்கிற நேயர், ''பெண்கள் தங்களுக்கு எதிரான குற்ற செயல்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் எல்லை மீறும்போது தங்களை பாதுகாத்து கொள்ள தற்காப்பு முறைகளை அறிந்திருக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வும் பயிற்சியும், வீட்டிலும், தொடக்க கல்வி நிலையங்களிலும் இருந்தே தொடங்க வேண்டும்'' என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

அன்பரசு ஸ்டாலின் என்ற நேயர்,தன்னுடைய டுவிட்டர் பதிவில், ''முன்பு வழக்குகளை பதிவு செய்யவில்லை. இப்போது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது'' என்று கூறியுள்ளார்.

''குற்றங்களை குறைக்க தண்டனையை அதிகரிப்பது சரியாக வராது. அந்த குற்றம் நிகழாலாமல் தடுக்க வழிகளை யோசிப்பதே புத்திசாலித்தனம்'' என்பது துரை முத்துசெல்வம் பதிவிட்டுள்ள கருத்தாகும்.

விடியல் வெள்ளி என்ற பெயரில் டுவிட்டர் பதிவிட்டுள்ள நேயர், ''கடுமையான தண்டனைகள் வழங்கி அதை அதிவிரைவாக நிறைவேற்றவும் வேண்டும்'' என்கிறார்.

ராஜா தமிழரசன், ''தனிமனித ஒழுக்கம் அவசியம். தண்டனை கடுமையாகப்படவேண்டும்'' என்கிறார்.

கோகுல் ராஜ் என்ற நேயரோ,'' வேலியே பயிரை மேய்கிறதே பின், யார்தான் சட்டத்தை மதித்து மக்களுக்கு நீதி கொடுப்பது'' என்று ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அருண் என்கிற நேயர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''காவல்துறை எல்லா இடங்களிலும் தவறுகளை கண்டிக்கிறது. ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் கூற முடியாது'' என்ற கருத்தை தெரிவிக்கிறார்.

அஜய் சுல்சோன் என்பவர், ''பெண்களுக்கு பாதுகாப்பு தேவை. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களுக்கு தண்டனை அவசியம். காவல்துறை தனது கடமையை நேர்மையுடன் செய்யவேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

சந்தோஷ் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ''தண்டனைகள் மட்டும் போதாது, பெண்களின் மீதான சமூகப் பார்வை மாற வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வராசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''சட்டத்தில் மாற்றமும், செயல்படுத்துவதில் கடுமையான கட்டுப் பாடுகளும், விதிகளை மீறுவதோ அல்லது நடவடிக்கைகளில் தொய்வோ, அரசியல் குறுக்கீடுகளோ வராமல் சட்டத்திட்டம் இருக்குமேயானால் வரவேற்கத்தக்கது'' என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கேபிஎஸ் என்ற பெயரில் பதிவிட்டுள்ள நேயர், ''இப்படியே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தால் பெண் கல்வி - முன்னேற்றம் - வளர்ச்சி ஆகியவை கற்காலத்தை நோக்கி நகரும் '' என்று குறிப்பிட்டுள்ளார்.

துரை மைதிலி என்பவர் ''நிச்சயமாக இதற்கான ஒரே தீர்வு மரணதண்டனை மட்டுமே'' என்று கடும் தண்டனைக்கு ஆதவராக கருத்து பதிவிட்டுள்ளார்.

அகிலன் என்கிற நேயர், ''தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் காலம் தாழ்த்தி கிடைக்கும் நீதி பயனற்றது'' என்று குறிப்பிடுகிறார்.

சட்டம் விலை போகாமல் இருக்க வேண்டும் என்பது அஸாரின் கருத்தாகும்.

சரோஜா பாலசுப்பிரமணி என்கிற நேயர், ''அரேபிய நாடுகளைப்போன்ற கடுமையான தண்டனைகள் குற்றங்களைக் குறைக்கும்'' என்கிறார்.

''இதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தான் அவர்கள்தான் கண்டு கொள்வதில்லை '' என்று ஹாலிக் தெரிவித்திருக்கிறார்.

ராஜன் என்பவர், ''சாதியாயினும் சமயமாயினும் தங்களுக்குள் வெறிகொண்டு மோதும்போது நேரடியாக பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே. சாதி, மதம் மறப்போம் மனிதம் போற்றுவோம்'' என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

கோவிந்தன் என்கிற நேயர், ''தமிழ் நாட்டு சினிமா கேவலமானது. அதை நிறுத்தினால் குற்றங்கள் குறையும் '' என்று தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: