எச்.ராஜாவின் சர்சைக்குரிய ட்வீட்: சமூக வலைதளங்களில் எதிர்ப்பு, தி.மு.க. போராட்டம்

கள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெரிவித்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுவருகிறது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

எச். ராஜா இன்று காலையில் பதிவுசெய்த ஒரு ட்விட்டர் குறிப்பில், "தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே." என்று கூறியிருந்தார்.

தி.மு.கவின் மாநிலங்களை உறுப்பினர் கனிமொழியைக் குறிப்பிடும்வகையில் தெரிவித்த இந்தக் கருத்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption எச். ராஜாவின் டிவிட்டர் செய்தி

இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்க கனிமொழி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் மறுத்துவிட்டார்.

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் எச். ராஜாவின் வார்த்தைகளைக் கண்டித்துள்ளார். "கள்ளக் குழந்தை என்பதே தவறு. எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள். ஏனென்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாய் ஒரு தந்தை இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Twitter

இதற்கிடையில், எச். ராஜாவின் இந்தக் கருத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது" என்று கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption தமிழிசையின் டிவிட்டர் செய்தி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்