சர்ச்சையில் தமிழக ஆளுநர்: "பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவதா? "

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர், அபர்ணா ராமமூர்த்தி
  • பிபிசி தமிழ்
படக்குறிப்பு,

தன்யா ராஜேந்திரன்

செய்தியாளர் சந்திப்பின் போது பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை கவர்னர் தட்டியது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதற்கு மிகுந்த எதிர்ப்புகள் ஒருதரப்பில் இருந்தாலும் மறுதரப்பில் சிலர் இது ஒரு இயல்பான விஷயம் என்றும் இது தேவையில்லாமல் பெரிது படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வுக்கு ஆளுநர் மன்னிப்பு கோரியிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆளுநருக்கு எதிரான கருத்துகள் பல தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. ஒரு பெண்ணை பணியிடத்தில் அவரது அனுமதி இல்லாமல் தொட்டது குற்றம் என்பதே பரவலாக பேசப்படுகிறது.

நாணயத்தின் மறுபக்கத்தை பார்த்தால், சில ஆண் பத்திரிக்கையாளர்கள் ஆளுநருக்கு சாதகமாகப் பேசுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்தும், தங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், சில பெண் பத்திரிகையாளர்களிடம் கேட்டோம்.

பெண்கள் வெளிப்படையாகப் பேசியே தீர வேண்டும்

இந்த விஷயத்தில் சில ஆண் பத்திரிகையாளர்கள் ஆதரவாக இருந்தாலும், சிலரோ இதில் என்ன இருக்கிறது? இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும் எனக் கேட்பதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன்.

படக்குறிப்பு,

சர்ச்சையில் தமிழக ஆளுநர்

செய்தியாளர் சந்திப்பு என்பது பணி நிமித்தமாக நடைபெறுவது எனவே அதை அவ்வாறே அணுக வேண்டும்.

இந்த செய்தியாளர் சந்திப்பானது பெண் பேராசிரியர் ஒருவர் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வது குறித்து ஆளுநர் மீதான குற்றச்சாட்டு தொடர்புடையது. எனவே இம்மாதிரியான செயல் நிச்சயமாக அந்த பத்திரிகையாளரை சங்கடப்படுத்தும் என்கிறார் தன்யா.

பலர் சமூக வலைதளங்களில் அவர் தாத்தா வயதில் உள்ளவர், அவர் மீது குற்றம் சொல்வதா என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த சம்பவத்தை அவ்வாறு பார்க்க இயலாது; அது ஒரு செய்தியாளர் சந்திப்பு. அவர் ஓர் ஆளுநர். எனவே இந்த வாதம் முற்றிலும் ஏற்று கொள்ளத்தக்கதல்ல என்கிறார் தன்யா.

ஒரு பெண் பத்திரிகையாளராக தானும் இவ்வாறு சில சம்பவங்களை சந்தித்துள்ளதாகவும், சில வருடங்களுக்கு முன்வரை அதை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் இருந்ததாகவும் ஆனால் தற்போது சமூக வலைத் தளங்கள் மூலம் அதை வெளியில் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

"பெண்கள் இது பற்றிப் பெரிதாக பேசுவதில்லை. அவ்வாறு பேசினாலும் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் கூட அதை ஊக்குவிப்பதில்லை. எனவே இந்த சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் பேசியே தீர வேண்டும்" என்று அழுத்தமாகக் கூறுகிறார் தன்யா.

பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகள் ஆக்குவதா?

"இதே போன்று சமீபத்தில் பெண் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'நீங்க அழகா இருக்கீங்க' என்று அமைச்சர் விஜய பாஸ்கர் அந்த செய்தியாளரிடம் கூறினார். அதற்கும் பத்திரிகையாளர் லக்ஷ்மிக்கு நடந்ததற்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்கிறார் செய்தியாளர் சாராதா.

படக்குறிப்பு,

செய்தியாளர் சாரதா

லக்ஷ்மி நன்றாக கேள்வி கேட்டதற்கு நான் அவர் கன்னத்தை தட்டினேன் என்று கூறி ஆளுநர் மன்னிப்பு கேட்டது வெறும் கண்துடைப்புதான் என்று குறிப்பிட்ட அவர், இந்த சம்பவத்திற்கு எதிராக லக்ஷ்மி நின்றது மிகச் சரியான விஷயம் என்றார்.

"நீங்கள் எங்களை பேத்தியாக பார்க்கலாம். ஆனால் நாங்கள் உங்களை தாத்தாவாக பார்க்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை மக்கள் சார்பான எங்களின் கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய ஆளுநராகத்தான் பார்க்கிறோம்"

ஏன் சம்பவம் நடந்த உடனே கேள்வி கேட்டகவில்லை, யாரோ தூண்டுதலின் பேரில்தான் லக்ஷ்மி இப்படி நடந்து கொள்கிறார் போன்ற கருத்துகளை சமூக ஊடகங்களில் பார்க்கும்போது கோபம் வருவதாக அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் இப்படியான சம்பவம் நடந்தபோது, ஏன் அங்கிருந்த ஆண் செய்தியாளர்கள் உடனடியாக ஏதும் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார் சாரதா.

மேலும், "பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்கக்கூடிய சூழல்தான் இன்றும் உள்ளது. வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் சக ஆண் பத்திரிகையாளர்களே இதைச் செய்வது அதிர்ச்சிகரமாக இருக்கிறது" என்கிறார் அவர்.

சமூக ஊடகத்தை ஆக்கபூர்வமாக லக்ஷ்மி பயன்படுத்தியுள்ளார் என்று கூறும் சாரதா, இது போன்ற சம்பவங்களை எதிர்த்துக் குரல் எழுப்புவதை பெண்கள் நிறுத்திவிடக் கூடாது என்று தெரிவித்தார்.

இதுமாதிரியான சமூகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து மீண்டும் மீண்டும் நம்மை பாதுகாத்துக் கொள்ளப் பேசுவது சலிப்பை ஏற்படுத்தும்தான் என்றாலும், அதையும் மீறி நாம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

இதற்குப் பிறகு விஜய பாஸ்கரோ, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தோ இதை மீண்டும் செய்ய நிச்சயம் அஞ்சுவார்கள் என்றும் சாரதா தெரிவித்தார்.

சக பத்திரிகையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் தட்டியபோது அருகில் இருந்த செய்தியாளர் லாவன்யா இச்சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசினார்.

படக்குறிப்பு,

செய்தியாளர் லாவன்யா

சம்பவம் நடந்த சமயத்தில் அந்த பெண் பத்திரிகையாளர் மிகக் கோபமாகவும், மனமுடைந்தும் காணப்பட்டார்; ஒரு பெண் பத்திரிகையாளராக நான் அவரை புரிந்து கொண்டு அவரை ஆசுவாச படுத்தினேன் என்கிறார் பத்திரிகையாளர் லாவன்யா. மேலும் ஆளுநரின் செய்கைக்கு உடனே எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று புரியவில்லை. உடனிருந்த ஆண் பத்திரிகையாளர்கள் சிலர் இதனைப் புரிந்து கொள்ளாமல் கேலி செய்தனர் என்கிறார்.

கூட்டமான இடத்தில் செய்தி சேகரிக்கச் செல்லும் போது பெண் என்பதால் ஏன் அங்கு வர வேண்டும் என்ற கேள்வியை எதிர்கொள்வதிலிருந்து நாள்தோறும் பல சவால்களை எதிர்கொள்ள நேர்வதாக என்று கூறும் லாவன்யா,"எனது பணியில் இருக்கும் சிரமங்களை புரிந்து கொண்டுதான் அதில் ஈடுபடுகிறேன். எனவே பெண் என்ற பாகுபாடு வேண்டாம்" என்கிறார்.

ஆளுநர் செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம் குறித்த புகைப்படம் வைரலாக, அதில் தான் சிரித்தவாறு இருந்ததற்கு பலர் தன்னை அவதூறாக பேசியதாக கூறுகிறார் லாவன்யா இருப்பினும் இதில் சம்பந்தபட்ட பத்திரிகையாளருக்கு தான் ஆறுதலாக இருந்ததாகவும் அவரும் தன்னை புரிந்து கொண்டதாகவும் கூறுகிறார் அவர்.

ஆளுநரை சட்டத்துக்கு முன் நிற்க வைக்க வேண்டும்

"உயரிய பதவியில் உள்ள ஆளுநர் புரோகித் எப்படி அப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. அவர் செய்தது மிகப் பெரிய தவறு" என்கிறார் செய்தியாளர் வினிதா.

படக்குறிப்பு,

செய்தியாளர் வினிதா

"மன்னிப்பு கேட்க வைத்த பின்புதான், ஆளுநர் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். அதுவும் அவர் மனதில் இருந்து கேட்டது போல தெரியவில்லை. இந்த நேரத்தில் இப்பிரச்சனையில் இருந்து வெளிவரும் நோக்கத்துடனே அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்."

இது பெண்ணை இழிவு படுத்தும் செயல் என்று குறிப்பிட்ட வினிதா, ஆளுநரை சட்டத்துக்கு முன் நிறுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது போன்ற விஷயங்களில் பெண்கள் எதிர்த்து கேள்வி கேட்பதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் சில ஆண்கள் லக்ஷ்மியை குறித்துத் தவறாக பேசுகிறார்கள் என்றும் வினிதா கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: