இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா?

இந்த வாரம் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது மகளின் திருமண செலவுகளுக்காக தனது மனைவியின் நகைகளை வட்டிக்கடைக்காரரிடம் அடகு வைத்திருந்தார் ஒரு விவசாயி. தன்னுடைய பணத்தை எடுப்பதற்காக இரண்டு நாட்களாக அவர் வங்கிக்குச் சென்றிருக்கிறார் ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் வெறும் கையுடன் திரும்பி வந்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Press Trust of India

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், பிஹார் என குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்களில் மக்கள் ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இவை நரேந்திர மோதியின் பாஜக ஆட்சியில் கடந்த நவம்பர் 2016-ல் பணமதிப்பிழப்புச் செய்தபோது நிலவிய நிலைமையை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றன.

சட்டத்துக்கு புறம்பான மற்றும் கள்ள நோட்டுகளை ஒழித்துக்கட்ட அரசால் எடுக்கப்பட்டுள்ள உடனடி அதிர்ச்சி தரும் நடவடிக்கை என மோதி குறிப்பிட்டார். இந்தியர்கள் தாங்கள் வைத்திருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் கிட்டத்தட்ட 240 பில்லியன் டாலர் அளவுக்கு வங்கியில் ஒப்படைத்துவிட்டார்கள். நோட்டுச் சூதாட்டம் என இந்தச் செயலைப் பலரும் தெரிவிக்கிறார்கள். ஒரு பொருளாதார நிபுணரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் 'இது வரலாற்றுத் தோல்வி'.

ஏன் திடீரென குறைந்தபட்சம் ஐந்து மாநிலங்களில் அதாவது 300 மில்லியன் மக்களின் சொந்த ஊரில் பணத்தட்டுப்பாடு வந்துள்ளது?

நிதி அமைச்சகம் தெரிவித்துள்ள ஒரு காரணம் என்னவெனில் கடந்த பிப்ரவரி முதல் ரூபாய் நோட்டுத் தேவையானது அசாதாரணமாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் முதல் 13 நாட்களில் மட்டும் ரூபாய் நோட்டுப் புழக்கம் 7 பில்லியன் டாலர் அளவுக்கு கடுமையாக அதிகரித்திருக்கிறது. இதனால் பல மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மக்கள் பணத்தைப் பதுக்கத் துவங்கியிருக்கிறார்கள் என அதிகாரிகள் நம்புகிறார்கள். ஆனால் அது ஏன் முற்றிலும் தெளிவாக இல்லை?

இந்தியாவில் கடனில் இருக்கும் வங்கிகளை மீட்க மக்களின் வைப்பு நிதியை பயன்படுத்த இந்திய அரசு சட்டப்படி வழிவகுக்கவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து மக்கள் வங்கிகளிலுள்ள தங்கள் பணத்தை அதிகளவு எடுக்கத் துவங்கியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. ஆனால் வங்கிகளில் மக்களின் வைப்பு நிதி குறையவில்லை. ஆகவே இந்த வாதம் சரியாக இல்லை.

கோடைகால பயிர்களுக்கு விவசாயிகளுக்கு பணம் வழங்குதல் மற்றும் கர்நாடகவில் நடைபெறவுள்ள தேர்தல் செலவுக்கான நிதித் தேவை ஆகியவை நோட்டுத் தேவையை அதிகரிக்க முக்கிய காரணியாக இருந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2,000 ரூபாய் நோட்டை கொண்டுவந்தது மிகப்பெரிய காரணமாக இருக்கலாம் என பொருளாதார அறிஞர் அஜிட் ரனடே நம்புகிறார். புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக விரைவாக பணத்தை நிரப்ப இரண்டாயிரம் ரூபாய் நோட்டை மோதி அரசு கடந்த 2016 நவம்பரில் வெளியிட்டது.

இந்த உயர் மதிப்பு நோட்டானது குறைவான சுழற்சியில் உள்ளது. ஆனால் அமைப்பில் உள்ள 60% பணம் இந்த ரூபாய் நோட்டில் உள்ளது. சந்தையில் விரைவாகவும் பரவலாகவும் சுழற்சியில் இருக்க வேண்டிய 2,000 நோட்டுகள் வரி ஏய்ப்பவர்கள் பதுக்குவதற்காக மட்டும் தற்போது பயன்படுத்தப்படுகிறது

பண இயந்திரங்கள் பழுதாகியிருப்பது, பணத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தோல்வி பண நோட்டு தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். சர்ச்சைக்குரிய பணமதிப்பிழப்புக்கு பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாணய சுழற்சி ஆகியவற்றில் உள்ள பொருந்தாமை காரணமாக நோட்டுத் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கலாமோ என பொருளாதார நிபுணர்கள் சந்தேகப்படுகின்றனர்.

ஏப்ரலிலிருந்து ஏடிஎம் இயந்திரங்களுக்கு சரியாக பணம் கிடைக்கவில்லை என சேவை வழங்குபவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மத்திய வங்கியானது பதற்றப்பபடத் தேவையில்லை என்றும் போதுமான அளவு பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதே வேளையில் நாடு முழுவதுமுள்ள நான்கு பண அச்சடிப்பு இடங்களிலும் நோட்டு அச்சிடப்படுவதன் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய வங்கி கூறியுள்ளது. இது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது புலப்படும் ஒரு விஷயம் என்னவெனில் இந்தியர்கள் மீண்டும் நோட்டு பயன்பாட்டுக்கு பெரிய அளவில் திரும்பி வருகிறார்கள். மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கும் பொருளாதார வேகத்துக்கு ஏற்ப நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில் வேகம் இல்லை. பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவை தொடர்ந்து பாதிப்புக்குள்ளாக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்