நாளிதழ்களில் இன்று: இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது

படத்தின் காப்புரிமை Getty Images

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என தேசிய பாடதிட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மத்திய பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது என தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது, மூன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை வாரத்திற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம், நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி நேரம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் வீட்டுப்பாடம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க உத்தரவு

லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் இதன் நிலவர அறிக்கையை ஜூன் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தி கூறுகிறது. முன்னதாக ஏன் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டதற்கு பதிலளித்த தமிழக அரசு, மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்க காத்திருப்பதாக தெரிவித்தது.

மத்திய அரசுக்கும் லோக் ஆயுக்தாவுக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நீதிபதி ராஜிநாமாவை ஏற்க மறுப்பு

ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர ரெட்டியின் ராஜிநாமாவை ஆந்திரா மற்றும் தெலுங்கானா நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

இதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் சேர்ந்தார் என அச்செய்தி குறிப்பிடுகிறது. ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் விடுவித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தீர்ப்பு வழங்கிய சில மணி நேரங்களில் நீதிபதி தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில், அவரை உடனடியாக பணியில் சேரும்படி தற்காலிக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ரவீந்திர ரெட்டி 15 நாட்கள் விடுப்பில் செல்லவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அச்செய்தி விவரிக்கிறது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: