எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு

  • 20 ஏப்ரல் 2018

சினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும்,பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

படத்தின் காப்புரிமை Twitter

எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருமலை சடகோபன் என்பவர் எழுதியிருந்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் இழிவாக பேசப்பட்டிருந்தது.

அந்த பதிவு தொடர்பான சர்ச்சை எழுந்ததும் திருமலை சடகோபன் தன் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டார். எஸ்.வி.சேகரும் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இருந்தபோதும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஸ்க்ரீன் ஷாட்கள் தற்போது சமூகவலைதளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

எஸ்.வி.சேகர் பதிவுசெய்த இந்தக் கருத்துக்கு பத்திரிகையாளர்களால் கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரன்ட்லைன் இதழின் ஆசிரியருமான விஜயஷங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் குறிப்பில், "ஊடகத் துறைக்கு அதிக அளவில் பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீண்டதூரப் பயணங்கள், இரவு ஷிப்டுகள், அபாயகரமான சூழல்கள் என்று அசராமல் பணிபுரிகிறார்கள். இரான்-ஈராக் போர் உச்சகட்டத்திலிருந்த போது போர்முனையிலிருந்து செய்தி சேகரித்த சீமா முஸ்தபா, 2002இல் நடந்த குஜராத் வன்முறையின் போது களத்தில் நின்று கட்டுரைகள் எழுதி அதற்காக விருது பெற்ற டியோன் புன்ஷா (பிரண்ட்லைன்), மதவாதப் பேய்களுக்கு எதிரான போரில் உயிர்த்தியாகம் செய்த கவுரி லங்கேஷ், இயற்கைப் பேரிடர்கள் நிகழந்தபோது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று செய்தி சேகரித்த பெண் நிருபர்கள்.... இந்தப் பட்டியல் நீளமானது." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தி.மு.கவின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எஸ்வி சேகரின் இந்தக் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "ஊடகத் துறையில் உள்ள பெண்கள் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வி சேகரின் கருத்து அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இப்படிப்பட்ட பதிவுகளைப் போட்டுவிட்டு, கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகிவருகிறது. பிஜேபி தலைமை எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இத்தகைய கருத்துகளுக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள முடியும்" என அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார், "பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்த பதிவு பெண்களை மட்டும் இழிவுசெய்யவில்லை. ஊடக முதலாளிகளையும்தான் கேவலப்படுத்துகிறது. இதுவரை ஊடக முதலாளி ஒருவர்கூட இதற்கு எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லையே அது ஏன்?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

எஸ்.வி. சேகர் பகிர்ந்திருக்கும் இந்தப் பதிவை எழுதியிருக்கும் திருமலை சடகோபன், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். சர்ச்சை பெரிதானதும் தனது பக்கத்தை பிறர் பார்க்காத வண்ணம் முடக்கியுள்ளார். அவர் தன்னுடைய பதிவில், தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் புகார் அளித்தார் எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படும் என்றும் எச். ராஜாவும், எஸ்வி சேகரும், ’சைபர் சைக்கோக்கள்’ என்றும் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள இந்த இரண்டு சைபர் சைக்கோக்களால் தமிழகத்திற்கே ஆபத்து எனவும் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்