"பெண்களின் நேர்மையை எதிர்கொள்ள முடியவில்லை": எஸ்.வி சேகருக்கு பதிலடி

  • 20 ஏப்ரல் 2018

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியைத் தவறாக பேசிய எச்.ராஜா விவகாரம் அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது எஸ்.வி.சேகர் பகிர்ந்த முகநூல் பதிவு.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரான எஸ்.வி. சேகர் வியாழக்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து 'திருமலை சடகோபன்' என்பவர் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்தை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பதிவை முழுமையாக படிக்காமல் அதை பகிர்ந்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தாலும் அவர் பகிர்ந்த அந்த பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பரவலாக பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

எஸ்.வி சேகர் கருத்திற்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பில்லை

எஸ்.வி.சேகரின் இந்த கருத்து குறித்து பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் பிபிசி தமிழிடம் பேசியபோது, "எஸ்.வி சேகர் மற்றும் எச்.ராஜாவின் கருத்துகளுக்கும் பா.ஜ.கவிற்கும் எந்த தொடர்பும் இல்லை" என தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Facebook

இது குறித்து கவலை தெரிவித்த அவர், தானும் ஒரு செய்தியாளர்தான் என்றும், இந்த விஷயத்தில் தாம் செய்தியாளர்கள் பக்கம் நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

"தாம் பெண் செய்தியாளர்களையும் அவர்கள் சக்தியையும் பெரிதும் மதிப்பதாக" கூறிய தருண் விஜய், பெண்கள் இல்லாமல் இந்தியாவே இல்லை என்று தெரிவித்தார்.

'சைபர் சைக்கோ'

இந்நிலையில், எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் பாஜக அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பலர் இதற்கு கண்டனங்களும் தெரிவித்திருந்தனர்.

சில பத்திரிகையாளர் அமைப்புகள் எஸ்.வி சேகரைக் கைதுசெய்ய வேண்டுமென காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ள நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் எஸ்.வி. சேகர் மற்றும் எச்.ராஜா ஆகியோர் 'சைபர் சைக்கோ' என்று குறிப்பிட்டிருந்தார்.

மன்னிப்பு கோரினார் எஸ்.வி. சேகர்

பெண் செய்தியாளர்களை தவறாக சித்தரித்த பதிவை படிக்காமல் பகிர்ந்துவிட்டதாக மன்னிப்பு கோரியுள்ளார் எஸ்.வி.சேகர். அந்த பதிவில் தரக்குறைவான வார்த்தைகள் இருப்பது தெரிந்தவுடன் அந்தப் பதிவை நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய எஸ்.வி.சேகர், தப்பு செய்வது என்பது சகஜமான ஒன்றுதான், தனது தவறுக்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார்.

பெண்களின் நேர்மையை எதிர்கொள்ள முடியவில்லை

இது குறித்து தனது கருத்துகளை பிபிசியிடம் பதிவு செய்தார் வழக்கறிஞர் சாந்தகுமாரி. அவர் கூறுகையில், செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயல் தவறு என்று கூற எஸ்.வி சேகருக்கு தைரியமில்லை. ஆனால், ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு எளிமையாக இழிவு படுத்தி அவரால் பேச முடிகிறது என்று தெரிவித்தார்.

"ஒரு பெண்ணின் நேர்மையான கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனை வேறு விதமாக திரித்து பேசுவதில் இவர்கள் சுகம் கண்டுள்ளனர். "

படத்தின் காப்புரிமை Twitter

ஆனால் தரக்குறைவாக பேசிவிட்டார்கள் என்பதற்காக இக்காலத்து பெண்கள் சுருண்டு போய்விடமாட்டார்கள் என்று குறிப்பிட்ட வழக்கறிஞர் சாந்தகுமாரி, அதனை எதிர்த்து நின்று போர் தொடுப்பவர்கள்தான் இன்றைய பெண்கள் என்றும் கூறினார்.

இது போன்ற சம்பவங்களால் முடங்கிவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று கூறுகிறார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

சட்டம் என்ன சொல்கிறது?

தமிழக பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், பெண்களை அவமானப் படுத்தினாலோ, மன உளைச்சலுக்கு ஆளாக்கினாலோ அல்லது சங்கடத்துக்கு உட்படுத்தினாலோ அது குற்றமாகும் என்று கூறும் அவர், இந்திய தண்டனை சட்டம் 294 கீழும் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்றார்.

புகார் மட்டும் கொடுக்காமல், பெண் பத்திரிகையாளர்கள் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எச்.ராஜா மற்றும் எஸ்.வி. சேகர் ஆகிய இருவரும் தொடர்ந்து இம்மாதிரியான கருத்துகளை பகிர்வதை நிறுத்த வேண்டும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அந்தப் பதிவு ஏற்று கொள்ளத்தக்கதல்ல என்று கூறும் கவிதா பாஜக போன்றதொரு கட்சியிலிருக்கும் நபர்கள் இம்மாதிரியான கருத்துகளை பகிர்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.

இதுகுறித்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் பத்திரிகையாளர் கவிதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்