தச்சுக் கலையை காதலிக்கும் அப்பர் லட்சுமணன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை என்ன?

  • 21 ஏப்ரல் 2018
தச்சு

55வயதான மரத் தச்சர் அப்பர் லட்சுமணனின் அலுவலகம் மற்றும் வீடு என இரண்டு இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான சைக்கிள், தட்டு, மின்விசிறி, தண்ணீர் கோப்பை, சமையல் பாத்திரங்கள், பைக், கார், வரவேற்பறையில் அலங்கார விளக்கு, அழகுப்பொருட்கள் என பலவும் மரத்தால் செய்யப்பட்டவையாக உள்ளன.

மரத்தால் செய்யப்பட்ட நாற்காலி, மேஜை போன்றவை பெரும்பாலான வீடுகளிலும், அலுவலகங்களிலும் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், சென்னை போரூரில் உள்ள தொழில்முறை தச்சர் அப்பரின் வேலையிடத்திலும், வீட்டிலும் மரத்தால் செய்யப்படாத பொருட்கள் மிகவும் குறைவு என்றே தோன்றியது.

ஏழாம் தலைமுறையாக தச்சுத்தொழிலை செய்துவருவதாகக் கூறும் இவர், தனது தந்தை அப்பரிடம் அடிப்படை மரவேலைப்பாடுகளையும், தனது குரு கணபதி ஸ்தபதியிடமும் தச்சுக்கலை அறிவியலையும் கற்றுக்கொண்டதாக கூறுகிறார்.

''எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, தச்சுக்கூடத்தை பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். வேலை செய்யாத நாட்கள் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். மரத்துண்டுகளைச் செதுக்கி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் செய்வது தொடங்கி, எனது தேவைக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், ஆர்டர் கொடுக்கப்படும் அலுவலக நாற்காலி, வீடுகளுக்கு கதவு, வாசல்கால், தூண், மாடி கைப்பிடிகள், கட்டில், கோயில் தேர் மற்றும் வாகனம், மரத்தில் புடைப்புச்சிற்பங்கள் போன்ற பொருட்களை செய்து தருகிறேன்,'' என தனது வேலைப்பாடுகளை விவரித்தார்.

மரம் தந்த வாழ்வு

அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தவுடன், மரத்தில் வடிக்கப்பட்டுள்ள அவரது குரு கணபதியின் சிலை, தசாவதாரத்தை விநாயகர் எடுத்திருந்தால் அவரது தோற்றம் என்னவாக இருக்கும் என்பதை விளக்கும் புடைப்புச் சிற்பங்கள், மரத்தால் செய்யப்பட்ட சுவர் கடிகாரம், மரப்பெட்டி என தொழிற்கூடத்தில் இருப்பதுபோலவே இருந்தது.

அவருடைய முகவரி அட்டை(visiting card), மின்விசிறி, மதிய உணவு, அடைக்கப்பட்ட கேரியர் ஆகியவை கூட மரத்தால் செய்யப்பட்டவைதான்.

''நாம் உட்காரும் நாற்காலி, கட்டில், சாப்பிடும் தட்டு என பலவற்றிலும் பிளாஸ்டிக் பொருட்கள் வந்துவிட்டாலும், ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள மருத்துவ குணங்களை அறிந்தவர்கள் மரத்தால் செய்யப்பட்ட சாமான்களை விரும்புவார்கள். தற்போது மக்கள் மீண்டும் இயற்கை உணவு, மருத்துவம் என வாழும் முறையை மாற்றிவருவதால், எங்களைப் போன்ற தச்சர்களின் எதிர்காலமும் செழிப்பாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்,'' என நம்பிக்கையுடன் பேசினார் தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளைப் பெற்றுள்ள தச்சர் அப்பர் லட்சுமணன்.

''பணத்தை விட முக்கியம் பணி''

தனது வியாபாரத்திற்கு விளம்பரம் செய்வதில்லை என்று கூறும் அப்பர், ''இணைய தளம் வைத்துக்கொள்ளுங்கள் என பலரும் சொல்கிறார்கள். என்னிடம் வரும் ஆடர்களுக்கு வேலை செய்வதற்கே எனக்கு நேரம் இல்லை. அதிக பணம் ஈட்டி, வெறும் லாபம் பார்க்கும் தொழிலாக தச்சுவேலையை செய்யவேண்டும் என்று நான் எண்ணவில்லை. எனக்கு தேவையான அளவு பொருளாதாரத்தை எனது தொழில் எனக்கு தருகிறது. என்னை செதுக்கிய இந்த தச்சுத்தொழிலுக்கு எனது பணியை செய்யவேண்டும் என்ற திட்டத்தில் வேலைசெய்கிறேன். அடுத்த தலைமுறைக்கு இந்த கலையைக் கற்றுக்கொடுக்கவேண்டும். காலத்தால் அழியாத வேலைப்பாடுகளைச் செய்யவேண்டும் என்பதே என் வாழ்நாள் திட்டம்,'' என்கிறார் எளிமையாக.

சமீபத்தில் குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு செய்த தேர், சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேர் போன்ற வேலைகளை செய்யும்போது தியானம் செய்வதுபோல், பல நாட்கள் செய்த முயற்சியில் அவற்றை செதுக்கியதாகக் கூறுகிறார்.

தச்சரின் வித்தியாசமான வாழ்நாள் திட்டங்கள்

தற்போது இரண்டு பெரிய பணிகளை திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர் மரவேலைப்பாடுகளுக்கான முதல்கட்ட வரைபடங்களை ஆர்வமாக காண்பித்தார்.

''குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் வளரும் பருவத்தில் பயன்படுத்தவேண்டிய பொருட்கள் பலவும் இன்று காணமல்போய்விட்டன. நடைவண்டி, மரப்பாச்சி பொம்பை உள்ளிட்ட பொம்மைகள், விரல் சூப்பும் குழந்தைக்கு சீபாங்கிக்கட்டை, அசையும் குதிரைவண்டி தொடங்கி ஒரு மனிதன் வாழும் நாட்களில் பயன்படுத்தும் மரத்தால் செய்யப்பட்ட 240 பொருட்களைக் காட்சிப்படுத்தவுள்ளேன். அடுத்ததாக முழுக்க, முழுக்க மரத்தால் செய்யப்பட ஒரு தியான மண்டபத்தை உருவாக்க யோசனை உள்ளது. அதற்கு சுமார் 3,000 தச்சர்கள் வேலை செய்யவேண்டியிருக்கும். நான் திட்டங்களை தயாரித்துள்ளேன், தனியார் மற்றும் அரசின் உதவி தேவை, கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என தனது அடுத்த பத்தாண்டு திட்டங்களை அடுக்குகிறார்.

கணிதம், அறிவியல் அறிவு முக்கியம்

தச்சுவேலையில் இருந்த ஆர்வமிகுதியால், தனிப்பட்ட வாழ்கையை திட்டமிட்டதே இல்லை என்கிறார் அப்பர். ''மரவேலைப்பாடுகளில் புதுமையாக என்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டு செயல்படுவதே என் வாழ்க்கையாகிப் போனது. இந்த தொழில் செய்ய அடிப்படை கணிதம், அறிவியல், ஓவியம், நுண்ணறிவு, ஆழ்ந்த கவனம் தேவை. ஒரு வேலையை செய்யத் தொடங்கினால் அதுமுடியும்வரை விடுமுறை, ஓய்வு என உட்காரமுடியாது. எனக்கு 33 வயதில்தான் திருமணம் நடந்தது. என்னுடைய தச்சுவேலையைப் பார்த்துதான் எனக்கு பெண் கொடுத்தார்கள். தச்சுவேலைக்கு அதிக தட்டுப்பாடு இருந்தாலும், அந்த வேலையில் மூழ்கும் நபர்கள் குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த முடியாது என்பதால், தச்சுவேலை செய்பவர்களுக்கு இன்றும்கூட பெண் கொடுக்க பலரும் யோசிக்கிறார்கள்,'' என்கிறார்.

தச்சுத்தொழிலில் இருக்கும் ஈடுபாடு காரணமாக தனது மனைவி சஜிதா, மகன்கள் சூரியப்பிரகாஷ், பிரவீன் குமார் மற்றும் மகள் சுருதி ஆகியோருடன் வெளியூர் பணங்கள்கூட செய்ததில்லை என்கிறார். ''எனக்கு ஞாயிற்றுக் கிழமை விடுப்பு, வெளியூர் பயணம் போன்றவற்றில் கூட நாட்டம் இல்லை. எங்கு சென்றாலும், அங்குள்ள பொருட்கள் எந்த மரத்தால் ஆனவை, ஏன் தகுந்த மரத்தை பயன்படுத்தவில்லை என்ற கேள்விகள் எழும் என்பதால் உறவினர்களுடன் என் குடும்பத்தினரை அனுப்பிவைப்பேன்,'' என சிரிக்கிறார்.

மண வாழ்க்கையில் தொடக்கத்தில் வருத்தம் இருந்தாலும், அப்பரின் வேலைப்பாடுகள் கவனம் பெறுவதால், அவரை ஊக்குவிக்கும் பணியைதான் ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார் மனைவி சஜிதா. ''உணவு, ஓய்வு என்பதை மறந்து வேலைசெய்வார். அவரது தொழில் அப்படி, எனக்கு இப்போது பழகிவிட்டது என்பதால் எனக்கு சிரமம் இல்லை,'' என்கிறார் சஜிதா.

கார், சைக்கிள் போன்ற வாகனங்களை மரத்தால் செய்தது பற்றி அப்பரிடம் கேட்டபோது,''எனது தாத்தா கோயில் தேர்களை செய்தார். என் அப்பா காலத்தில் தேர் வேலைகள் அதிகம் இல்லை. மாட்டுவண்டி,ஏர்கலைப்பை மற்றும் கைத்தறி போன்றவற்றை செதுக்கினார். அதே தச்சுக்கலையை நவீன காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தி கார், பைக், சைக்கிள் செய்தேன். நாட்டுரக வேல மரத்தால் செய்யப்பட்டுள்ளதால், வண்டிகளுக்கு தீயினால் சேதம் ஏற்பட வாய்ப்பில்லை,'' என்கிறார்.

கடைசி தலைமுறை தச்சர்கள்

தற்போது மரவேலைப்பாடுகளை செய்வதற்கான மரங்களை வாங்குவது தொடர்பாக பேசியஅவர், ''என் தாத்தா காலம் வரை, கோயில் வேலைப்பாடுகளுக்கு மரம் வெட்டும்போது, ஒரு மரத்தை வெட்டினால், ஐந்து கன்றுகளை நடவேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. தற்போது நாம் வசிக்கும் நகரப்பகுதிகளில் மரம் நடமுடியாததால், மரக்கடைகளில் நேரடி கொள்முதல் செய்கிறோம். தேக்கு மரங்கள் சூடான், நைஜீரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது. நம் மாநிலத்தில் உள்ள காடுகளில் உள்ள முற்றிய மரங்களை தச்சர்களுக்கு நேரடியாக அரசு வழங்கினால் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்,'' என்றார்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அப்பர், தச்சுத் தொழில் குறித்து எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். ''வீடு, அலுவலகங்களை வடிவமைக்க பட்டப்படிப்பு உள்ளது. எங்களைப் போன்ற பரம்பரை தச்சர்களின் கலை நுணுக்கங்களைப் பற்றி எந்த புத்தகமும் வரவில்லை என்பதால் நானே எழுதத்தொடங்கினேன்,'' என்கிறார்.

''நான் செய்த பூசைமாடங்கள் அமெரிக்கா, இலங்கை, கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் இல்லங்களில் உள்ளன என்பது எனக்கு பெருமை. தற்போது அடுத்த தலைமுறையாக என் மகனும் குடும்பத்தொழிலை கற்றுவருவது எனக்கு பெருமையாக உள்ளது. என்னுடைய வயதில் உள்ள பல தச்சர்கள், கடைசி தலைமுறையாக தச்சுவேலை செய்பவர்களாக உள்ளனர். குறைந்தபட்சம் பரம்பரை முறையாக கற்ற தச்சர்களிடம் உள்ள மரவேலைப்பாடுகளுக்கான அளவுமுறைகள், சாஸ்திரமுறைகளை அரசு ஆவணப்படுத்தவேண்டும். ஒரு கலைஞன் இறந்துபோகும்போது, அவன் கற்றுவைத்திருந்த நுணுக்கம் அவனுடன் மறைந்துபோய்விடுகிறது. தச்சர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். வியாபாரம் பெருகிக்கொண்டு வருகிறது,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்