சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி மரணம்

  • 21 ஏப்ரல் 2018
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழப்பு

கருணைக் கொலை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று இயற்கையாகவே உயிரிழந்தது சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 42 வயதான யானை ராஜேஸ்வரி.

உடல் நலம் குன்றிய நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ராஜேஸ்வரி சனிக்கிழமை பகல் 12.20 மணி அளவில் இயற்கை மரணம் எய்தியது.

இரண்டு முன்னங்கால்களும் பாதித்த நிலையில் மார்ச் 5 முதல் நிற்க இயலாமல் படுத்த படுக்கையானது ராஜேஸ்வரி.

படுக்கைப் புண் ஏற்பட்ட நிலையில் கிரேன் உதவியுடன் யானையை தூக்கியும், திரும்பி படுக்க வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், படுக்கைபுண் நோய் அதிகமாகியும், எழுந்து நிற்க இயலாமலும், அதிகப்படியான வலியாலும் துடித்துவந்தது.

முறையான உணவு எடுத்துக்கொள்ள இயலாத நிலையில், சிறப்பு மருத்துவக் குழு ஒன்று யானைக்கு சிகிச்சை அளித்து வந்தது.

Image caption சிகிச்சை பெறும் யானை ராஜேஸ்வரி

தினமும் ஏரளமான பொதுமக்கள், பக்தர்கள் இந்த யானையை வந்து பார்த்தனர். இந்த கோயில் யானை நலம் பெற வேண்டும் என்று பலவிதமான பிரார்த்தனைகளை மக்கள் நடத்தி வந்த நிலையில், சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர்கள் சார்பாக யானையின் நிலையை கருத்தில் கொண்டு கருணை கொலை செய்யவேண்டி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை இயற்கையாகவே அது உயிரிழந்தது.இதையடுத்து பக்தர்கள் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, சுகவனேஸ்வரர் திருகோயில் நடை இன்று சாத்தப்பட்டது. யானை அடக்கம் செய்யப்பட்ட பின்னர் சடங்குகள் முடிக்கப்பட்ட பின்னரே கோயில் திறக்கப்படும்.

ஏரளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து யானையை பார்வையிட்டு வருவதால், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

யானை ராஜேஸ்வரி சிகிச்சை பெற்றுவந்த கோரிமேட்டில் உள்ள நந்தவன பகுதியிலேயே சடங்குகளுக்கு பின்னர் அடக்கம் செய்யப்படும்.

வலியால் துடித்த கோவில் யானை: கருணைக் கொலை செய்ய முடிவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வலியால் துடித்த கோவில் யானையை கருணைக் கொலை செய்ய முடிவு

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: