உங்கள் குழந்தையிடம் பாலியல் வல்லுறவு பற்றி எப்படி பேசுவீர்கள்?

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்தில் குழந்தைகள் சித்திரவதை, பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலை செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களுக்கு பின்னர் இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கெதிரான சீற்றம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள மக்கள் இச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தங்கள் குழந்தைகளையும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எப்படி விளக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

"ஒரு குழந்தைக்கு கல்வி புகட்டுவது என்பது ஒரு முறை மட்டுமே செய்ய கூடிய விவகாரம் அல்ல" என்று பிபிசியிடம் பேசிய டெல்லியை சேர்ந்த குழந்தை உளவியலாளரான டாக்டர் சமிர் பாரிக் கூறினார்.

"இதுபோன்ற சம்வங்கள் நடைபெறும்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வயது மற்றும் அறிவாற்றலை அடிப்படையாக கொண்டு அதை விளக்க வேண்டும்."

இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற விடயங்கள் குறித்து தங்கள் குழந்தைகளிடம் பேசுவதை இந்திய பெற்றோர்கள் தொடங்கிவிட்டாலும், அது இன்னும் பரவலாக மாறவில்லை என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் அத்துமீறல் குறித்த விடயங்களை எப்படி விளக்குகிறார்கள் என்பது பற்றிய கருத்துக்களை தொகுத்து வழங்குகிறார் பிபிசியின் நிகிதா மாந்தானி.


"உலகம் முழுவதும் இதுபோன்று நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார்"

11 வயதாகும் என்னுடைய மகளுக்கு படிப்பு மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம்.

படத்தின் காப்புரிமை Getty Images

தொடக்கத்தில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தாக்குதல் சம்பந்தப்பட்ட செய்திகள் மற்றும் உரையாடல்களை அவளுக்கு தெரியப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், அது தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அவளுக்கு ஐந்து வயதானபோது, அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று விளக்கினேன். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு புத்தகத்தில் "பாலியல் வல்லுறவு" பற்றி அவள் வாசித்து, அதற்கான அர்த்தம் என்னெவென்று என்னிடம் கேட்டாள்.

”எந்தவிதமான படங்களையோ, காணொளிகளையோ நாடாது, ஒருவரின் உடல் சார்ந்த தனியுரிமையை மற்றொருவர் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அத்துமீறுவது” என்று நான் விளக்கமளித்தேன்.

சமீபத்தில் எட்டு வயதான சிறுமி ஒருவர் காஷ்மீரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான செய்தி வெளிவந்தவுடன் என்னிடம் வந்த மகள், "உலகம் முழுவதுமே இதுபோன்று நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றாள்.

இதுபோன்ற நிகழ்வுகளினால் எனது மகள் பயப்படுகிறாள். இந்நிலையில், அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புக்காக ஒருவர் இருக்க வேண்டியதிற்கான அவசியத்தையும் அல்லது நான் ஏன் வட இந்தியாவில் இன்னும் பழமைவாத ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புகிறேன் என்பதை கூறுவதற்கு கடினமாகவும் உள்ளது.

- மோனா தேசாய், மும்பை சேர்ந்த 11 வயதான சிறுமியின் தாய்


"மாற்றத்தை கொண்டு வருவதில் அவர் ஒரு பங்கை வகிக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்"

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பான சம்வங்கள் குறித்து நான் என்னுடைய மகனிடம் சிலமுறை பேசியுள்ளேன். மேலும், பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நான் அவனிடம் பேசியுள்ளேன்.

ஒரு மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த ஆணாக இருக்கும் அவன் இதுபோன்ற விடயங்களை அறிந்திருக்க வேண்டுமென்றும், அதில் மாற்றத்தை கொண்டுவருவதில் தன்னுடைய பங்கையும் அவன் உணர வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

பாலியல் வன்முறை என்பது பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை உண்டாக்கும் விடயமாகும். அது இறுதியில் எல்லோருடைய வாழ்க்கை மற்றும் நடத்தையையும் பாதிக்கக்கூடிய ஒன்றாகும்.

என் மகன்களை இதுபோன்ற செய்திகளை அறிந்துகொள்வதிலிருந்து விளக்கி வைப்பதில்லை. இருப்பினும், இந்த உரையாடல்களை அவர்களின் மீது சுமத்துவதற்கு பதிலாக அவற்றை கலந்துரையாடுவதற்கு நான் அனுமதிக்கிறேன்.

- சுனயா ராய், பெங்களூரில் வசிக்கும் 11 மற்றும் 3 வயதுடைய இரண்டு மகன்களின் தாய்


"குற்றங்காணாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்"

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் அத்துமீறல் சார்ந்த சம்பவங்கள் குறித்து என்னுடைய மகளிடம் பேசுவதென்பது கடினமான காரியமாகும்.

என்னுடைய மகள் தன்னை சுற்றியுள்ள மக்களை நம்ப வேண்டுமென்றும், குறிப்பாக ஆண்களை நண்பர்களாக கொள்வதற்கும், காதலில் விழுவதற்கும் நான் விரும்புகிறேன். ஆனால், அதே சமயத்தில் அவருடைய பாதுகாப்பு குறித்து எனக்கு கவலை எழுகிறது.

அவர் வீட்டிற்கு தாமதமாக வந்தாலோ அல்லது தனது விருப்பத்திற்குரிய ஆடையை அணிந்தாலோ எனக்கு கவலையில்லை. ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு வீட்டிற்கு திரும்புமாறும், குறிப்பிட்ட விதமான ஆடைகளை அணிவதற்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

நான் விளக்கும் விடயத்தில் குற்றங்காணாமல் அவர் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.

அடிக்கடி நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அவளை வருத்தத்திற்குள்ளாக்குகிறது. அப்போது அவள் "எல்லா ஆண்களும் அப்படித்தானா?" என்று கேள்வியெழுப்பும்போது, சமூகத்தின் ஒரு சிலர்தான் அவ்வாறு உள்ளதாக நான் பதிலளிக்கிறேன்.

- பருல், சண்டிகரில் வசிக்கும் 14 வயதான சிறுமியின் தாய்


"என் பருவ வயது மகனை முதல் முறையாக பாலியல் வல்லுறவுக்கெதிரான போராட்ட களத்திற்கு அழைத்துச்சென்றேன்"

படத்தின் காப்புரிமை Getty Images

நாங்கள் எங்களுடைய மகனோடு ஒரு செயலை செய்வதற்கு முன் ஒருவரின் ஒப்புதலை பெறுவது, நன்னடத்தை மற்றும் வன்முறைகள் குறித்தும், இதுபோன்ற விடயங்களில் ஆண்களுக்கு உள்ள பங்கு குறித்தும் உரையாடுவோம்.

குழந்தைகள் தங்களது நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது மிகவும் முக்கியம். ஒவ்வொருவருக்கும் தகவலானது வெவ்வேறு வழிகளிலிருந்து வருகிறது. ஆனால், அவற்றை முதிர்ச்சி பெறாத இளையோர்களால் தங்களது ஹார்மோன்கள் திசைதிருப்புவதற்கு முன்னர் புரிந்துகொள்வதில்லை. எனவே, இதுபோன்ற விடயங்கள் சார்ந்த கலந்துரையாடல்கள் அவசியமாகிவிட்டது.

நமது குழந்தைகளிடம் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்றோ, செய்யக்கூடாது என்றோ கூறுவதுடன் இது முடிந்துவிடுவதில்லை. அவர்களை சுற்றியுள்ள இடங்கள் அத்தகைய சம்பவங்களுக்கு உட்பட்டது அல்ல என்பதை உறுதிப்படுத்த நாம் அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும்.

கடந்த ஞாற்றுக்கிழமையன்று, என் பருவ வயது மகனை முதல் முறையாக பாலியல் வல்லுறவுக்கெதிரான போராட்ட களத்திற்கு அழைத்துச்சென்றேன். தன் போன்ற மற்றும் தன்னை ஒத்த நம்பிக்கைகளை கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை அவர் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

- அருணவா சின்ஹா, டெல்லியை சேர்ந்த 15 வயது இளைஞரின் தந்தை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: