தீபக் மிஷ்ரா மீதான தகுதி நீக்க மனுவை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாவிட்டால்?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவுக்கு எதிரான தகுதி நீக்க மனு தொடர்பாக அனைவரின் கவனமும் மாநிலங்களைவை சபாநாயகர் மீது குவிந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை NALSA.GOV.IN

தகுதி நீக்க கோரிக்கை மனுவை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு முன்னெடுத்துச் செல்வாரா அல்லது தகுதி நீக்கத் தீர்மானம் தகுதியற்றது என்று கூறி ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுவாரா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளிடம் வலுவான ஆதரவு இல்லை என அரசு நம்புகிறது, மேலும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்குப் போதுமான அளவு பலம் இல்லை.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்படும். ஆனால் அது எதன் அடிப்படையில் செய்யப்படும் என்பதுதான் முக்கியமானது என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் இந்த தகுதி நீக்க கோரிக்கை மனு ஏற்கப்படாவிட்டாலும் விவாதங்கள் எழும் எனவும் கூறப்படுகிறது.

நீதிபதிகள் தகுதி நீக்கம்- முன்னுதாரணம் உள்ளதா?

உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதான தகுதிநீக்க கோரிக்கைகள் தொடர்பான முன்னுதாரணங்கள் ஏதேனும் உள்ளனவா?

இந்திய வரலாற்றில் முன்னதாக இது போன்ற ஆறு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் ஐந்து முறை நாடாளுமன்றம் விசாரணைக் குழு அமைப்பதற்கு முன்னரே, நீதிபதிகள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

1970இல் மட்டும் தகுதி நீக்க கோரிக்கை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போது, சம்பந்தப்பட்ட நீதிபதி, மாநிலங்களவை சபாநாயகரை அணுகி பிரச்சனையை விளக்கியதில் விசயம் அங்கேயே முடிவடைந்துவிட்டது, விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவில்லை.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

மாநிலங்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளின் தகுதி நீக்க கோரிக்கை மனுவை ஏற்றுக் கொள்ளும்வரை, இந்தியாவின் தலைமை நீதிபதி நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்வார் என்று அரசின் உயர் பதவிகளின் இருப்பவர்கள் கூறுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

வெங்கய்யா நாயுடு தகுதி நீக்க மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தலைமை நீதிபதியே தன்னைத்தானே விலக்கிக் கொள்ள வேண்டுமா என்பது மத்திய அரசின் முன்னிருக்கும் கேள்விகளில் ஒன்று.

அரசமைப்புச் சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப்பிடம் இதுகுறித்து பிபிசி விரிவாக கேட்டறிந்தது. அவரின் கருத்துப்படி, 'இது தார்மீக அடிப்படையிலானது, அரசமைப்புச் சட்ட கடமையல்ல'.

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவின் கருத்துப்படி, தனக்கு எதிரான தகுதிநீக்க கோரிக்கை மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட உடனே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதித்துறை நடவடிக்கைகளில் இருந்து விலகிவிடவேண்டும்.

இந்திய அரசியமைப்புச் சட்டம் 124 (4) பிரிவின்படி, "நாடாளுமன்ற இரு அவைகளிலும் தலைமை நீதிபதியை தகுதிநீக்கம் செய்வதற்கு ஆதரவான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, மூன்றில் இரு பங்கு வாக்குகள் கிடைத்தால், குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதியை தகுதிநீக்கம் செய்வார்."

நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968 மற்றும் நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1969 ஆகியவற்றின்படி, நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவில் மாநிலங்களவையின் 64 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு மாநிலங்களவை சபாநாயகர் (குடியரசு துணைத் தலைவர்) தகுதிநீக்க கோரிக்கை மனு மீதான இறுதி முடிவை எடுப்பார்.

படத்தின் காப்புரிமை Getty Images

தகுதிநீக்க கோரிக்கை மனு ஏற்றுக்கொண்ட பிறகு நடைமுறை என்ன?

தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவை தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் மூன்று நபர் விசாரணைக்குழு அமைக்கப்படும்.

அவர்களில் ஒருவர் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளாகவோ இருப்பார்கள். இரண்டாவது உறுப்பினர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பர். மூன்றாவது நபர் ஒரு சட்ட வல்லுநராக இருப்பார். இந்தக் குழுவில் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உறுப்பினராக இருக்கமுடியாது.

மாநிலங்களவைத் தலைவர் தற்போது தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டால், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சட்டப்பூர்வமான அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்த நிலையிலும் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டால், நீதிமன்றத்தை அணுகலாம் என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று கருதுவதாக துஷ்யந்த் தவே கூறுகிறார்.

மூன்று நீதிபதிகள் விசாரணைக்குழு மூன்று மாதத்திற்குள் தனது அறிக்கையை அளிக்கும். இந்த விசாரணைக் குழு (இந்த விவகாரம் இந்த அளவிற்கு சென்றால்) இந்திய தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் ஆதாரத்தை ஆராயும்.

சிவில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரங்களைப் போன்றே, சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து விசாரிக்கவும் அவர்கள் மேற்கொண்ட பதவியேற்பு உறுதிமொழி சரிவர கடைபிடிக்கப்பட்டதா என்பதை விசாரிக்கும் அதிகாரம் இந்த விசாரணைக் குழுவுக்கு உண்டு.

படத்தின் காப்புரிமை NALSA.GOV.IN

தகுதிநீக்க விதிமுறைகள்

இந்த விசாரணைக் குழு ஒவ்வொரு குற்றச்சாட்டுகளையும் ஆராய்ந்து, தனது முடிவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். தலைமை நீதிபதி மீது தவறேதும் இல்லை என்று குழு கண்டறிந்தால், தகுதி நீக்க மனு அந்த நிலையில் தள்ளுபடி செய்யப்படும்.

ஆனால், தலைமை நீதிபதி மீதான குற்றத்திற்கு முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும். அதில் தீர்மானத்திற்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்.

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசமைப்புச் சட்டத்தின்படி நிரூபிக்கப்பட வேண்டும்.

அதன்பிறகு, நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒன்றில் நீதிபதியை தகுதிநீக்கம் செய்யும் சட்ட வரைவை இரு அவைகளும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்.

படத்தின் காப்புரிமை Getty Images

வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார், 'விசாரணைக் குழு நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்துவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதி தனது பதவிகளில் இருந்து தானே முன்வந்து விலகவேண்டும். ஆனால், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற நிலையில், நடவடிக்கைகள் மேலும் கடுமையாக செயல்படுத்தப்படலாம்'.

அரசு அதிகாரிகள் இருவர் தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்த செய்தி இது. 'குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவே மாநிலங்களவை சபாநாயகர். அவர் சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்த பிறகே தகுதி நீக்க மனு மீது முடிவெடுப்பார்'.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற எந்தவொரு காலக்கெடுவும் கிடையாது என்று கூறும் ஒரு அதிகாரி, இது போன்ற முந்தைய சந்தர்ப்பங்களில், மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் மக்களவை சபாநாயகர் 3 முதல் 13 நாட்களை எடுத்துக் கொண்டனர்.

மற்றொரு அதிகாரியின் கருத்துப்படி, "தகுதிநீக்க மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், மனுவில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை உறுதிப்படுத்திய பின்னர், மாநிலங்களவை செயலாளர் அறிக்கை சமர்ப்பிப்பார். அதன்பிறகு, மனுவை ஏற்றுக்கொள்வதா அல்லது தள்ளுபடி செய்வதா என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசனை செய்யப்படும். பொதுவாக இதுபோன்ற விவகாரங்களில் தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்கப்படும். இப்போது அவருக்கு எதிரான நடவடிக்கை என்பதால் வேறு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கலக்கப்படும்".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்