1857ம் ஆண்டின் சிப்பாய்க் கலகம் பற்றிப் பேசும் மண்டை ஓட்டின் கதை

Image caption கிளர்ச்சியில் கொல்லப்பட்ட 32 வயது இந்திய சிப்பாயின் மண்டையோடு

இந்த கதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று சொல்கிறார் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் கிம் வாக்னர்.

டாக்டர் கிம் வாக்னர் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் காலகட்டம் தொடர்பான வரலாற்றை போதிக்கிறார்.

2014 ஆம் ஆண்டில், கிம் வாக்னருக்கு வந்த மின்னஞ்சலில் தங்களிடம் ஒரு மண்டை ஓடு இருப்பதாகவும், அதை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் ஒரு தம்பதியினர் குறிப்பிட்டிருந்தார்கள்.

லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த மண்டையோட்டில் கீழ்த்தாடை இல்லை, பற்கள் உதிரும் நிலையில் உள்ளன.

மண்டை ஓட்டின் கண்களின் பின்புறம் இருக்கும் குழியில் கையால் எழுதப்பட்ட குறிப்பு இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது இதுதான்:

வங்காள காலாட்படையின் 46வது ரெஜிமெண்ட்டின் ஹவில்தார் ஆலம் பேக்கின் மண்டையோடு இது. இவர் பீரங்கியால் சுடப்பட்டு இறந்தார். அலம் பேக்கைப் போன்றே ரெஜிமெண்ட்டின் பிற ஹவில்தார்களும் கொல்லப்பட்டார்கள்.

1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகத்தின் முக்கிய தலைவராக இருந்த ஆலம் பேக் கோட்டையை நோக்கிச் செல்லும் பாதையை கைப்பற்றினார். கிளர்ச்சியில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஐரோப்பியர்கள் அந்தக் கோட்டைக்குதான் அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.

டாக்டர் கிரஹாம் குடும்பத்தாருடன் வண்டியில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவருடைய மகளின் எதிரிலேயே ஆலம் பேக் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சுட்டுக் கொன்றார்கள். அவர்களது அடுத்த இலக்கு மதபோதகரான ரெவரண்ட் மிஸ்டர் ஹண்டர். ரெவரண்ட் ஹண்டர் தனது மனைவியுடன் அந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.

ஹண்டரையும் அவர் மனைவியையும் மகள்களையும் கொடுமைப்படுத்தி கொன்று சாலையோரத்தில் வீசியெறிந்தார் லம் பேக்.

ஐந்து அடி ஏழரை அங்குல உயரம் கொண்டவரான ஆலம் பேக்கிற்கு 32 வயது இருக்கும். நல்ல திடக்காத்திரமான உடல்வாகு கொண்ட அவரின் மண்டையோடு கேப்டன் ஏ.ஆர் கோஸ்டேலோ (7வது Drag. Guard) மூலம் இங்கு கொண்டுவரபட்டது. அலம் பேக் பீரங்கியால் சுடப்பட்டபோது கோஸ்டேலோ அந்த இடத்தில் இருந்தார்.

Image caption இந்த கையால் எழுதப்பட்ட இந்த குறிப்பு மண்டையோட்டின் கண்கள் இருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

வங்காளப் படைப்பிரிவில் பணிபுரிந்த ஆலம் பேக், 1858ஆம் ஆண்டு பஞ்சாப், சியால்கோட் பகுதியில் பீரங்கி முனையில் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

சியால்கோட் தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின்கீழ் வருகிறது. ஆலம் பேக் சுடப்பட்டதற்கு சாட்சியாக இருந்த ஐரோப்பிய படையின் கேப்டன் கோஸ்டேலோ, அந்த மண்டையோட்டை பிரிட்டன் கொண்டுவந்தார் என்ற தகவலும் அந்தக் குறிப்பில் காணப்படுகிறது.

கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிரான சிப்பாய் கலகம்

ஐரோப்பியர்களை ஆலம் பேக் கொன்றதற்கான காரணங்கள் இந்த குறிப்பில் இல்லை.

1857 இல் பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த முஸ்லிம் மற்றும் இந்து சிப்பாய்கள் கிளர்ச்சி செய்தனர்.

ராணுவத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்ஃபீல்டு வகை துப்பாக்கி தோட்டாக்களின் உறைகளை வாயால் கடித்து அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று சிப்பாய்களிடையே தகவல் பரவியது.

படத்தின் காப்புரிமை HULTON ARCHIVE/GETTY IMAGES
Image caption 1857 ம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜான்சி மேஜர் ஸ்கின் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் கருதியதால் அந்த உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் சுமார் 200 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர். 1947இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

பிரிட்டனின் எசெக்ஸ் பகுதியில் வசிக்கும் தம்பதிகளிடம் இந்த மண்டையோடு இருந்தது. அவர்கள் இணையதளத்தில் ஆலம் பேக் பற்றி மும்முரமாக தேடினார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கிம் வாக்னர் 1857 கலகம் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார் என்று அந்த தம்பதிகளுக்கு தெரியவந்தபோது, அவரை தொடர்பு கொள்ள முடிவு செய்தனர்.

அறையில் மூடிய அலமாரி

கிம் வாக்னர் நவம்பர் மாதம் அந்த தம்பதிகளை சந்தித்தார். கனமழை பெய்த அந்தநாள் கிம்மின் பிறந்த நாளாக இருந்ததும் தற்செயலானதே.

1963 இல் பிரிட்டனின் கென்ட் நகரில் உள்ள லார்டு க்ளைட் என்ற பப்பில் இருந்து தங்களுடைய உறவினர் ஒருவர் இந்த மண்டை ஓட்டை வாங்கியதாகவும், பிறகு அவரிடமிருந்து பரம்பரைப் பொருளாக தங்களிடம் வந்து சேர்ந்ததாகவும் தம்பதிகள் கிம் வாக்னரிடம் தெரிவித்தனர்.

அந்த பப்பின் கட்டிடத்தின் பின்புறம் இருந்த சிறிய அறையில் பழைய பொருட்கள் மற்றும் பெட்டிகளுக்கு அடியில் இந்த மண்டையோடு கிடைத்திருக்கிறது. அங்கு அது எப்படி வந்தது என்பது பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை. ஆனால் பப்பில் இருந்து இந்த மண்டையோடு எடுக்கப்பட்டபோது, உள்ளூர் பத்திரிகைகளில் இதுபற்றிய செய்திகள் வெளியாகின.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1857 ஜூலை 15, கான்பூரில் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தின் ஒரு காட்சி

பத்திரிகைகளில் வெளியான புகைப்படங்களில் மண்டை ஓடு மட்டுமல்ல, பப் உரிமையாளர்களும் புன்னகையுடன் இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் முகத்தில் பரிசு வென்ற பெருமிதம் தென்பட்டது.

பின்னர் இந்த மண்டையோடு பப்பில் ஒரு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டது.

பப்பில் இருந்த மண்டை ஓடு

பப் உரிமையாளர் இறந்தபோது, அவரின் வாரிசுகளுக்கு மண்டையோடு கிடைத்தது. பிறகு அந்த மண்டையோட்டின் உரிமையாளர்களாக மாறிய தம்பதிகளிடம் இருந்து கிம் வாக்னருக்கு அது கிடைத்தது.

இது பிற மண்டையோடுகளைப் போன்று சாதரணமானதல்ல, ஒரு வரலாற்று சம்பவத்துடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்தது என்று தனது மாணவர்களுக்கு அவர் போதிக்கிறார்.

உண்மையிலுமே இந்த மண்டையோடு தனக்கு ஒரு மிகப்பெரிய பரிசு என்று சொல்கிறார் டாக்டர் கிம் வாக்னர்.

ஆனால் இந்த மண்டை ஓடு உண்மையிலேயே அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்த காலகட்டத்தை சேர்ந்ததா என்பதை வாக்னர் நிரூபிக்க வேண்டியிருந்தது. ஏனெனில், இந்த குறிப்பை எழுதியவர் யார் என்பது தெரியவில்லை.

லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், இந்த மண்டையோட்டை ஆய்வு செய்த நிபுணர், இது 19ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியை சேர்ந்ததாகவும், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு ஆணின் மண்டையோடாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை DOVER KENT ARCHIVES
Image caption பப்பின் புகைப்படம்

மண்டையோட்டின்மீது எந்தவொரு வன்முறையின் தடயமும் இல்லை ஒரு பீரங்கியின் மூலம் சுடப்பட்டிருந்தால், அதன் தாக்கம் தெரியாமல் போகாது என்று அந்த நிபுணர் கூறினார்.

மங்கல் பாண்டே விதிவிலக்கு

மண்டையோட்டின்மீது சில வெட்டுக்களின் தடயங்கள் இருப்பதாக அருங்காட்சியக நிபுணர் தெரிவித்தார். அந்த நபரின் மரணத்திற்கு பிறகு உடலில் இருந்து தலை வெட்டப்பட்டபோது இந்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம், அல்லது பூச்சிக் கடிகள்கூட காரணமாக இருக்கலாம் என்கிறார் நிபுணர்.

பிரிட்டன் அரசு வரலாற்றில் முக்கியமான சிப்பாய்களைப் பற்றிய ஆவணங்கள் அரிதாகவே உள்ளன. மங்கல் பாண்டே போன்ற சிலர் மட்டுமே விதிவிலக்குகள்.

1857ஆம் ஆண்டின் சிப்பாய்க் கலகத்தின்போது மார்ச் 29ஆம் தேதி கல்கத்தாவில் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் மங்கல் பாண்டே.

இந்த சம்பவம், வட இந்தியாவில் கிழக்கிந்திய ராணுவத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு வித்திட்டது.

வாரிசுகள் யாரும் உரிமை கோரவில்லை

இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள அவணக் காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த எந்தவொரு ஆவணங்கள், அறிக்கைகள், கடிதங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் விசாரணைப் பதிவுகள் என எதிலுமே பேக்கின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மண்டையோட்டிற்கு உரிமை கோரவும் யாரும் வரவில்லை.

படத்தின் காப்புரிமை FELICE BEATO/GETTY IMAGES
Image caption இந்திய வீரர்களின் சிப்பாய் கலகம் தோல்வியடைந்த பிறகு கிளர்ச்சியில் ஈடுபட்ட சிப்பாய்களை 1858ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி தூக்கில் இட்டது

ஆயினும், விசாரணையில் சில புதிய விஷயங்கள் உறுதி செய்யப்பட்டன

ஆலம் பேக்கால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எழுதப்பட்ட சில கடிதங்கள் டாக்டர் கிம் வாக்னருக்கு கிடைத்தது. சியால்கோட்டில் அந்த காலகட்டத்தில் அமெரிக்க மிஷனரியாக இருந்த ஆண்ட்ரூ கார்டனின் கடிதங்களும் குறிப்புகளும், வரலாற்று சம்பவத்தின் கண்ணிகளை ஒன்றிணைத்து ஒரு முடிவுக்கு வர உதவின.

பத்திரிகை செய்தியில்...

டாக்டர் கிராஹம் மற்றும் ஹண்டர் தம்பதிகளை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார் ஆண்ட்ரூ கார்டன்.

ஆலம் பேக் ஹண்டர் தம்பதிகளை கொன்றபோதும், பிறகு அலம் பேக் பீரங்கியால் சுடப்பட்டபோதும் ஆண்ட்ரூ கார்டன் சம்பவ இடங்களில் இருந்தார்.

இதைத் தவிர, லண்டனின் வொயிட்ஹாலில் ஒரு கண்காட்சியில் இந்த மண்டையோடு வைக்கப்பட்டிருந்தது பற்றிய குறிப்பு பிரிட்டனின் 'தி ஸ்பேர்' என்ற பத்திரிகையில் 1911ஆம் ஆண்டு பதிப்பில் இடம் பெற்றுள்ளது. அதன்படி:

'ராயல் யுனைட்டட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூஷனின் வொயிட்ஹால் அருங்காட்சியகத்தில் இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தை நினைவூட்டும் ஒரு நினைவுச்சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிப்பாயின் மண்டையோடு. வங்காள ரெஜிமெண்டின் 49வது பிரிவை சேர்ந்த ஒரு சிப்பாயும் வேறு 18 பேரும் பீரங்கியால் சுடப்பட்டனர்'.

'இந்த மண்டை ஓட்டைக் கொண்டு அந்த மோசமான காலகட்டத்தையும், உள்ளூர் மக்களின் வன்முறை அதை அடக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளையும் அறிந்துக் கொள்ளமுடிகிறது. இன்றைய காலகட்டத்தில் சகித்துக்கொள்ள முடியாத அந்த நடவடிக்கைகளின் நினைவுச் சின்னம், பெரிய அளவிலான பொதுக் கண்காட்சியில் வைக்கப்பட வேண்டுமா?"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1857 புரட்சியை குறிக்கும் புகைப்படம்

போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆலம் பேக் தொடர்பாக டாக்டர் வாக்னர் விசாரணைகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்.

அவர் லண்டன் மற்றும் டெல்லியில் இருந்த பழைய ஆவணங்களை ஆராய்ந்தார். 1857 ஆம் ஆண்டு ஜூலையில் நான்கு நாட்கள் நடைபெற்ற யுத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வாக்னர் பாகிஸ்தானின் சியால்கோட் நகரத்திற்கும் பயணம் மேற்கொண்டார்.

வரலாற்று சம்பவங்களின் கண்ணிகள் இணைந்தன

சியால்கோட் கலகக்காரர்களின் போராட்டத்தை ஜெனரல் நிக்கல்சன் தோற்கடித்தார்.

1857ஆம் ஆண்டு கலகத்தில் ஈடுபட்ட புரட்சியாளர்களின் கடிதங்கள், முழக்கங்கள் மற்றும் அறிக்கைகளை வாக்னர் கண்டறிந்தார். அந்த காலகட்டத்தின் பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை ஆராய்ந்த அவர், புத்தகங்களைப் படித்தார்.

பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தானில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பிறகு, வரலாற்றின் கண்ணிகளை இணைத்ததாக வாக்னர் கூறுகிறார். இது ஆலம் பேக்கின் மண்டை ஓடு மட்டும் அல்ல, அது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பகுதியைப் பற்றிய பல செய்திகளை வெளிக் கொணர்வதாக கூறலாம் என்கிறார் அவர்.

'துப்பறியும் நாவல்'

தனது ஆராய்ச்சிகளை தொகுத்து, 'த ஸ்கல் ஆஃப் த ஆலம் பேக்' என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் வாக்னர். இந்த புத்தகம் பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தைப் பற்றி பேசுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாபெரும் சாம்ராஜ்யத்திற்கான எதிர்ப்பையும், கிளர்ச்சியையும் பற்றிய ஒரு புதிய கோணத்தை இந்த மண்டை ஓடு தந்திருக்கிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான யாஸ்மின் கான், இந்த புத்தகம் ஒரு துப்பறியும் நாவலைப் போன்று இருப்பதாகவும், வரலாறு அல்ல என்றும் கூறுகிறார். ஆனாலும் இந்த புத்தகம், பிரிட்டிஷ் அரசைப் புரிந்துகொள்வதில் நமக்கு உதவியாக இருக்கிறது. அந்தக் காலகட்டத்தின் செயல்பாடுகளை நமக்கு உணர்த்துகிறது என்று அவர் சொல்கிறார்.

ஆலம் பேகிற்கு கொடுக்கப்படாத மரியாதையை, அவருக்கு வழங்கும் ஒரு முயற்சியே தனது புத்தகம் என்று கூறுகிறார் டாக்டர் கிம் வாக்னர். இது பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கியமான காலகட்டத்தின் கதையாகும்.

'160 ஆண்டுகளுக்கு பிறகாவது எனது முயற்சியினால் ஆலம் பேக்கின் ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கும் என நம்புகிறேன்' என்கிறார் வாக்னர்.

Image caption ஆலம் பேகின் கதையின் கடைசி அத்தியயம் இன்னும் எழுதப்படவில்லை என்கிறார் கிம் வாக்னர்.

டாக்டர் வாக்னரின் கருத்துப்படி, ஆலம் பேக்கின் சரியான பெயர் அலீம் பேக். வட இந்தியாவின் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர் அவர். வங்காள ரெஜிமென்ட்டுக்காக கான்பூரில் ஆள்சேர்க்கை செய்யப்பட்டது என்ற தகவலின் அடிப்படையில் பார்த்தால் அலீம் பேக் அந்தப் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம்.

வங்காள ரெஜிமெண்டில் இந்துக்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தாலும், 20 சதவிகித முஸ்லிம் சிப்பாய்களும் இருந்தனர்.

பேக்கின் கீழ் ஒரு சிப்பாய்க் குழு இருந்தது. முகாம்களை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த அவர், கடிதங்களை எடுத்துச் செல்லும் மற்றும் அதிகாரிகளின் உதவியாளராகவும் பணிபுரிந்தார்.

மண்டை ஓட்டுக்கு உரிய இடம்

அலீம் பேக்கை பீரங்கியால் சுட்டுக் கொன்ற நேரத்தில் அங்கு இருந்ததாக நம்பப்படும் கேப்டன் கோஸ்டெலோவின் முழுப்பெயர், ராபர்ட் ஜார்ஜ் காஸ்டெலோ.

காஸ்டெலோதான் அலீம் பேக்கின் மண்டையோட்டை பிரிட்டனுக்கு கொண்டு சென்றார் என்பதை டாக்டர் வாக்னர் ஒப்புக்கொள்கிறார். அயர்லாந்தில் பிறந்த காஸ்டெலோ பணிநிமித்தமாக 1857இல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

பத்து மாதங்களுக்குப் பிறகு ஓய்வு பெற்ற அவர், 1858 அக்டோபரில் கப்பல் மூலமாக பிரிட்டனுக்கு சென்றார். ஒரு மாத கடல் பயணத்திற்கு பிறகு அவர் பிரிட்டனின் சவுத்தாம்டன் துறைமுகத்தை அடைந்தார்.

'அலீம் பேக்கின் மண்டை ஓட்டை அவரது தாயகத்திற்கு திரும்பி அனுப்ப வேண்டும் என்பதே எனது ஆராய்ச்சியின் நோக்கம்' என்று டாக்டர் வாக்னர் கூறுகிறார்.

இதுவரை யாரும் அலீம் பேக்கின் மண்டை ஓட்டுக்கு உரிமை கோரியதாக தெரியவில்லை என்று சொல்லும் வாக்னர், தொடர்ந்து இந்திய நிறுவனங்களை தொடர்பு கொண்டு வருகிறார். இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளது.

"ஆலம் பேக்கின் மண்டை ஓட்டை திரும்பக் கொண்டு வருவதில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இதை ஒரு அருங்காட்சியகத்தின் பெட்டிக்குள் வைத்து மக்களின் நினைவை கட்டுப்படுத்தவோ, மறக்கடிக்கவோ விரும்பவில்லை".

Image caption இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவி நதியின் நடுப்பகுதியில் அலம் பேக்கின் மண்டை ஓடு புதைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

தக்க மரியாதையுடன் பிரிட்டனின் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராவி நதியின் நடுப்பகுதியில் அலம் பேகின் மண்டை ஓட்டுக்கு அவரது மத சம்பிரதாயப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்று இவர் விரும்புகிறார்.

ஏன் இந்த இடத்தை அவர் குறிப்பிட்டு சொல்கிறார்? முதல் நாள் சண்டைக்குப் பிறகு ஆலம் பேக் மற்றும் அவரது கூட்டாளிகள் இங்குதான் அடைக்கலம் நாடினார்கள். இன்று இந்த இடம் இந்தியா - பாகிஸ்தானின் எல்லைப் பகுதியாகும்.

"இறுதி முடிவு என்னுடையதாக இருக்காது," வாக்னர் கூறுகிறார். எது எப்படியிருந்தாலும், ஆலம் பேக்கின் கதையின் இறுதி அத்தியாயம் இன்னும் எழுதப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்