பிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக உரையாடிய நபர் கைது

படத்தின் காப்புரிமை AFP

பிரதமர் மோதியை கொலை செய்யப்போவதாக தொலைபேசி உரையாடலில் கூறிய நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த நபர், கோவை குனியமுத்தூர் சாரமேட்டை சேர்ந்த பழைய கார்களை விற்பனை செய்யும் வியாபாரியான முகமது ரபீக் என்பவரிடம் கார்கள் உள்ளதாகவும் 4 லட்சம் கொடுத்தால்தான் கார்கள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார் .

மேலும் ரபீக்கை நேரில் சந்தித்து பேசி , தொகையை குறித்து பேசிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பிரகாஷ், ரபீக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு அவர், தான் தமிழகத்திலேயே பெரிய ஆள் என்றும், தனியார் நிதி நிறுவனத்திடம் பணம் பறிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் கூறி உள்ளார்.

அவர்கள் இருவரும் பேசிய 8 நிமிடங்கள் கொண்ட ஆடியோ, வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடலின் இடையில், ரபீக், நாங்கள் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு உள்ளோம் என்றும் கூறியதாக தெரிகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததும், அவர்கள் அந்த ஆடியோவை பதிவிறக்கம் செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த ஆடியோவில் முகமது ரபீக் பேசும்போது "நாங்கள் தமிழகத்தில் உள்ள பல சிறைகளுக்கு சென்று வந்தவர்கள். யாருக்கும் பயப்படமாட்டோம். எந்த கொம்பனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது பிரதமர் மோடியையே கொல்ல திட்டமிட்டு உள்ளோம் ஏற்கனவே நாங்கள் அத்வானியை கொல்ல குண்டு வைத்தோம்" என்கிறார்.

தொடர்ந்து இதுவரை என் மீது 22 வழக்குகள் உள்ளன. 160 கார்களை எடுத்து உடைத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களை யாரும் கைது செய்யவில்லை என்பது போன்ற உரையாடலில் ரபீக், பிரகாசிடம் பேசியுள்ளார். இதனையடுத்து மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதற்கிடையே, ரபீக் மீது இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும்படி பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் கணேசன் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தார்.

காவல்துறை தரப்பு

பிரகாசிடம், ரபீக் பேசும்போது மோடியை கொல்ல திட்டமிட்டோம் என்று கூறி உள்ளார். ஏற்கனவே அவர் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். பின்னர் கடந்த 2007-ம் ஆண்டில் விடுதலையான நிலையில் அவர் மீது ஏராளமான வழக்குகள் இருப்பதால் கடந்த 2014-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். தற்போது பிரதமரை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறி இருப்பதால், தன்னை பெரியவன் என்று காண்பிப்பதற்காக அப்படி கூறினாரா? அல்லது உண்மையிலேயே பிரதமரை கொல்ல திட்டமிட்டு உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சேலம் போலீசார் பிரகாசிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: