"அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே..." பாடிய பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்

எம்.எஸ்.ராஜேஸ்வரி

பட மூலாதாரம், MS Rajeswasi/Facebook

குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகி எம்.எஸ் ராஜேஸ்வரி இன்று புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 85. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடலைகளை இவர் பாடியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை காலை முதுமை காரணமாக இவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.வி.எம் நிறுவனத்தின் ஸ்டூடியோ பாடகியாக வெகுகாலம் இருந்துள்ள இவர், நடிகர் கமல்ஹாசன் சிறுவனாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே..' பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவரே.

1950-களில் வெளியான திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடி பிரபலமாக தொடங்கிய எம்.எஸ் ராஜேஸ்வரி, 90-களில் வெளியான படங்கள் வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அதிக அளவிலான பாடல்களை பாடினார்.

பட மூலாதாரம், MS Rajeswasi/Facebook

துவக்கத்தில் இசையமைப்பாளர் ஆர்.சுதர்ஷனம் இசையமைப்பில் அதிகமாக பாடிய இவர், பின்னாளில் சங்கர் கணேஷ் இசையமைப்பில் அதிக அளவிலான பாடல்களை பாடியுள்ளார். தவிர ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா உள்ளிட்டவர்களது இசையமைப்பிலும் குறிப்பிடத்தக்க பாடல்களை பாடியுள்ளார்.

1960-கள் தொடங்கி 1990-கல் வரை வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் இடம்பெற்ற மழலைக்குரல் கொண்ட பாடல்களை இவர் பாடியதால், குழந்தைகளின் குரலில் பாடுவதற்கு பேர்போன பாடகியாக இவர் அறியப்பட்டார்.

நடிகை பேபி ஷாமிலி நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் இடம்பெற்ற குழந்தை பாடல்கள் அனைத்தையும் இவரே பாடியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: