சட்டவிரோத குட்கா விற்பனை: சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டிருக்கும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுவந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான அறிவிப்பை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலலிதா சட்டமன்றத்தில் வெளியிட்டார். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இருந்தபோதும், தமிழகத்தில் ரகசியமாக இந்தப் பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டுவந்தன. இந்தப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காவல்துறையால் சோதனைக்குள்ளாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தாலும், இந்தப் பொருட்கள் தமிழகத்தில் தொடர்ந்து பரவலாகக் கிடைத்துவந்தன.

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா விற்பனையாளர் மாதவ ராவ் உள்ளிட்ட பல குட்கா தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது. இதற்குப் பிறகு, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன்தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்தக் கடிதம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊடகங்களில் கசிந்தது. ஆனால், அம்மாதிரி கடிதம் ஏதும் எழுதப்படவில்லையென தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது. அதே தருணத்தில் தமிழகத்தின் புதிய காவல்துறை தலைவராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.

ஆனால், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்க முற்பட்டதாலேயே காவல்துறையின் முன்னாள் தலைவர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் என்றும் மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த விவகாரத்தில் சென்னை மாநகரத்தின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போதைய காவல்துறை தலைவர் ராஜேந்திரன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய தி.மு.க. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. தி.மு.கவின் சார்பில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இந்திரா பானர்ஜி தலைமையிலான முதலாவது அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், வருமான வரித் துறை ஒரு பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது, அந்தப் பிரமாணப் பத்திரத்தில், 2017ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது என்றும் அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கு முன்னாள் டிஜிபி அசோக் குமார், 2016 செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாகவும் அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசியக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் வருமான வரித்துறை கூறியிருந்தது.

குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை எழுதிய கடிதமே இல்லை என தமிழக அரசு கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சமயத்தில் இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் குட்காவும் மாவாவும் மிக எளிதாகக் கிடைப்பதாகக் கூறி, சில பாக்கெட்டுகளையும் எடுத்துக் காட்டினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சபாநாயகர் தடைசெய்யப்பட்ட பொருட்களை சபைக்குக் கொண்டுவரக்கூடாது என்று கூறி, விவகாரம் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு தொடக்கம் முதலே கூறிவந்தது. ஆனால், இந்த வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தில்லியில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை FACEBOOK/M.K.STALIN

அதேபோல் வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குட்கா சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் மாதவ ராவ் அமைச்சர் ஒருவருக்கு 56 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பை தி.மு.கவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார். "தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்காவை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுமதித்து, அதற்காக மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குட்கா முதலாளிகளின் டைரியிலேயே இடம்பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் இருவரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்து, முழுமையான-உண்மையான-விரைவான விசாரணை நடைபெற தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியிருக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படித்துப் பார்த்த பிறகே இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க முடியுமென மாநில மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: