நரேந்திர மோதி சீன அதிபரை இப்போது சந்திப்பது ஏன்?

  • 27 ஏப்ரல் 2018
படத்தின் காப்புரிமை Google

இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் முறைசாரா பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதை காட்டுகின்றன. இதுபற்றி ஆய்வாளர் சஷாங் ஜோஷி விளக்குகிறார்.

தொடர்ந்து மூன்று தசாப்தங்களாக இந்தியா - சீனாவிடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சனை கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் என்ற அச்சுறுத்தலை சீனா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டன. பூடானின் எல்லையில் இரு தரப்பினரும் தங்கள் ராணுவத்தை குவித்தனர்.

எட்டு மாதங்களுக்கு முன்பிருந்த பதற்ற நிலை தற்போது, இரு நாட்டு தலைவர்களும் முறைசாரா சந்திப்பை மேற்கொள்ளும் அளவுக்கு மாறிவிட்டது என்பது கனவல்ல, நனவே.

சீன நகரமான வூஹானில் நடைபெறவிருக்கும் இந்த முறைசாரா சந்திப்பு இரு நாடுகளில் எதோ ஒன்றின் தலைநகரில் நடைபெறவில்லை என்பதும், இரு தலைவர்களுடன் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, இரு நாடுகளுக்கும் இடையில் பெருகியிருக்கும் கருத்து வேறுபாடுகளை விவாதிக்க நிறைய நேரம் தேவைப்படுகிறது.

ஆனால் இந்த சந்திப்பு எதிர்பாராதவிதமாக நிகழ்கிறது என்று சொல்லமுடியாது. ஆகஸ்ட் மாதத்தில் எல்லைப் பிரச்சனைகள் தீர்ந்துவிட்ட நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கத் தலைவர்களுடன் மோதியும், ஷி ஜின்பிங்கும் கூடிப் பேசினார்கள்.

இந்திய வெளியுறவு செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் என இந்திய உயர்நிலை தலைவர்கள் பலர், சீனாவிற்கு அரசுமுறை பயணங்களை மேற்கொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திய சீன எல்லையில் இரு நாடுகளும் துருப்புகளை நிறுத்தியிருக்கின்றன

சமரசத்திற்கான வாய்ப்புகளும் கிடைத்தன. திபெத்தில் இருந்து தலாய்லாமா நாடு கடத்தப்பட்ட 60 வது ஆண்டு நிறைவை குறைக்கும் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருக்குமாறு பிப்ரவரி மாதத்தில் அரசு, இந்திய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட குறிப்பு அனுப்பியது. இந்தத் தகவல் பெய்ஜிங்கிற்கும் காதும் காதும் வைத்தாற்போல் தெரிவிக்கப்பட்டது.

தலாய்லாமாவை பிரிவினைவாதி என்று கருதும் சீனா, ஆன்மிகத் தலைவரான அவரை வெளிநாட்டுத் தலைவர்கள் சந்திக்கவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து, அவரை தனிமைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.

மார்ச் மாதம், சீன அதிபராக ஷி ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட இந்திய பிரதமர் மோதி, "சீன மக்களின் முழு ஆதரவை பெற்றவர் ஷி ஜின்பிங்" என்று பாராட்டு தெரிவித்தார்.

இதற்கான பதிலை அண்மை நாட்களில் சீனாவும் ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவித்தது. இந்தியாவுக்குள் ஓடும் நதிகளின் நீர்நிலைத் தரவுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கீழ்நீலை ராணுவப் பயிற்சிகளை மீண்டும் தொடங்குவதாகவும் சீனா கூறியது. கடந்த ஆண்டு நெருக்கடியின் போது இந்த இரண்டு நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பரஸ்பர நலன்கள்

இந்த முன்னேற்றம் இப்போது நடப்பதற்கான காரணம்? இதற்கு ஒன்றல்ல பல காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் அபாயகரமான நெருக்கடி நிலையை எட்டியது. அதோடு, 2019இல் இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் வரவிருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இவற்றைத்தவிர சீனாவின் பொருளாதாரம் இந்தியாவினுடையதைவிட ஐந்து மடங்கு பெரியது, சீனாவின் பாதுகாப்பு செலவும் மூன்று மடங்கு அதிகமானது.

எல்லைப் பகுதிகளின் பல இடங்களில் இந்தியாவுக்கு உள்ளூர் ராணுவ பலம் அதிகம் என்றாலும், முழு அளவில் வலுவடைய இன்னும் கால அவகாசம் தேவை.

இரண்டாவதாக, முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகளில் சீனாவின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என்று இந்தியா நம்புகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு அழுத்தம் கொடுப்பது, அணு ஆயுத வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் ஓர் அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (NSG) இந்தியா உறுப்பினராவதற்கு சீனாவின் உதவி தேவை.

அண்மை ஆண்டுகளில் இந்தியாவின் எழுச்சியைத் தடுக்க சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் அதிகமாவதைக் கண்டு இந்தியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர், ஆனால் மத்திய அரசோ இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும் திசையில் ஷி ஜின்பிங்கை மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை இழக்கவில்லை.

Image caption இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆன்

மூன்றாவதாக, உலக அரசியலின் உறுதியற்ற நிலைக்கு இந்தியா பதிலளிக்கும் விதத்தில் செயல்படுகிறது. வட கொரியாவின் நெருக்கடியை எதிர்கொள்ள சீனா வாஷிங்டனுடன் உறவுகளை மேம்படுத்துவதுடன், மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா உடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் சீனா மாஸ்கோவுடன் கைகோர்க்கும் என்ற கவலைகளையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தக் கண்ணோட்டத்தில் இந்தியா தனது சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் சீனாவுடனான உறவுகளை சுமுகமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

"ரஷ்யா - சீனா உறவுகள் வலுவடைவது, அதில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்கா கூர்ந்து கவனித்துவருகிறது" என்று முன்னாள் தூதர் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து இந்திய அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் தலைவருமான செயலாளர் பி.எஸ்.ராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"மற்ற இரு வல்லரசுகளுடன் நமது உறவுகளில் ஏற்படும் சுணக்கங்களை சமாளிக்கும்போதும், சீனாவுடன் இணக்கமான உரையாடலை நாம் தொடரவேண்டும்" என்கிறார் பி.எஸ்.ராகவன்.

நிச்சயமாக, சீனாவுக்கும் இதில் பல நன்மைகள் உள்ளன. சீனாவின் முக்கிய திட்டமான 'பட்டுப்பாதை' (முக்கிய பாதை மற்றும் சாலை ஊக்குவிப்பு (Belt and Road initiative) திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஒரே நாடு இந்தியா மட்டுமே. ஆசியாவிலிருந்து ஐரோப்பா வரை பாதையை நீட்டிப்பதற்கான கட்டமைப்பு வலையமைப்பு திட்டம் சீனாவின் கனவுத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

புவி அரசியல் மறுசீரமைப்பு

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்கூட அண்மையில்தான் இந்த திட்டம் பற்றி சந்தேகத்தை எழுப்பின. சீன நிறுவனங்களுக்கு எதிராக வாதாடும் இந்த நாடுகள், சிறிய நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கடன் சுமை மற்றும் பிற சிக்கல்கள், பொருளாதார நோக்கங்களைவிட அதிக சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறுகின்றன.

சீனாவின் திட்டத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு மனோநிலை இடையூறாக உள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு சந்தித்து பேசியது பற்றி கவலை கொள்ளும் சீனா, தனது முக்கிய பட்டுப்பாதை திட்டத்திற்கு மாற்றுத் திட்டத்தையும் இந்த நாடுகள் கூட்டாக முயற்சிப்பதை கண்டும் கவலை கொண்டுள்ளது.

இந்திய பிரதமருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உறவுகளை சுமூகப்படுத்துவதன் மூலம், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவை நோக்கி நகர்வதை மெதுவாக்கும் என்று ஷி ஜின்பிங் நம்புகிறார்.

இருந்தாலும்கூட, தற்போதைய ஒரு திருப்தியளிக்கும் நல்லிணக்க முயற்சி என்று கூறுவது சரியான கூற்றாக இருக்காது.

தற்போதைய பதற்றத்தை தணிப்பது ஒருபுறம் என்றால், முன்னெப்போதையும் விட வலுவான போட்டி, நிலம், ஆகாயம் மற்றும் கடல் மார்க்கமாக ஏற்படலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சீனாவும் இந்தியாவும் பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பினர்கள்

இந்தியா, பாகிஸ்தானை நோக்கிய மேற்குப் பகுதி துறைமுகத்தில் இருந்து சீனாவின் எல்லைப் பகுதியில் இருக்கும் தனது கிழக்கு பகுதிக்கு 48 மணி நேரத்திற்குள், நூற்றுக்கணக்கான விமானங்களை எப்படி கொண்டு செல்லும் என்ற மிகப்பெரிய விமானப் பயிற்சிகளை இந்தியா மேற்கொண்டு, தனது 'விமான' பலத்தை காட்டியிருக்கிறது.

3500 கிலோ மீட்டர் தூரமுள்ள எல்லைப் பகுதியில் சாலை, பாலம், ரயில் பாதை மற்றும் விமான தளங்களை கட்டமைப்பதில் அதிகளவு பணத்தையும் மனித சக்தியையும் இரு நாடுகளும் செலவிடுகின்றன.

நிலப்பகுதியில், கடந்த கோடைகாலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சை தீர்க்கப்படாமல் செயலற்று அப்படியே இருக்கிறது. இந்தியா கடந்த ஆண்டு தனது ராணுவத்தை அதிகரித்து, எல்லைப் பகுதியில் ரோந்துகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடல்வழிப் போட்டியோ மேலும் தீவிரமடைந்துள்ளது. சோமாலிய தீபகற்பத்தின் திஜிபெளட்டியில் தனது முதல் வெளிநாட்டு ராணுவ தளத்தைத் திறக்கும் சீனா, இந்தியாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் சிறிய தீவு நாடுகளில் தனது ஈடுபாட்டை அதிகரித்திருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் இந்திய பெருங்கடலில் சுற்றிவரும் சீன கடற்படை கப்பல்களை கண்காணித்துவரும் இந்தியா, அண்மையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஓமன் ஆகிய நாடுகளின் கடல் தளங்களை பயன்படுத்திக் கொள்வது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

வூஹனின் இறுக்கமற்ற சூழ்நிலைகள் இந்தியா மற்றும் சீன தலைவரின் சந்திப்பில் முக்கியமான பிரச்சனைகள் தொடர்பான ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலுக்கு இணக்கமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் பேச்சுவார்த்தைகளிலும் மென்மையான தொனியை பார்க்கமுடியும்.

ஆனால் பெருந்தன்மையான நட்புக்கு அப்பால், சக்தி மற்றும் செல்வாக்குக்கான இந்த மூலோபாய போட்டி மென்மையாகுமா என்பது கேள்விக்குறியே!

இந்தியா-சீனா பிரச்சனை: ஓர் எல்லை கிராமத்தின் பார்வையில்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: