காவிரி விவகாரம்: கூடுதல் அவகாசம் கேட்கும் மத்திய அரசு

  • 27 ஏப்ரல் 2018
படத்தின் காப்புரிமை Getty Images

காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்தைவிட கூடுதலாக இரண்டு வார காலம் அவகாசம் கோரியுள்ளது.

வரைவுத் திட்டத்தை தாங்கள் இன்னும் தயார் செய்யவில்லை என்று கூறி மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மே 3-க்குள் வரைவு செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு நீதிமன்றத்திடம் கூடுதல் கால அவகாசம் கோருவதற்கான மனுவை தாக்கல் செய்யவும், உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு இன்று அனுமதி வழங்கியது.

படத்தின் காப்புரிமை AFP

நீதிமன்றம் அனுமதி வழங்கியபின் மத்திய அரசால் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இடம்பெற்றுள்ள `ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவும், காவிரி தொடர்பாக கர்நாடகம் மற்றும் புதுச்சேரியின் மனுவும் ஏப்ரல் 9 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு, எங்களது இறுதி தீர்ப்புடன் இணைந்துவிட்டது என்று கூறிய நீதிமன்றம், மே 3 ஆம் தேதி மத்திய அரசு வரைவு செயல்திட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

வரும் மே 3 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கூடுதல் அவகாசம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: