காதலிக்க நேரமுண்டு! பெங்களூரு சாலை நெரிசல் நகைச்சுவையா? தேர்தல் பிரச்சினையா?

படத்தின் காப்புரிமை MANJUNATH KIRAN

நீங்கள் தற்போது செய்யும் பணியை, தற்போதுள்ள நகரத்திலேயே செய்ய, இரட்டிப்பான சம்பளத்தை வேறொரு நிறுவனம் அளித்தால், நீங்கள் அந்தப் பணியை ஏற்றுக்கொள்ள யோசிக்க மாட்டீர்கள். ஆனால், பெங்களூருவாசிகள் சற்று யோசித்தே இந்த முடிவை எடுக்கிறார்கள்.

காரணம், அவர்களுக்கு அந்த பணியைவிட, அந்த நிறுவனம் அமைந்துள்ள இடமும், பயண நேரமும் முக்கியமானது.

ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் சரோஜா கௌடா கூறுகையில், "பல மணிநேரங்களாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலையை ஏற்க முடியாமல் பணியிலிருந்து விலகிய நண்பர்கள்கூட எனக்கு இருக்கிறார்கள்," என்கிறார்.

இந்தியாவின் "சிலிக்கான் பள்ளத்தாக்கு" என்று பெருமையாக அழைக்கப்படும் பெங்களூரு நகரில் 1500க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன.

தினமும் வீட்டிலிருந்து பணிக்கு சென்று திரும்ப சரோஜாவுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் ஆகிறது. பெங்களூருவின் எலக்டிரானிக் நகருக்குச் செல்வதற்கான பாதையான சில்க் சாலையின் போக்குவரத்து நெரிசலில், இவரைப்போல நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கிக்கொள்கின்றனர்.

இந்த பகுதியில், வாகனங்கள் 4.5கி.மீ வேகத்தில் மட்டுமே செல்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதைப்பார்க்கும்போது, இந்த நகரம் ஆண்டுதோறும் 250 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் கழிக்கிறது என்று கூறினால் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. அப்பெடியென்றால், இங்குள்ள ஐ.டி ஊழியர்கள் இந்த நெரிசலை எப்படி சமாளிக்கிறார்கள்?

சிலர் நெரிசலில் சிக்கியுள்ள நேரத்திலேயே மடிக்கணினியில் பணிகளை செய்யத்தொடங்குகிறார்கள். மற்றவர்கள், நெரிசலில் தனியாகப் பயணிப்பதை தவிர்க்க நண்பகளுடன் இணைந்து பயணிக்கிறார்கள். சரோஜாவைப் பொருத்தவரையில், அவர் காரினுள் ஏறியவுடனேயே அவரது அலுவலகப் பணிகள் தொடங்கிவிடுகின்றன.

படத்தின் காப்புரிமை TWITTER

"என்னுடைய பொன்னான நேரங்களாவது வீணாகாமல் உள்ளன. அலுவலகத்தை சென்றடைவதற்கு முன்பாகவே எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் இந்த நெரிசல் என்னை சோர்வடைய வைக்கிறது. இந்த சத்தம், மாசு மற்றும் எரிச்சல் என்னுடைய திறன அழித்துவிடுகின்றன. பணியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் சோர்வாக உணர்கிறேன்," என்கிறார் அவர்.

இந்த பிரச்சினைகளை உணர்ந்து சில நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அருகிலேயே தங்குமிடங்கள் அளிப்பதோடு, சில நேரங்களில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன.

பெங்களூருவின் மெட்ரோ ரயில்களும் இதற்கு நல்ல தீர்வினை அளிக்கவில்லை. அவை சில்க் சாலை வரை நீள இன்னும் 3-4 ஆண்டுகள் ஆகும் என்கிறது நிர்வாகம்.

இந்தக் குழப்பங்களில் ஒரு வியாபார வாய்ப்பு இருப்பதைப் பார்த்த விமான நிறுவனங்கள். விமான நிலையத்திலிருந்து, எலக்ட்ரானிக் நகருக்கு சமீபத்தில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது தம்ப்பி நிறுவனம்.

இந்த ஹெலிகாப்டர்களில் 6 பேர் வரை பயணிக்க முடியும். கட்டணம், ரூ3,500.

இந்த நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு அதிகாரியான கோவிந்த் நாயர், தங்களின் இலக்கு ஐ.டி ஊழியர்களே என்கிறார். "புதிய சிந்தனைகளையும், வழிவகைகளையும் வரவேற்கும் நகரமாக பெங்களூரு உள்ளது. சராசரியாக ஒருவர் விமானநிலையத்திற்கு செல்ல 1000 முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்வதோடு, 2-3 மணிநேரங்களையும் இழக்கிறார். ஆனால், இத்தகைய சேவையால், அவருக்கு அந்த பொன்னான நேரம் பயனுள்ளதாக மாறுகிறது".

இந்தப் போக்குவரத்து நெரிசலை நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்கிறது ஒரு குழு!

படத்தின் காப்புரிமை TWITTER

இந்த சில்க் சாலை சந்திப்பின் போக்குவரத்து நெரிசலை விளக்குமாறு ஒரு இளைஞரிடம் கேட்டேன். அதற்கு அவர் எனக்கு ஒரு நகைச்சுவையை கூறினார்.

"ஒருமுறை, சமூக வலைத் தளத்தில் பெங்களூருவாசி ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்த பெங்களூருவில் சிறந்த இடத்தை பரிந்துரைக்குமாறு அவர் கேட்டார். அதற்கு வந்த பதிலில், தங்களின் காதலியை சில்க் போர்ட் சந்திப்பிற்கு அழைத்து சென்று காதலைக்கூறுங்கள். காதலைச் சொல்ல மட்டுமல்ல அல்ல, திருமணத்தை முடிக்குமளவிற்கு உள்ளங்களுக்கு நேரமிருக்கும் என்றார்!"

படத்தின் காப்புரிமை Empics

@silk_board என்ற டிவிட்டர் ஹேண்டிலில் இந்தச் சாலையின் போக்குவரத்து நெரிசல் குறித்த பல நகைச்சுவைகள் உள்ளன.

இது ஒருபுறம் இருந்தாலும், பெங்களூரு மக்களுக்கு, போக்குவரத்து நெரிசல் என்பது நகைச் சுவைக்கான விஷயமல்ல. இந்த முறை வாக்களிக்கும்போது அவர்கள் இந்த கட்டமைப்பு வசதிகளை முக்கியமாக கருத்தில் வைத்திருப்பார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: