ஒளரங்கசீப் இந்துக்களை வெறுத்தது உண்மையா?

ஒளரங்கசீப் படத்தின் காப்புரிமை Penguin India

முகலாய பேரரசர்களில் பலர் இந்திய மக்களின் மனதில் இடம்பெற்றிருந்தாலும், ஔரங்கசீப் மட்டுமே விதிவிலக்காக விளங்கினார். இந்துக்களை வெறுப்பவர், மத வெறியன், கொடூரமான அரசன், அரசியல் நோக்கத்திற்காக அண்ணன் தாரா ஷிகோஹ்க்கு துரோகம் செய்தவர் என்று கருதப்படுகிறார் ஒளரங்கசீப்.

வயோதிகரான தனது தந்தையை அவர் இறக்கும்வரை சுமார் ஏழரை ஆண்டுகள் வரை ஆக்ராவின் கோட்டையில் சிறை வைத்தார். ஒளரங்கசீப் தனது அண்ணன் தாராவை தோற்கடித்த போதே, இந்தியாவில் பிரிவினைக்கான விதைகள் விதைக்கப்பட்டதாக அண்மையில் பாகிஸ்தானிய நாடக கலைஞர் ஷாஹித் நதீம் எழுதியிருந்தார்.

1946 இல் ஜவஹர்லால் நேரு எழுதிய 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா' என்ற புத்தகத்தில் ஒளரங்கசீப் கடுமையானவர் மற்றும் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கருத்து தவறானது என்று மறுக்கிறார் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி ட்ரஷ்கே. தமது 'ஒளரங்கசீப்-தி மேன் அண்ட் தி மித்' (Aurangzeb: The Man and the Myth) என்ற புத்தகத்தில், இந்துக்களின் மீது கொண்ட வெறுப்பால்தான் ஒளரங்கசீப் ஆலயங்களை அழித்ததாக கூறுவது தவறு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நேவார்க் ரூட்ஜர்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ஆண்ட்ரி ட்ரஷ்கே, ஒளரங்கசீப் மீதான இதுபோன்ற கருத்துகளுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களே காரணம் என்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொள்கையின்படி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு வரலாற்றாசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிகாலம் 20 ஆண்டுகள் குறைவாக இருந்திருந்தால் நவீன வரலாற்றாசிரியர்கள் அவருடைய வரலாற்றை வித்தியாசமாக புரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே.

படத்தின் காப்புரிமை Penguin India

ஒளரங்கசீப்பின் 49 ஆண்டு ஆட்சிக்காலம்

15 கோடி மக்களை 49 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் ஒளரங்கசீப். அவரது ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய இந்திய துணைக்கண்டம் முழுவதுமே முகலாய ஆட்சியின் கீழ் இருந்தது.

மகாராஷ்டிராவின் குல்தாபாத் நகரில் ஆடம்பரம் ஏதும் இல்லாமல் எளிமையான கல்லறையில் ஒளரங்கசீப் புதைக்கப்பட்டார் என்கிறார் ட்ரஷ்கே. இதற்குமாறாக, அரசர் ஹுமாயூனுக்காக செந்நிற கற்களால் அழகான கல்லறை டெல்லியில் கட்டப்பட்டது. அதேபோல் ஷாஜகான் ஆடம்பரமாக கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டார்.

'ஒளரங்கசீப் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை சிதைத்தார் என்பது தவறு. அவர்களது நேரடி கட்டளையால் உடைக்கப்பட்ட ஆலயங்களின் எண்ணிக்கை ஒரு டஜனைத் தாண்டாது. இந்துக்களின் விரோதி என அழைக்கப்பட்ட அவரது ஆட்சியின்போது உண்மையில் இந்துக்களுக்கு எதிராக பெரிய கொடுமைகள் எதுவும் நடக்கவில்லை. உண்மையில், முக்கியமான அரசுப் பதவிகளில் இந்துக்களை பணியமர்த்தினார் ஒளரங்கசீப்' என்கிறார் ட்ரஷ்கே.

வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் ஒளரங்கசீப்

1618 நவம்பர் மூன்றாம் தேதியன்று டாஹோட் என்ற இடத்தில் ஒளரங்கசீப் பிறந்தபோது இந்தியாவின் பேரரசாராக இருந்தவர் அவரது தாத்தா ஜஹாங்கீர். ஷாஜகான் - மும்தாஜ் தம்பதியரின் நான்கு மகன்களின் மூன்றாவது மகன் ஒளரங்கசீப்.

இஸ்லாமிய இலக்கியங்களிலும், துருக்கிய இலக்கியங்களிலும் விருப்பம் கொண்ட ஒளரங்கசீப், கையெழுத்துப் பிரதிகளை எழுதுவதில் சிறந்தவர்.

படத்தின் காப்புரிமை Penguin India

ஷாஜகானின் நான்கு மகன்களுக்கிடையே சிம்மாசனத்திற்கான போட்டி சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. அரசியல்ரீதியான பதவிகளுக்கு அனைத்து வாரிசுகளுக்கும் சமமான உரிமை இருப்பதாக மத்திய ஆசியாவில் அந்தக் காலத்தில் கருதப்பட்டது.

ஷாஜகான் தனது மூத்த மகன் தாரா ஷிகோஹ் அரசனாக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், தந்தைக்கு பிற்கு இஸ்லாமிய அரசின் பொறுப்பை ஏற்க தன்னைவிட வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று கருதினார் ஒளரங்கசீப்.

தாரா ஷிகோஹ்வின் திருமணத்திற்குப் பின்னர், சுதாகர் மற்றும் சூரத் சுந்தர் என்ற இரண்டு யானைகளுக்கு இடையே போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ஷாஜகான் என்று ஆண்ட்ரி ட்ரஷ்கே ஒரு சுவராஸ்யமான சம்பவத்தை குறிப்பிடுகிறார்.

யானைகளை மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது முகலாயர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. போட்டியின்போது குதிரையில் அமர்ந்திருந்த ஒளரங்கசீப்பை நோக்கி கோபத்துடன் திரும்பியது சுதாகர் என்ற யானை. தன்னருகில் வந்த சுதாகரின் நெற்றியில் ஈட்டியால் தாக்கினார் ஔரங்கசீப். இதனால் யானையின் சீற்றம் இன்னும் அதிகமாகி, தும்பிக்கையை சுழற்றியது.

தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் இடையில் விரோதம்

யானை மோதிய வேகத்தில் குதிரையில் அமர்ந்திருந்த ஔரங்கசீப் நிலத்தில் வீழ்ந்தார். போட்டியை பார்க்க அங்கு கூடியிருந்த ஒளரங்கசீப்பின் சகோதரர் ஷுஜா மற்றும் ராஜா ஜெய்சிங் உட்பட பலர் ஔரங்கசீப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மற்றொரு யானையான ஷ்யாம் சுந்தர், தனது போட்டியாளரான சுதாகரிடம் சண்டைக்கு வந்ததால் அதன் கவனம் திரும்பிவிட்டது.

மீண்டும் யானைகளுக்கு இடையிலான சண்டை தொடங்கியது. சீற்றம் மிகுந்த யானை தாக்கினாலும், அச்சமின்றி அதனை ஈட்டியால் தாக்கிய ஒளரங்கசீப்பின் தீரம் அனைவராலும் பேசப்பட்டது. ஷாஜகானின் அரசவைக் கவிஞர் அபூ தாலிப் கான் இந்த சம்பவத்தை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மற்றொரு வரலாற்றாசிரியர் அகில் கான் ரஜி, தனது 'வகீயத்-ஏ-ஆலம்கிரி' என்ற புத்தகத்தில், பலர் ஒளரங்கசீப்பை காப்பாற்ற முயன்றபோதிலும், அண்ணன் தாரா ஷிகோஹ், தம்பியை காப்பாற்ற எந்தவித முயற்சிகளையும் செய்யவில்லை என்பதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஷாஜகானின் அரசவை வரலாற்றாசிரியரும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டிருக்கிறார். 1610ஆம் ஆண்டு ஷாஜகான் தனது தந்தை ஜாஹாங்கீரின் முன்னிலையில் பயங்கரமான சிங்கத்தை கட்டுப்படுத்திய சம்பவத்துடன், ஒளரங்கசீப்பின் செயலை அவர் ஒப்பிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Penguin India

மற்றொரு வரலாற்றாசிரியரான கேத்தரீன் பிரவுன், 'டிட் ஒளரங்கசீப் பேன் மியூசிக்' ('Did Aurangzeb ban music?') என்ற தனது புத்தகத்தில் ஒளரங்கசீப்பின் காதலைப் பற்றி சொல்கிறார். தனது அத்தையை சந்திக்க புர்ஹான்பூருக்குச் சென்றிருந்த ஒளரங்கசீப், பாடகியும், நடனக் கலைஞருமான ஹீராபாயை அங்கு சந்தித்தார்.

மரத்தில் இருந்து மாங்காய் பறித்துக் கொண்டிருந்த ஹீராபாயை பார்த்ததுமே காதல் கொண்டார் ஔரங்கசீப். ஒளரங்கசீப்பின் காதல் எந்த அளவு இருந்தது என்பதை குறிப்பிடும் சம்பவத்தையும் கேத்தரீன் பிரவுன் குறிப்பிடுகிறார். மது அருந்தக்கூடாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை ஹீராபாயின் வார்த்தைக்காக மீறத் தயாரானார் ஒளரங்கசீப். ஆனால், மது அருந்தும் சமயத்தில் வேண்டாம் என்று ஹீராபாய் தடுத்துவிட்டார். ஆனால் ஒளரங்கசீப்பின் காதல் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஓராண்டிலேயே ஹீராபாய் இறந்துவிட, காதல் அத்தியாயம் முடிந்துபோக, ஒளரங்கசீப் அரசியலில் தீவிரமாக இறங்கினார். ஹீராபாய் ஔரங்காபாத்தில் புதைக்கப்பட்டார்.

தாரா ஷிகோஹ் அரசாராயிருந்தால்?

இந்திய வரலாற்றில் இருக்கும் மாபெரும் கேள்வி என்ன தெரியுமா? ஆறாவது முகலாய பேரரசரசராக கொடுங்கோல் ஔரங்கசீப்பிற்கு பதிலாக மிதவாதியும், அரியணைக்கு உரியவர் என்று கருதப்பட்ட மூத்த வாரிசுமான தாரா ஷிகோஹ் அரியணை ஏறியிருந்தால் என்ன நடந்திருக்கும்?

இதற்கு பதிலளிக்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே. "உண்மையில் முகலாய பேரரசை வழி நடத்தும் வலிமையோ, திறமையோ அற்றவர் ஷிகோஹ். சிம்மாசனத்திற்காக சகோதரர்கள் நால்வரும் மோதிக்கொண்டாலும், தந்தையின் ஆதரவு மூத்த மகன் தாரா ஷிகோஹ்க்கே இருந்தது. ஆனால், ஒளரங்கசீப்புக்கு இருந்த அரசியல் அறிவும், விவேகமும், விரைந்து செயல்படும் திறமையும் வேறு யாரிடமும் இல்லை."

படத்தின் காப்புரிமை Twitter
Image caption 'ஒளரங்கசீப்- த மேன் அண்ட் த மித்' புத்தகத்தை எழுதிய அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி ட்ரஷ்கே

ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஒளரங்கசீப்பும் அவரது தம்பி முராத்தும் இணைந்து 1658ஆம் ஆண்டு ஆக்ரா கோட்டையை சுற்றி வளைத்து முற்றுகை இட்டனர். அப்போது அரசரும், அவர்களின் தந்தையுமான ஷாஜகான் கோட்டையின் உள்ளே இருந்தார். கோட்டைக்குள் நீர் விநியோகம் முதலில் நிறுத்தப்பட்டது. வேறு வழியில்லாமல் முற்றுகையிடப்பட்ட சில நாட்களிலேயே, ஷாஜகான் கோட்டை மற்றும் பொக்கிஷங்களையும், ஆயுதங்களையும் இரண்டு மகன்களிடமும் ஒப்படைத்துவிட்டார்.

தனது மகளை மத்தியஸ்தராக நியமித்த ஷாஜகான், முகலாய பேரரசை ஐந்தாக பிரித்து நான்கு மகன்களுக்கும் தலா ஒரு பகுதியையும், எஞ்சிய ஐந்தாவது பாகத்தை ஒளரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தானுக்கும் கொடுக்கவேண்டும் என்று சமாதானம் பேசினார். ஆனால் ஒளரங்கசீப் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

தாரா ஷிகோஹ்வின் நம்பிக்கைக்கு உரிய மாலிக் ஜீவன் என்பவரைக் கொண்டே 1659ஆம் ஆண்டில் அண்ணனைக் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தார் ஒளரங்கசீப். தாரா ஷிகோஹ் மற்றும் அவரது 14 வயது மகன் சிஃபிர் ஷுகோஹை சங்கிலியில் பிணைத்து அரிப்பு நோயால் பாதிக்கப்பட்ட யானையில் அமரவைத்து டில்லியின் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்தார்.

தந்தையின் சிறையில்...

தப்பித்து ஓட முயன்றால், அவரது தலையை வெட்டி விடுவதற்காக கையில் வாளுடன் அவர்களை ஒரு சிப்பாய் பின் தொடர்ந்தார். அந்த சமயத்தில் இந்திய பயணம் வந்திருந்த இத்தாலிய வரலாற்றாசிரியர் நிகோலாய் மானுசி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். "தாராவுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் தினத்தன்று ஒளரங்கசீப் அவரிடம், 'நம் இருவரின் நிலையும் மாறி, நீ இப்போது அரசனாக இருந்தால் என்னை என்ன செய்வாய் என்று கேட்டார். அதற்கு கேலியாக பதிலளித்த தாரா, உன்னைக் கொன்று உடலை நான்கு துண்டாக வெட்டி, டெல்லியின் நான்கு பிரதான வாயில்களின் கதவுகளில் தொங்கவிடுவேன்" என்று பதிலளித்தார்".

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption புது டெல்லியில் ஹுமாயூன் கல்லறை

ஹுமாயூன் கல்லறைக்கு அருகில் அண்ணன் தாராவின் உடலை அடக்கம் செய்தார் ஒளரங்கசீப். அண்ணனுடன் பகைமை பாராட்டினாலும், பிறகு தனது மகள் ஜப்தாதுன்னிசாவை தாராவின் மகன் சிஃபிர் ஷுகோஹ்க்கு திருமணம் செய்து வைத்தார் ஔரங்கசீப்.

ஒளரங்கசீப் தனது தந்தை ஷாஜகானின் இறுதி காலத்தில் சுமார் ஏழரை ஆண்டுகள் ஆக்ரா கோட்டையில் சிறையில் வைத்திருந்த சமயத்தில் அவருடைய மூத்த மகள் ஜஹானாரா தினமும் அங்கு விளக்கு ஏற்றும் பணியை செய்யுமாறு பணித்திருந்தார்.

தந்தையை சிறையில் வைத்திருந்த ஒளரங்கசீப்பை, இந்தியாவின் நேர்மையான ஆட்சியாளராக ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கா மசூதியின் ஷரீஃப், இந்திய அரசர் என்ற முறையில் அவர் அனுப்பிய பொருட்களை ஏற்றுக் கொள்ள பல ஆண்டுகள்வரை நிராகரித்துவிட்டார். இது ஒளரங்கசீப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

ஒளரங்கசீப்பின் கடிதங்கள்

1679ஆம் ஆண்டில் டெல்லியில் இருந்து தென்னிந்தியாவுக்குச் சென்ற ஒளரங்கசீப் பிறகு வட இந்தியாவிற்கு திரும்பி வரவேயில்லை. அரசருடன் ஆயிரக்கணக்கான மக்களும், அவரது குடும்பத்தினரும் தென்னிந்தியாவுக்கு சென்றனர். அவர்களின் இளவரசர் அக்பர் (ஒளரங்கசீப்பின் மகன்) தவிர வேறு முக்கியமான பிரமுகர்கள் யாரும் டெல்லிக்கு திரும்பி வரவில்லை.

ஒளரங்கசீப் இல்லாதபோது டெல்லி பாழடைந்த நகரம் போல் காணப்பட்டது அரசரின் மாளிகை (தற்போதைய செங்கோட்டை) சரியாக பராமரிக்கப்பட்டாமல், குப்பையும் கூளமுமாக இருந்ததால், வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகைதந்த முக்கிய பிரமுகர்களுக்கும்கூட செங்கோட்டை காட்டப்படாமல் தவிர்க்கப்பட்டது!

படத்தின் காப்புரிமை Getty Images

தென்னிந்தியாவில் இருக்கும்போது வட இந்தியாவில் இருந்தது போன்ற மாம்பழங்கள் கிடைக்கவில்லை என்று, தான் எழுதிய 'ருகாத்-ஏ-ஆலம்கிரி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஔரங்கசீப். ஒளரங்கசீப்பின் இந்த புத்தகத்தை மொழிபெயர்த்தவர் ஜம்ஷீத் பிலிமோரியா.

பாபர் முதல் அனைத்து முகலாய பேரரசர்களுக்கும் மாம்பழம் மிகவும் விருப்பமான பழம். ஔரங்கசீப் தனது அதிகாரிகளுக்கு எழுதும் கடிதத்தில் வட இந்தியாவில் இருந்து மாம்பழங்களை அனுப்பவும் என்று உத்தரவிட்டு கடிதங்களை அனுப்புவார் என்று ஆண்ட்ரி ட்ரஷ்கே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சில மாம்பழங்களுக்கு சுதாரஸ், ரஸ்னபிலாஸ் போன்ற பெயர்களையும் சூட்டியிருக்கிறார் மாம்பழப் பிரியர் ஔரங்கசீப்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒளரங்கசீப்பின் கல்லறை

தனது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் ஔரங்கசீப் தனது மனைவி உதய்புரியுடன் இருந்தார். உதய்புரி ஜோத்பூரை சேர்ந்தவர். இருவருக்கும் மிகவும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. இந்த தம்பதிகளின் மகன் தான் ஒளரங்கசீப்பின் கடைசி மகன் காம்பக்‌க்ஷ். உதய்புரி சிறந்த பாடகி. மரணப்படுக்கையில் இருந்தபோது, காம்பக்‌க்ஷ்க்கு ஒளரங்கசீப் எழுதிய கடிதத்தில், தான் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தன்னுடன் இருக்கும் உதய்புரி, தனது மரணத்தின்போதும் தன்னுடனே இருப்பார் என்று உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டிருந்தார் ஒளரங்கசீப்.

ஒளரங்கசீப் மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே கணவன் மறைந்த சில மாதங்களிலேயே அதாவது 1707ஆம் ஆண்டில் கோடைக்காலத்தில் உதய்புரியும் இறந்தார். ஒளரங்கசீப்பின் கணக்கு எப்போதும் தப்பவேயில்லை என்பதற்கு இதுவொரு இறுதி உதாரணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்