மெரினாவில் விவசாயிகள் போராட்டம் நடத்த இடைக்கால தடை

மெரினா படத்தின் காப்புரிமை AFP

காவிரி மேலாண்மனை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயி அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், சனிக்கிழமை(ஏப்ரல் 28) மாலை தனிநீதிபதி ராஜா, மெரினாவில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி அளித்தார்.

போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சிலமணிநேரத்தில், தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.

தமிழக அரசின் மனுவை அவசர வழக்காக நீதிபதிகள் மணிகுமார் மற்றும் பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு விசாரித்ததில், போராட்டம் நடத்த தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலதடை விதித்தது.

மெரினாவில் போராட்டம் நடத்த ஒரு அமைப்பினருக்கு அனுமதி அளித்தால் பலரும் அனுமதி கேட்பார்கள் என்றும் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அரசு தெரிவித்தது.

மேலும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, காயீதே மில்லத் கல்லூரியின் பின்புறம் மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகிய மூன்று இடங்களில் ஒரு இடத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொள்வதில் அரசுக்கு ஆட்சபனை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மெரினாவில் போராட்டம் நடத்த அளிக்கப்பட்ட அனுமதிக்கு இடைக்காலத் தடை விதித்தினர்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்ததீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மார்ச்29ம் தேதி கெடு விதித்திருந்தபோதும், வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்திவந்தனர்.

அதன்தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு வறட்சி நிவாரம் கோரி தலைநகர் டெல்லியில் ஒரு மாத காலம் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, இந்த ஆண்டு காவிரி விவகாரத்தில் நடவடிக்கை கோரி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக பிபிசிதமிழிடம் பேசிய விவசாயி அய்யாக்கண்ணு,''தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்தியஅரசை வலியுறுத்த நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டுவதை விட, விவசாயிகள் போராட்டம் நடத்துவதை தடுப்பதில் அதிகதீவிரம் காட்டுகிறது. இடைக்காலதடையை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.'' என்றார்.

மேலும், விவசாயிகளின் தோழன் என்று கூறும் தமிழகஅரசாங்கம், காவிரி விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதாக கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்