தமிழகத்தின் வறண்ட பூமியை சோலைவனமாக்கிய பஞ்சாப் விவசாயிகள்

வறண்டு போன பாலை வனத்தை இயற்கை முறை விவசாயத்தில் கிளிகள் கொஞ்சும் சோலை வனமாக மாற்றியுள்ளார்கள் பஞ்சாப் விவசாயிகள். இவர்களிடம் பழங்களை நம்பி வாங்கலாம் என்கின்றனர் பொது மக்கள்.

பஞ்சாபி விவசாயிகள்

இந்தியாவில் உள்ள ஒன்பது ஜோதிலிங்கங்களில் முக்கியமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில். அதுமட்டுமின்றி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ராமேஸ்வரமும் ஒன்று என்ற பெருமையும் உண்டு.

அதே நேரத்தில் தமிழத்தில் வறட்சிக்கு பெயர் போன மாவட்டமும் ராமநாதபுரம்தான். அரசு அலுவலகங்களில் சரியாக வேலை செய்யாத அதிகாரிகளை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றி விடுவோம், அதாவது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றி விடுவதாக உயர் அதிகாரிகள் சொல்வது வழக்கம்.

இவ்வளவு பெருமைகளை கொண்ட இந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் கோவிலுக்கு 2007ஆம் ஆண்டு யாத்ரீகர்களாய் வந்தவர்கள்தான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங் மற்றும் தர்ஷன்சிங் ஆகிய இருவரும்.

சுவாமி தரிசனத்திற்குப் பிறகு ஊர்திரும்பும் வழியில் இவர்கள் கண்களில் பட்டது இந்த காஞ்சு போன வறண்ட பூமி. வற்றாத ஐந்து நதிகளைக்கொண்டு எப்போதும் முப்போகம் விளைவிக்கும் தங்களின் தாய் பூமியை கண்ட இருவருக்கும், மக்கள் குடிநீருக்கே வழியின்றி தவித்து வரும் இந்த மாவட்டத்தில் விவசாயம் செய்து இயற்கை வேளாண்மையை ஊக்கு விக்க வேண்டும் என்பதை ஒரு வைராக்கியமாக கொண்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.

பழத்தோட்டம் எப்படி உருவாகியது?

முதலில் இப்பகுதியில் விவசாயத்திற்கென சொந்தமாக நிலம் வாங்க முடிவு செய்தனர். நிலத்தின் விலை மதிப்பு பஞ்சாப்பைக் காட்டிலும் இங்கு மிக குறைவாக இருந்தது இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. கமுதி அருகே உள்ள வல்லந்தை என்ற கிராமத்தில் முட்புதர்களால் மண்டியிருந்த உள்ளூர் விவசாயிகளால் புறக்கணிப்பட்ட 800 ஏக்கர் நிலத்தை சொந்தமாக விலைக்கு வாங்கி தங்களின் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் அந்த நிலத்திற்கு பசுமையான மறு வடிவம் தந்தனர்.

இவர்களுக்கு உறுதுணையாக, அவர்களின் உறவினற்களான இருபது நபர்களைக் கொண்ட ஐந்து குடும்பங்களை விவசாயம் செய்ய அழைத்துக் கொண்டனர்.

அதன் பிறகு அவர்களின் கடின உழைப்பால் இரவு பகல் உறக்கமின்றி வறண்டு காணப்பட்ட இந்த பாலைவனத்தை சோலைவனமாக மாற்றத் தொடங்கினர். தாங்கள் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தில் முதலில் நான்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் 150 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் மட்டும் தென்னை, மா, பலா, கொய்யா,சப்போட்டா, பப்பாளி, சீத்தா முந்திரி உள்ளிட்ட பழவகைகளையும் அவற்றின் ஊடு பயிராக நெல்லி, தர்பூசணி,வெள்ளரி,வெங்காயம் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளையும் இத்துடன் தேனீக்களை வளர்த்து தேன் உற்பத்தியையும் செய்ய தொடங்கினர்.

இந்த விவசாயத்திற்கு தேவையான உரங்களை தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளின் சாண கழிவுகளை கொண்டு முற்றிலும் இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்ய தொடங்கினர்.

இங்கு விளையும் பழங்கள் எங்கு கிடைக்கும்?

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த அருகிலுள்ள கமுதி,முதுகுளத்தூர், வீரசோழன் மற்றும் பார்த்திபனூர் ஆகிய ஊர்களில் நடைபெரும் வாரச்சந்தைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மக்கள் பயன் பெறச்செய்தனர்.

தற்போது விளைவிக்கப்ட்ட இமாம்பசந்த், அல்போன்ஸா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழ வகைகள் சுவை அதிகமாக இருப்பதால் சுற்றுவட்டார பொதுமக்கள் இவர்களின் தோட்டத்திற்க்கு நேரடியாக வந்து விரும்பி வாங்கிச் செல்வதுடன், இந்த சுவை மிகுந்த பழங்களை வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் உறவினர்களுக்கு பார்சல் செய்து அனுப்பி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு அரசு என்ன செய்தது?

வறண்ட பூமியை வளமாக்கிய இவர்களின் கடின உழைப்பிற்கு பரிசளிக்கும் வகையில் இம்மாவட்ட நிர்வாகம் சூரியஒளி மின்உற்பத்தி திட்டம், இயற்கை உரம் தயாரித்தல் ஆகியவற்றிற்கு தேவையான முழு மானிய கடனுதவி வழங்கி்யும், மரக்கன்றுகள் வழங்கியும் ஊக்கமளித்து வருகிறது.

இம்மண்ணில் இவர்களுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த பலனாக மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி என்ற இடத்தில் மற்றுமொறு 800 ஏக்கர் நிலங்கள் வாங்கி விவசாயத்திற்கு இவர்கள் தயாராகி வருகின்றனர்.

வல்லந்தை பகுதியில் தங்கி விவசாயம் செய்து வரும் பஞ்சாபி குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தங்குமிடம், வழிபாட்டுத்தலம், சூரிய ஒளி மின்வசதி, உணவு மற்றும் மருத்துவ வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்டு உள்ளூர்வாசி போலவே வாழ்ந்து வருகின்றனர்.

தரிசு நிலத்தில் விவசாயம்

இயற்கை விவசாயத்தில் அசத்தி வரும் தர்சன்சிங் பிபிசியிடம் பேசிய போது, "தமிழ்நாட்டில் தரிசு நிலம் அதிகமாக உள்ளது. 2007ஆம் ஆண்டில் இங்கு இடம் வாங்கி சுத்தம் செய்து மாம்பழ வகைகளான பங்கனப்பள்ளி, அல்போன்ஸா, போன்ற மரங்களை வளர்த்தோம். வந்த புதிதில் மொழி புரியாது இருந்தது. மேலும், தண்ணீர் கஷ்டமும் அதிகம் இருந்தது" என்று கூறினார்.

இவர்களிடம் நம்பி பழம் வாங்கலாம் என்று கூறுகிறார் இவர்களிடம் வருடா வருடம் மாம்பழம் வாங்க வரும் ஜுவதீன்.

"மற்ற இடங்களை விட விலை கம்மியாகவும், சுவை நன்றாகவும் இருக்கிறது. இவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது" என்கிறார் பரமக்குடி தாலுக்காவில் இருந்து பலாபழம் வாங்க வந்த பிரகதீஷ்.

நம்முடைய நிலங்களின் வளத்தை நம் விவசாயிகள் அறியாத நிலையில், 3300 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலிருந்து வந்த நம் பஞ்சாபிய சகோதரர்கள் தங்களின் உழைப்பை விதைத்து பலனை அறுவடை செய்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :